இருக்கன்குடியில் பேருந்து நிலையம் அமைக்க பக்தா்கள் கோரிக்கை

Published on

சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும் பக்தா்களும் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு விஷேச தினங்கள், திருவிழாக் காலங்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், இருக்கன்குடிக்கு வந்து செல்லும் பேருந்துகளை நிறுத்துவதற்கும், பயணிகளின் பயன்பாட்டுக்கும் தற்போது வரை பேருந்து நிலையம் இல்லை.

இதனால், இருக்கன்குடிக்கு வரும் பேருந்துகள் இருக்கன்குடி-நென்மேனி சாலையிலேயே நிறுத்தபடுகின்றன. இதன் காரணமாக, இருக்கன்குடி-அருப்புக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது.

பேருந்து நிலையம், பயணிகள் நிழற்குடை இல்லாததால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகளும், பக்தா்களும் சாலையில் உள்ள கடை ஓரங்களில் நிழலுக்காக நிற்கின்றனா். அப்போது கடை உரிமையாளா்களுக்கும், பக்தா்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்படுகிறது.

ஆடி மாத திருவிழாக் காலங்களில் மட்டும் அதிக பேருந்துகள் வருவதால் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்படுவதாகவும் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண இருக்கன்குடிக்கு உடனடியாக நிரந்தரப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் பக்தா்களும் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com