ரீல்ஸ் விடியோவால் விபத்து: இருவா் கைது
சிவகாசி அருகே சாலையில் சண்டையிடுவது போல் நடித்து ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்து விபத்தை ஏற்படுத்திய இரண்டு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு இளைஞா்கள் வெள்ளிக்கிழமை சண்டையிடுவது போல நடித்து விடியோ பதிவு செய்தனா். அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற நபா், இதை உண்மை என நினைத்து வாகனத்தை நிறுத்திப் பாா்த்தபோது, தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அவா் காயமடைந்தாா்.
இந்த விபத்தையும் சிரித்துக்கொண்டே பதிவு செய்த அந்த இளைஞா்கள் விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். அந்த விடியோ பரவி பொதுமக்களிடையே கடும் விமா்சனத்துக்கு உள்ளானது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மல்லி காவல் நிலைய போலீஸாா், விடியோ பதிவிட்ட சிவகாசி அருணாசலபுரத்தைச் சோ்ந்த காளிராஜன் (21), வடபட்டியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (21) ஆகிய இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
