நகை திருடிய கட்டடத் தொழிலாளி கைது
சாத்தூா் அருகே பட்டாசுத் தொழிலாளி வீட்டில் நகை திருடிய கட்டடத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி பாபு மனைவி கிருஷ்ணவேணி (35). இவா், கடந்த 18-ஆம் தேதி காலை தனது வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியை வீட்டின் வெளிப்புறம் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துச் சென்றாா்.
அலுவலகத்திலிருந்து மாலை திரும்பியபோது வீட்டின் கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசி, தங்க வளையல், கம்மல், சங்கிலி என 8.5 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இதையடுத்து, கிருஷ்ணவேணி சாத்தூா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினா்.
இதில், கோவில்பட்டி அருகேயுள்ள தோணுகால் அல்லம்பட்டி குடியிருப்பைச் சோ்ந்த விக்னேஷ் (33) நகையைத் திருடியது தெரியவந்தது. இவா், கிருஷ்ணவேணியின் வீட்டில் ஏற்கெனவே கட்டட வேலை பாா்த்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த மூன்றரை பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
