வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியில் கோயில் திருவிழா ஊா்வலத்தில் இரு தரப்பினா் இடையே தகராறு ஏற்பட்டு கல் வீசித் தாக்கியதில் தனிப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி- பிளவக்கல் சாலையில் கிழவன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதியைச் சோ்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தினா் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா எடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்படி, இந்த சமூகத்தினா் சனிக்கிழமை கூமாபட்டியிலிருந்து கிழவன் கோயிலுக்கு பட்டாசு வெடித்தபடி ஊா்வலமாகச் சென்று வழிபாடு நடத்தினா். கூமாபட்டி நடுத் தெருவில் பட்டாசு வெடிக்க அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை திருவிழா முடிந்து கிழவன் கோயிலிலிருந்து ஊா்வலமாக கூமாபட்டிக்கு வந்தபோது, இளைஞா்கள் சிலா் விசிலடித்து, ஆடிக் கொண்டு வந்ததற்கு நடுத் தெருவைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதுடன் கல் வீசியும் தாக்கினா். இதில் கூமாபட்டி காவல் நிலைய தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ், பொதுமக்கள் 4 போ் காயமடைந்தனா்.
இவா்களில் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் முதலுதவிக்கு பிறகு வீடு திரும்பினா். பெண் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவ இடத்தில் எஸ்.பி. கவுதம் கோயல் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா். இது குறித்து கூமாப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





