தமிழ்ப் பல்கலை சார்பில் அமெரிக்காவில் தமிழ்க் கல்வியை முன்னெடுக்க ஒப்பந்தம் கையெழுத்து

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகமும், டெக்சாஸ் மாகாணத்தில் இயங்கிவரும் எட்யுரைட் அறக்கட்டளையும் (EduRight Foundation) இணைந்து அமெரிக்காவில் தமிழ்க் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புரிந்துணர்வு
இடமிருந்து வலம்: முனைவர் குறிஞ்சி வேந்தன்,  இராமு இளங்கோ, முனைவர். பாலசுப்பிரமணியன், முனைவர். சின்னப்பன், மல்லிகா
இடமிருந்து வலம்: முனைவர் குறிஞ்சி வேந்தன்,  இராமு இளங்கோ, முனைவர். பாலசுப்பிரமணியன், முனைவர். சின்னப்பன், மல்லிகா
Published on
Updated on
2 min read

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகமும், டெக்சாஸ் மாகாணத்தில் இயங்கிவரும் எட்யுரைட் அறக்கட்டளையும் (EduRight Foundation) இணைந்து அமெரிக்காவில் தமிழ்க் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைத் (MoU) தமிழ்ப் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் முனைவர். பாலசுப்பிரமணியன் முன்னிலையில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் கு. சின்னப்பன், எட்யுரைட் அறக்கட்டளையின் ஆலோசகர். இராமு இளங்கோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
 
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படித் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகக் கல்வித்துறையின் தொலைதூரக் கல்வியினை இணையம் வழியாகவும், நேரடியாகவும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகக் கல்வி மற்றும் தமிழ் வளர்மையத்தின் இயக்குநர் முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன் அவர்கள் கூறுகையில், தமிழக அரசின் சார்பில் அயலகத்தில் ஒருங்கிணைந்த தமிழ்க் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் எங்கள் துறை, பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அணுகி வந்த எட்யுரைட் அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி நேரடியாகத் துணை வேந்தர் அவர்களும், நானும் கடந்த வருடம் சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் அறிந்து கொண்டோம். அதனைத் தொடர்ந்து எட்யுரைட் அறக்கட்டளையுடன் இணைந்து அமெரிக்காவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களை இணையம் மற்றும் நேரடி வகுப்புகள் வழியாகச் செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன்படித் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழக்கமான பாடத்திட்டத்துடன் சேர்த்து அமெரிக்காவில் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கான 1 முதல் 8-ம் நிலை வரையிலான தமிழ்ப் பள்ளிக் கல்வியும், இம்மாணவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கான பட்டயப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தவுள்ளோம். இந்தக் கூட்டு முயற்சி அயலகத் தமிழ்க் கல்வியில் வெற்றிகரமான செயல்பாடாகக் கருதுகிறோம்". 
 
இக்கல்வித் திட்டத்திற்கு எட்யுரைட் அறக்கட்டளையின் சார்பில் முனைவர். சித்ரா மகேஷ் (டெக்சாஸ்) தலைமை வகிப்பார். இதன் ஆலோசகர்களாகத் கால்டுவெல் வேள்நம்பி (டெக்சாஸ்), துணைத் தலைவர் - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் இராமு இளங்கோ (அரிசோனா) ஆகியோர் செயல்படுவர். இதுகுறித்து எட்யுரைட் அறக்கட்டளையின் தலைவர் கீர்த்தி ஜெயராஜ் தெரிவிக்கையில், "வட அமெரிக்காவில் இன்று ஹார்வர்டு, ஸ்டோனி புரூக், ஹூஸ்டன், தெற்கு கரோலினா, பெர்க்லி, டொரொண்டோ பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வு இருக்கைகள் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படவும், அடுத்த தலைமுறையினர் தமிழை எழுதி, படித்து, பேசுவது மட்டுமின்றி அறம் சார்ந்த கல்வி, தமிழ் மொழியில் அமெரிக்காவிலிருந்து புதிய படைப்புகள் மற்றும் தொழில் முனைப்பினை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம். இதனைச் செயல்படுத்தத் தமிழ் நாட்டுடன் தொப்புள் கொடி உறவாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இயக்குநர் முனைவர் குறிஞ்சி வேந்தன் அவர்களின் வழிகாட்டுதலின்படி முன்னெடுத்துச் செல்வது வரும் காலங்களில் அமெரிக்காவில் தமிழ்க் கல்விக்கான சீரிய பாதை. எட்யுரைட் அறக்கட்டளையின் தமிழ்க் கல்விப் பணிக்கு ஊக்க சக்தியாக விளங்கிய வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கு (FeTNA) நன்றி".
 
எட்யுரைட் அறக்கட்டளை கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 94 மாணவர்களுக்குப் பள்ளி/பட்டப் படிப்பிற்கான கல்வி உதவித்தொகை, தாய்த் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிகள், தமிழக அரசுடன் இணைந்து தமிழ் ஆசிரியர்களுக்கான பயிலரங்கங்கள் மற்றும் அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகம் (UT) மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் போன்ற கல்விப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும் தகவல்களுக்கு info@eduright.org என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com