வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 45 – யாத்திரைப் பத்து - 5

சிவபெருமானைச் சேர வேண்டும் என்கிற எண்ணத்தை மனத்தில் தெளிவாக வையுங்கள், அதையே எப்போதும் சிந்தியுங்கள்,

News image
Updated On :16 மார்ச் 2016, 4:49 am

என். சொக்கன்

யாத்திரை என்றால், பயணம் என்பது பொருள். உலக இன்பங்களை விட்டு, சிவபுரத்துக்குச் செல்லும் மோட்சப் பயணத்தைப் பற்றிய பாடல்கள் இவை.

தில்லையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

250

பாடலின்பம்

சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்,
போரில் பொலியும் வேல்கண்ணள்பங்கன், புயங்கன் அருள்அமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வம்கூர அழுந்துவீர்
போரப்புரிமின் சிவன்கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.

*

புரள்வார், தொழுவார், புகழ்வாராய் இன்றே வந்துஆள் ஆகாதீர்,
மருள்வீர் பின்னை, மதிப்பார்ஆர்? மதிஉள் கலங்கி மயங்குவீர்,
தெருள்வீர்ஆகில் இதுசெய்ம்மின், சிவலோகக்கோன், திருப்புயங்கன்
அருள்ஆர் பெறுவார் அகல்இடத்தே? அந்தோ, அந்தோ, அந்தோவே.

பொருளின்பம்

சிவபெருமானைச் சேர வேண்டும் என்கிற எண்ணத்தை மனத்தில் தெளிவாக வையுங்கள், அதையே எப்போதும் சிந்தியுங்கள்,

போரில் அழகாகக் பொலிகின்ற வேலைப் போன்ற கண்களை உடைய உமையம்மையைத் தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டவன், பாம்பை அணிந்தவன், அந்தப் பெருமானின் அருள் அமுதத்தை நிறைவாகப் பருகுங்கள், அதன்பிறகும் ஆர்வம் குறையாமல், அவனது திருவடிகளைச் சென்று சேர வேண்டும் என்கிற விருப்பத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், அதற்கு ஆவன செய்யுங்கள், பொய்யான வாழ்க்கையில் புரண்டுகொண்டிருக்காமல் இப்போதே புறப்படுங்கள்.

*

பெருமானின் புகழைப் பாடாமல், கீழே விழுந்து வணங்காமல், அவனுக்கு அடிமையாகாமல் நிற்கிறவர்களே, (இவற்றைச் செய்யத் தயங்குகிறவர்களே,)

(இவ்வாறு நீங்கள் பொய் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்துவந்தால்), பின்னர் மயங்கித் திணறுவீர்கள், உங்களை அப்போது யார் மதிப்பார்கள்? புத்தி கலங்கித் தடுமாறுவீர்கள்.

ஆகவே, உங்களுக்குத் தெளிவான நன்மை வேண்டுமெனில், சிவத்தொண்டுகளில் ஈடுபடுங்கள்,

அவ்வாறு செய்யாவிட்டால், சிவலோகத்தின் தலைவன், பாம்பினை அணிந்த பெருமான், அவனது அருள் இந்தப் பரந்த உலகத்தில் யாருக்குக் கிடைக்கும்? அவர்களுடைய நிலை பரிதாபம், பரிதாபம், பரிதாபமே!

சொல்லின்பம்

சிந்திமின்: சிந்தியுங்கள்

பொலியும்: அழகாகத் திகழ்கிற

வேல்கண்ணள்பங்கன்: வேல்போன்ற கண்களைக் கொண்ட உமையம்மையைத் தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டவன் / சிவபெருமான்

புயங்கன்: பாம்பினை அணிந்தவன்

ஆரப் பருகி: நிறைவாக அருந்தி

ஆராத ஆர்வம் கூர: ஆசை குறையாமல்

அழுந்துவீர்: சென்று சேருங்கள் / திளையுங்கள்

போரப்புரிமின்: போய்ச்சேர விரும்புங்கள்

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

ஆகாதீர்: ஆகாதவர்களே

மருள்வீர் பின்னை: பின்னர் மயங்குவீர்கள்

ஆர்: யார்

தெருள்வீர்ஆகில்: தெளிவடைந்தவர்கள் ஆனால்

செய்ம்மின்: செய்யுங்கள்

கோன்: தலைவன்

திருப்புயங்கன்: பாம்பை அணிந்த பெருமான்

அகல்இடத்தே: அகன்ற உலகத்திலே

அந்தோ: பரிதாப உணர்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.