வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 44 – எண்ணப் பதிகம் - 1

இறைவனைப் பற்றிய அன்பரின் மனக்கருத்தை எடுத்துரைக்கும் பாடல்கள் இவை. பதிகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதில் ஆறு பாடல்கள் மட்டுமே உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

News image
Updated On :4 மார்ச் 2016, 8:40 am

என். சொக்கன்

இறைவனைப் பற்றிய அன்பரின் மனக்கருத்தை எடுத்துரைக்கும் பாடல்கள் இவை. பதிகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதில் ஆறு பாடல்கள் மட்டுமே உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

243

பாடலின்பம்

பார்உருவாய பிறப்புஅறவேண்டும், பத்திமையும் பெறவேண்டும்,
சீர்உருவாய சிவபெருமானே, செங்கமல மலர்போல
ஆர்உருவாய என் ஆர்அமுதே, உன் அடியவர் தொகைநடுவே
ஓர்உருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டுஅருளே.

*

உரியேன்அல்லேன் உனக்குஅடிமை, உன்னைப் பிரிந்துஇங்கு ஒருபொழுதும்
தரியேன் நாயேன், இன்னதுஎன்று அறியேன், சங்கரா, கருணையினால்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுஉன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றுஎன்று அருளியதும் பொய்யோ எங்கள் பெருமானே.

பொருளின்பம்

சிறப்புடன் தோன்றுகிற சிவபெருமானே, செந்தாமரை மலர் போன்ற அரிய திருமேனியைக் கொண்டவனே, எங்கள் அரிய அமுதமே,

உலகில் உருவெடுத்துத் தோன்றுகிற இந்தப் பிறப்பு என்கிற நோய் அழிய வேண்டும், (ஏற்கெனவே பிறந்துவிட்ட இந்தப் பிறவியில்) உன் மீது நான் அன்பு வைக்க வேண்டும்,

அடியவர்களின் கூட்டத்துக்கு நடுவே ஒப்பற்றவனாகத் தோன்றுகிறவனே, உன்னுடைய திருவருளைக் காட்டி என்னையும் பிழைக்கச்செய்வாய்.

*

சங்கரனே, பெரியவனே, தனக்கு இணையென யாரும் இல்லாதவனே, சிவபெருமானே,

உனக்கு அடிமையாகும் உரிமை(தகுதி) எனக்கு இல்லை, ஆனால், நாய் போன்றவனான நான் ஒருபொழுதும் உன்னைப் பிரிந்திருக்கமாட்டேன், அதற்கு என்ன காரணம் என்பதையும் நான் அறியேன்,

அன்றைக்கு நீ கருணையோடு எனக்கு அருள்செய்ததும், உன்னுடைய திருவடிகளைக் காட்டியதும், ‘உன்னைவிட்டுப் பிரியமாட்டேன்’ என்று சொன்னதும், பொய்யோ? எங்கள் பெருமானே!

சொல்லின்பம்

பார் உரு: புவியில் பிறக்கும் உருவம்

பத்திமை: பக்தி

சீர்: சிறப்பு

செங்கமல மலர்: செந்தாமரை மலர்

ஆர் உரு: அரிய உருவம்

ஆர் அமுதே: அரிய அமுதமே

தொகை: தொகுப்பு / கூட்டம்

உய்யக்கொண்டு அருளே: பிழைக்கச்செய்து அருள்வாய்

உரியேன் அல்லேன்: நான் உரியவன் இல்லை

தரியேன்: தங்கியிருக்கமாட்டேன்

பெய்கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.