பதச் சேதம் | சொற் பொருள் |
சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மா கரி பெற்றவன் வெகு கோடி
| சங்கு: சங்க வாத்தியம்; வார்முடி: நீண்ட கிரீடம்; பொன்கழல்: பொன்னாலான வீரக் கழல்; சாமரை: சாமரம், கவரி; கத்திகை: விருதுக் கொடி; தண்டு: பல்லக்கு; மா: குதிரை; கரி: யானை; |
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதி சதுர் கவி சண்ட மாருதம் மற்றுள
| சந்த பாஷைகள்: அழகிய மொழிகள்; சதுர்க்கவி: மதுரகவி, சித்திர கவி, வித்தாரக் கவி, ஆசுகவி என நான்குவகைக் கவிதைகள்; சண்டமாருதம்: சூறாவளி; |
கவி ராஜ பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான்
| போதம்: அறிவு; |
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்ச பாதகரை புகழ் செயலாமோ
| மூஎழுவர்: முதலேழு, இடையேழு, கடையேழு வள்ளல்கள்; |
வெம் கை யானை வனத்து இடை துங்க மா முதலைக்கு வெருண்டு மூலமே என கருடனில் ஏறி
| வெம்கை: கொடியதான துதிக்கை; வனத்திடை: காட்டிலே; துங்க: உயர்ந்த; மூலமே: ஆதி மூலமே; |
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே
| பராவ: போற்ற; அடுக்கிய மண்: பதினான்காக அடுக்கப்பட்ட உலகங்கள்; இதம்: ஹிதம், நன்மை; இதம்பராவ: நன்மை பெருக (பராவ—பரவ என்பதன் நீட்டல் விகாரம்); |
கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரய குமரா பொன்
| கொங்கணாதி: கொங்கணர் முதலிய ரிஷிகள்; தரப்பெறு: பொன் தரப்பெற்ற (கொங்கணர் பொன்னை வேதித்துத் தந்தவர்); கொங்கினூடு: கொங்கு நாட்டில்; கொங்கின்: பூந்தாது, மகரந்தத்தின்; |
கொங்கு உலாவு குற கொடி கொங்கையே தழுவி செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே.
| கொங்கு உலாவு: நறுமணம் கமழும்; கொங்கு ராஜபுரம்: கொங்கு மண்டலத்தலுள்ள ராசிபுரம்; |
சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை ... சங்கும்; நீண்ட கிரீடமும்; பொன்னாலான வீரக் கழலும்; பொங்கி எழுவதான சாமரமும்; விருதுக் கொடியும்;
தண்டு மா கரி பெற்றவன் ... பல்லக்கையும்; குதிரையையும் யானையையும் பெற்றவன் (பரிசிலாகப் பெற்றவன்);
வெகு கோடிச் சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதி சதுர்க் கவி ... பலகோடிக் கணக்கான அழகிய மொழிகளைக் கற்றவனாகவும்; மந்திரவாதத்தில் வல்லவனாகவும்; மதுர, சித்திர, வித்தார, ஆசு கவியாகிய நாற்கவிகளில் வல்லவனாகவும்;
சண்ட மாருதம் மற்றுள கவி ராஜப் பங்கி பால சரச்வதி ... சூறாவளியைப் போல சொற்பொழிவாற்றுபவனாகவும்; ‘கவிராஜ பங்கி’ ‘பால சரஸ்வதி’ என்றெல்லாம் பட்டங்களைப் பெற்றவனாகவும்;
சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான் ... தொகுதியான நூல்களில் சொல்லப்பட்டுள்ள பிரபந்தங்களில் உறையும் ஞானத்தையும் எடுத்துரைக்கின்ற புலவனாகவும் உள்ள நான், (இது இப்படிப்பட்ட புலவர்களைக் குறிக்கும் ‘நான்’. அருணகிரியார் தன்னைக் குறித்துக்கொள்ளும் ‘நான்’ அன்று.)
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் எனச் சில பஞ்ச பாதகரைப் புகழ் செயலாமோ ... எனக்கு எதிரே உள்ள நீயும் (முதலேழு, இடையேழு, கடையேழு ஆக) இருபத்தோரு வள்ளல்களுக்குச் சமம் என்று பஞ்சமா பாதகங்களைச் செய்கின்ற சிலரைப் போற்றி நிற்கலாமா?
வெம் கை யானை வனத்து இடை துங்க மா முதலைக்கு வெருண்டு ... கொடிய, வலிமையான துதிக்கையை உடைய கஜேந்திரனாகிய யானை, காட்டில் (ஒரு குளத்திலே) வலிமையுடைய முதலையிடம் பயந்துபோய்,
மூலமெனக் கருடனில் ஏறி விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே ... ‘ஆதி மூலமே’ என்று அழைத்தவுடன் கருடன்மேல் ஏறிக்கொண்டு, விண்ணுலகும், பதினான்காக அடுக்கப்பட்ட உலகங்களும் போற்றும்படியாக அந்த யானைக்கு வேண்டி நன்மைகள் பெருகும்படியாக அருகில் வந்து உதவுபவனான திருமாலின் மருமகனே!
கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரிய குமரா ... கொங்கணர் முதலிய ரிஷிகள் (வேதித்து வழங்கிய) பொன்னைப் பெற்றதான கொங்கு நாட்டிலே சுகமாக இருப்பவனே! மகரந்தங்கள் நிறைந்த மாலைகளை அணிந்த வீரனே! பதினெட்டு கணங்களும் விரும்புகின்ற குமரனே!
பொன் கொங்கு உலாவு குறக் கொடி கொங்கையே தழுவி ... உயர்ந்த நறுமணம் கமழும் குறக்கொடியான வள்ளியம்மையின் மார்பகங்களைத் தழுவிக்கொண்டு,
செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே. ... செழிப்பான கொங்கு மண்டலத்தில் இருப்பதாகிய ராஜபுரத்தில் (ராசிபுரத்தில்) வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
வலிமையானதும் கொடியதுமான துதிக்கையை உடைய கஜேந்திரனாகிய யானை, வனத்தில் ஒரு குளத்திலே வலிய முதலையைக் கண்டு பயந்து ‘ஆதி மூலமே’ என்று அழைத்ததும் கருடன்மேல் ஏறிக்கொண்டு, விண்ணுலகும் மற்ற உலகங்களும் போற்றும்படியாக அந்த யானைக்கு நன்மைகளைச் செய்த திருமால் மருகனே! கொங்கணர் முதலான முனிவர்கள் வேதித்து வழங்கிய பொன்னைப் பெற்றுக்கொண்ட கொங்கு நாட்டிலே சுகமாக இருப்பவனே! பூந்தாதுகள் நிறைந்த மாலைகளை அணிபவனே! பதினெண் கணங்களின் பிரியத்துக்கு உகந்தவனே! நறுமணம் கமழும் குறக்கொடியான வள்ளியம்மையின் தனங்களை அணைப்பவனே! கொங்கு மண்டலத்தில் உள்ளதான ராஜபுரம் என்னும் ராசிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!
தான் பெற்ற பட்டங்களை எடுத்து ஓதுவதற்கான சங்க நாதமும்; நீண்ட கிரீடமும்; வீரக் கழலும்; சாமரமும்; பல்லக்கும்; குதிரையும்; யானையும் என்று இவற்றையெல்லாம் உடையவர்களாகவும்; அழகிய பல மொழிகளைக் கற்றவர்களாகவும்; நாற்கவிகளில் வல்லவர்களாகயும்; சண்டமாருதம் போல சொல்லைப் பொழியும் ஆற்றல் உள்ளவர்களாகவும்; ‘கவிராஜன்’ என்றும் ‘பாலசரஸ்வதி’ என்றும் பட்டம் பெற்றவர்களாகவும் இருந்தும்,
எதிரே உள்ள பஞ்சமா பாதகர்களை முதலேழு, இடையேழு, கடையேழு வள்ளல்களுக்கு நிகரானவன் நீ என்று பொய்யாகப் பாடிப் புகழ்ந்து திரியலாமா? (அடியேன் அவ்வாறு திரியாமல் உனது புகழ் ஒன்றையே பேசும் பேற்றைத் தரவேண்டும்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

ஜன நாயகன் படம் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றக் காவலில் அடைப்பு

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்
பெங்களூரு அணியிடம் வீழ்ந்த மும்பை! வான்கடேயில் ஆர்சிபி அசத்தல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

