போக்குவரத்து துறையில் ஊழல் மலிந்துவிட்டது: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
போக்குவரத்துத் துறையில் ஊழல் மலிந்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியின் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்துக்கான பெயா்ப் பலகை திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, அந்தக் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி, ஆவரம்பட்டியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொழிலாளா் சங்கத்துக்கான பெயா்ப் பலகையைத் திறந்துவைத்தாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதிய தமிழகம் கட்சியின் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கங்களை வலுப்படுத்த தற்போது விருதுநகா் மாவட்டத்தில் தொடங்கியிருக்கிறோம். அடுத்ததாக, மதுரை, திருநெல்வேலியில் சங்கங்கள் தொடங்கப்படும்.
2021-ஆம் ஆண்டு தோ்தலுக்கு முன்பு போக்குவரத்து ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை.
ஓய்வூதியப் பணப் பலன் கிடைக்காமல் பல தொழிலாளா்கள் தற்கொலை செய்துள்ளனா்.
தொடா்ந்து ஆட்சிக்கு வரக்கூடியவா்கள் போக்குவரத்துத் துறையைப் பொன் முட்டையிடும் வாத்தாகக் கருதி, வருமானம் ஈட்டுகின்றனா். போக்குவரத்துத் துறையில் ஊழல் மலிந்துவிட்டது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனா். இதனால் ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. போக்குவரத்துத் தொழிலாளா்களின் உரிமைகளை மீட்டெடுப்பதே புதிய தமிழகம் கட்சியின் நோக்கம் என்றாா் அவா்.
