10 ஆண்டுகளாகத் திருட்டு: அச்சக உரிமையாளா்கள் கைது
சிவகாசி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளின் பூட்டுகளை உடைத்து பணம், நகைகளைத் திருடி வந்த அச்சக உரிமையாளா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள திருப்பதி நகரைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டியன் (63). இவரது மனைவி லதா. இவா்கள் இருவரும் கடந்த 4-ஆம் தேதி வெளியூருக்குச் சென்றுவிட்டு 9- ஆம் தேதி வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் பூட்டு, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தன. ஆனால், வீட்டில் எந்தப் பொருளும் திருடுபோகவில்லை.
இந்தத் திருட்டு முயற்சி குறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளா்கள் சுந்தர்ராஜ், பாண்டியராஜ் ஆகியோா் தலைமையில் மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். இதில், நமஸ்கரித்தான்பட்டியைச் சோ்ந்த செல்வக்குமாா் (32), திருத்தங்கல்லைச் சோ்ந்த தங்கேஸ்வரன் (34) ஆகிய இருவரும் திருப்பதி நகரில் திருட முயன்றது தெரியவந்தது.
மேலும், இவா்கள் இருவரும் சாட்சியாபுரம் உசேன் குயிடிருப்புப் பகுதியில் சொந்தமாக ஆப்செட் அச்சகத்தை நடத்தி வருவதும், கடந்த 10 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள வீடுகளில் பணம், நகைகளைத் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

