
5 முறை பரிந்துரைத்தும் மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது ஏன்?
5 முறை பரிந்துரைத்தும் மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது ஏன் என்பது பற்றி...

மகாத்மா காந்தி
சத்தியாகிரகம் எனும் அமைதி வழியில் போராட்டம், வன்முறையற்ற எதிர்ப்பு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்தவர் என்ற பெருமை, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கொள்கைகளுக்குச் சொந்தக்காரரான மகாத்மா காந்திக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்ற கேள்வி இன்றளவும் மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுக் குழுவினருக்கு ஒன்றல்ல, இரண்டல்ல ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டும், பல முறை நூலிழையில் அந்த வாய்ப்பு நழுவியிருக்கிறது.
அதாவது 1937, 1938, 1939, 1947, 1948 என ஐந்து ஆண்டுகள் நோபல் பரிசு தேர்வுக் குழுவினருக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, விருதாளர்களின் பட்டியலில் அவர் தேர்வு செய்யப்பட்டும்கூட, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போன்ற அரசியல் மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள், தேர்வுக் குழுவின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூறப்படுகிறது.
1948ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதற்கான கால அவகாசம் நிறைவடைவதற்கு முன்பே, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆனால், நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக, மரணத்துக்குப் பிந்தைய என்ற காரணத்தைக் காட்டி அமைதிக்கான நோபல் பரிசு மகாத்மா காந்திக்கு வழங்கப்படவில்லை. அந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட குவேக்கர் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து, அதன்பிறகு வந்த தேர்வுக் குழுவினர் வருத்தத்தை பதிவு செய்ததோடு, 1989ஆம் ஆண்டு தலாய் லாமாவுக்கு நோபல் பரிசு வழங்கியபோது, இது மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டனர்.
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, காந்தி பெயர் இரண்டாவது முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது, பெரும்பாலும் அவருக்கு பரிசு கிடைத்திருக்க வேண்டிய நேரத்தில், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைவாதம், இரு நாடுகள் பிரிவினையால் ஏற்பட்ட வன்முறை போன்றவற்றை தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு சிலர் கவனத்தில் கொண்டு, காந்திக்கு நோபல் பரிசு கொடுப்பதை விரும்பவில்லை என்று காரணம் கூறப்பட்டது.
1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி காந்தி படுகொலை செய்யப்பட்டார். நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய இரண்டு நாள்களே இருந்தன. அதற்கு முன்பே காந்தி பெயர் பரிந்துரைக்கப்பட்டும்விட்டது.
இதனால் தேர்வுக் குழுவினருக்கு ஒரு குழப்பம். மகாத்மா காந்தி மறைவுக்குப் பிறகு இந்த பரிசு வழங்கப்படுவதாக இருக்குமா? ஏனெனில் இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு, இறந்தவர்கள் யாருக்கும் வழங்கப்பட்டதில்லை என்பதே.
மேலும், அவர், எந்த அமைப்பையும் சேர்ந்தவரில்லை, சொத்துகளும் இல்லை, உயிலும் வைத்திருக்கவில்லை, இதனால், பரிசுத் தொகையை யாரிடம் வழங்குவது என்ற சட்ட சிக்கல்களும் ஏற்பட்டது. அப்போதுதான், பரிசு பெறத் தெரிவு செய்யப்பட்ட பிறகு, ஒருவர் மரணித்தால் மட்டுமே மரணத்துக்குப் பிறகு நோபல் பரிசு வழங்கப்படும் என்று சட்டரீதியான விளக்கம் பெற்று, காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு மறுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





