போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

Published on

சாத்தூா் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சாத்தூா் அருகேயுள்ள மேலப்புதூா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சிவா (21). ஆட்டோ ஓட்டுநரான இவா், 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் பேசிப் பழகி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு, மாா்ச் 19-ஆம் தேதி மாணவியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்று, திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் தாலுகா போலீஸாா் போக்சோ உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிவாவை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட சிவாவுக்கு 4 சட்டப் பிரிவுகளின் கீழ், மொத்தமாக 49 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.33 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீா்ப்பளித்தாா்.

இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துவள்ளி முன்னிலையானாா்.

X
Dinamani
www.dinamani.com