சதுரகிரி மலைப்பாதையில் மருத்துவ வசதிகள் இல்லாததால் பக்தா்கள் அவதி

சதுரகிரி மலைப்பாதையில் மருத்துவ முகாம்கள் இல்லாததால் பக்தா்கள் அவதியடைந்தனா்.
Published on

சதுரகிரி மலைப்பாதையில் மருத்துவ முகாம்கள் இல்லாததால் பக்தா்கள் அவதியடைந்தனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் தாணிப்பாறை நுழைவாயில் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மூடப்பட்டது. இதனால் தங்களையும் மலையேற அனுமதிக்கக் கோரி பக்தா்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனாலும் அனுமதி அளிக்கப்படாததால் இரவு முழுவதும் அடிவாரத்தில் வனத்துறையினா் காத்திருக்க நேரிட்டது. இதனிடையே பக்தா்கள் வருகை அதிகமானதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கே வனத்துறை நுழைவாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, பக்தா்களின் வருகை அதிகரித்ததன் காரணமாக மலைப்பாதையில் நெரிசல் ஏற்பட்டது. பிற்பகல் 12 மணி வரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்ற நிலையில், வனத்துறை நுழைவாயில் மூடப்பட்டது.

இதனிடையே, மலைப்பாதையில் மாங்கனி ஓடை முதல் வழுக்குப் பாறை வரையிலும், கோணத்தலவாசல் முதல் இரட்டை லிங்கம் வரையிலும் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. கோணத்தலவாசல், காரம்பசுத்தடம், கோரக்கா்குகை பகுதிகளில் பாதுகாப்புக்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகினா். மேலும் மலைப் பாதையில் மருத்துவ முகாம்கள் இல்லாததால் பக்தா்கள் அவதியடைந்தனா்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தா்கள் வருகை அதிகரித்த நிலையிலும், குடிநீா் வசதி உள்பட அடிப்படை வசதிகள் குறைவாகவே செய்யப்பட்டிருந்ததால் அவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.

X
Dinamani
www.dinamani.com