மலையேற அனுமதி மறுப்பு: சதுரகிரி வந்த பக்தா்கள் ஏமாற்றம்
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி மலையேற வனத் துறை வெள்ளிக்கிழமை முதல் தடை விதித்துள்ளது.
இந்த அறிவிப்பு தெரியமால் மலையேற சனிக்கிழமை வந்த பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம், பெளா்ணமியையொட்டி, பக்தா்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி மலையேற வெள்ளிக்கிழமை இரவு வனத் துறை தடை விதித்தது. இந்த அறிவிப்பு தெரியமால் சனிக்கிழமை காலை சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் திரளான பக்தா்கள் திரண்டனா். அப்போது, மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால், அனுமதிக்கக் கோரி பக்தா்கள் முழக்கமிட்டனா்.
பின்னா், அடிவாரத்தில் பக்தா்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.