/

சிறுகதை:மீண்டும் துளிர்த்தது!

ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப்பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள் அவனுக்காகக் கொடுத்திருந்த நான்கு வரித் திருமண வி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:20 pm

சோ.சுப்புராஜ்

ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப்பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள் அவனுக்காகக் கொடுத்திருந்த நான்கு வரித் திருமண விளம்பரத்திற்கு வந்திருந்த கடிதங்கள் அவை. கிளி, ஜோஸ்யக்காரன் விரல்களுக்குள் ஒளித்துக்காட்டும் நெல்மணியைக் கண்டதும் மிக எளிதாக ராசிக் குறிப்பைத் தேர்ந்தெடுத்துவிடுகிறது. இவனுக்குத்தான் எப்படி இந்தக் குவியலிலிருந்து தன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதென்ற சூட்சுமம் புரியவில்லை.

நாற்பது வயதைக் கடந்துவிட்ட மனைவியை இழந்த ஒரு விடோயரை மணந்து கொள்ளத்தான் எவ்வளவு பேர் - இளம் பெண்கள், முதிர்கன்னிகள், விதவைகள், விவாகரத்தானவர்கள் என்று -     ஆர்வம் காட்டி விண்ணப்பம் அனுப்பி இருக்கிறார்கள். தனசேகருக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், இவர்களிலிருந்து ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஒரு முறை கல்யாணம் பண்ணி...ஆயாசமாகவும் இருந்தது.

  சுமித்ராவின் மீது கோபம் கிளர்ந்தது அவனுக்குள். ஏன் இப்படிப் பண்ணினாள்? அவனுடன் ஐந்து வருடங்கள் கூட முழுதாய் வாழ்ந்து முடிக்காமல் அல்ப ஆயுஸில் விருட்டென்று விடைபெற்றுக் கொண்டு போய்விட்டாளே! ஆனால் அவளை மரணத்தை நோக்கித் தள்ளியதில் அவனுக்கும் தானே பங்கிருக்கிறது என்ற குற்ற உணர்ச்சியும் பொங்கியது. அவன் மட்டுமா? முதல் காரணம் அவனுடைய அம்மா.

அவள்தான் சுமித்ராவைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து அவனுக்கு மணமுடித்து வைத்தாள். ஆனால் கல்யாணமான ஆறாவது மாதத்திலிருந்தே அவளைக் கரித்துக் கொட்டத் தொடங்கிவிட்டாள். சீக்கிரம் பேரனோ, பேத்தியோ பெற்றுக் கொடுக்கச் சொல்லி. நாளுக்குநாள் அவளின் நச்சரிப்பும், வார்த்தைகளால் வதைப்பதும் அதிகமானது. அவ்வப்போது தன்னுடைய மகனுக்கு வேறொரு கல்யாணம் செய்து வைத்துவிடுவதாய் பயமுறுத்த வேறு செய்தாள். தனசேகர் அம்மாவிடம் இதற்காகச் சண்டை போட்டிருக்கிறான்.

எங்கு போனாலும் குழந்தை இல்லையா என்கிற கேள்வி சுமித்ராவை சித்ரவதை செய்தது. ஆளாளுக்கு அறிவுரைகளை வேறு தாராளமாய் அள்ளி வழங்கியபடி கடந்து போனார்கள். அப்புறம் தொலைக்காட்சி, சினிமா என்று எல்லாவற்றிலும் பெண் என்றால் பிள்ளை பெற்றுத் தர வேண்டும். குடும்பத்தின் சந்ததி தழைக்க எப்பாடுபட்டாவது அவள் உதவ வேண்டும் என்கிற சித்திரத்தையே முன் வைத்து அப்படி முடியாத பெண்களைக் குற்ற உணர்ச்சி கொள்ள வைத்தன.

  ஒருநாள் இந்த மன அழுத்தத்திலேயே திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் சுமித்ராவின் உயிர் பிரிந்தது.

  சுமித்ரா இறந்த சில மாதங்களிலேயே அம்மாவும் இறந்து போனது, மனித மனங்களின் ஆழங்காண முடியாத மர்ம முடிச்சாகவே இருந்தது. இருவரையும் இழந்த பின்பு தனிமை தனசேகரைத் தின்று கொண்டிருந்தது.

 வந்திருந்த கடிதங்களை மேலோட்டமாகப் புரட்டிக் கொண்டு இருந்தபோது ஒரு கடிதத்துடன் ஒட்டப்பட்டிருந்த பாஸ்போர்ட் அளவிலான போட்டோவிலிருந்த முகம் கொஞ்சம் பரிச்சயமானதாயிருக்கவே உற்றுப் பார்த்தான். காலம் தன் ரேகைகளை அழுத்தமாகப் பதித்து அந்த முகத்தில் நிறைய மாற்றங்களை நிகழ்த்தியிருந்தபோதிலும் அவனுக்கு அந்த முகத்தை அடையாளம் தெரியவே செய்தது. பெயரைப் படித்தவனுக்கு நரம்புகளில் எல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடியது. மறக்க முடியுமா அன்னபூரணியை? அவள் எப்படி இந்தக் கடிதக் குவியலுக்குள்?

 தனசேகர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் பேச்சுப் போட்டிகளிலும் கவியரங்கங்களிலும் கலக்கிக் கொண்டிருந்தான். ஒருமுறை கோவையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையிலான கவிதைப் போட்டியில்தான் அன்னபூரணியைச் சந்தித்தான். அவளும் கவிதைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து வந்திருந்தாள். அவள் வாசித்த கவிதை அவளைப் போலவே எளிமையான அழகுகளுடன் கவித்துவம் பொங்க அற்புதமாக இருந்தது.

ஆனால் அது கவியரங்குகளில் வாசிக்கப்படக்கூடிய கவிதை அல்ல. எழுதப்பட்டு தனியாய் வாசித்தால் இலக்கிய அனுபவம் தரக்கூடிய கவிதை. மாணவர்களுக்குப் புரியாததால் அவளைக் கவிதையே வாசிக்கவிடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். தனசேகர் வாசித்த கவிதைக்கே பரிசு கிடைத்தது.

போட்டி முடிந்ததும் இவன் வலியப் போய் அன்னபூரணியிடம் அவளுடைய கவிதையைச் சிலாகித்துப் பேசினான். அவளுக்கோ முகத்தில் கோபம் கொப்பளித்தது. ""உங்க கவிதைக்குத்தான் முதல் பரிசு அறிவிச்சிருக்காங்க. நீங்க என் கவிதையைப் பாராட்டிப் பேசுறீங்க. என்ன நக்கல் பண்றீங்களா?'' என்றாள் படபடவென்று.

அரங்கத்தில் அவளுடைய கவிதைக்கு ஏற்பட்டுவிட்ட அவமானத்தைத் துடைக்க வேண்டுமென்று துடித்தான். தமிழ்மன்றத்தினரிடமிருந்து அவளுடைய கவிதையின் கையெழுத்துப் பிரதியை வாங்கி அதை அப்படியே ஒரு சிறுபத்திரிகைக்கு அனுப்பி வைத்தான்.

  அடுத்த மாதமே அந்தக் கவிதை பிரசுரமானது. ஒரு சிறு கடிதம் எழுதி பிரசுரமான இதழை அவளுடைய முகவரிக்கு அனுப்பி வைத்தான்.

தன்னுடைய கவிதையை அச்சில் பார்த்த சந்தோஷமும், மகிழ்ச்சியும் அப்பட்டமாய் முகத்தில் தெரிய அவளே அவனை வந்து பார்த்துப் பேசினாள். அன்றிலிருந்து இருவருக்குமான நட்பு துளிர்விட்டு புதுப் புதுக் கிளைகளுடன் விரியத் தொடங்கியது. இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே பல பட்டிமன்றங்களிலும், கவியரங்கங்களிலும் கலந்து கொண்டனர்.

கல்லூரிக் காலம் முடிந்த பின்பும், வேலைக்காக அல்லாடிய காலத்திலும் இருவருக்குமான நட்பும் நேசமும் உயிர்ப்புடன் இருந்தது. தனசேகருக்குச் சென்னையில் வேலை கிடைத்தது. தாராளமாய்ச் சம்பளம் வரத் தொடங்கியது. கல்யாணம் பண்ணிக் கொள்ளத் தைரியம் வந்தவுடன் அவன் மனதிற்குள் மனைவியாய் நிழலாடியவள் அன்னபூரணிதான். தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்ற தயக்கத்தையும் மீறி தன் விருப்பத்தைச் சொன்னான்.

அவள் ரொம்ப நேரத்திற்கு எதுவுமே பேசவில்லை. அப்புறம் சிரித்துக் கொண்டே சொன்னாள். ""உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட வந்துட்டா, அப்புறம் எங்க மாமாவை யாரு கட்டிப்பா?''

  அவள் சீரியஸôகச் சொல்கிறாளா? இல்லை விளையாட்டுக்குச் சொல்கிறாளா? என்று குழப்பமாக இருந்தது. அவளுக்கு ஒரு தாய்மாமா இருக்கிற விஷயத்தை இதுவரை அவனிடம் அவள் சொல்லியதில்லை.

 அதுதான் அவர்களின் கடைசிச் சந்திப்பாய் இருந்தது. அதற்குப் பின்பு அவளைப் பார்க்கவேயில்லை.

  அ ன்னபூரணியிடம் இருந்து வந்திருந்த கடிதம் வித்தியாசமாக இருந்தது. அது திருமணம் விளம்பரம் பார்த்து அனுப்பப்பட்டது இல்லை. முகவரி மாறி வந்திருந்தது.

 தற்செயலாக இருந்தாலும் அன்னபூரணியின் கடிதம் தனக்குத் தவறுதலாக வந்ததில் ஏதோ சூட்சுமம் ஒளிந்திருப்பதாக அவனுக்குப் பட்டது. அன்னபூரணியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தால் என்ன? என்கிற எண்ணம் மெல்ல எட்டிப் பார்த்தது. திடீரென்று போய் நின்றால் அவள் தன்னை எப்படி எதிர்கொள்வாளோ? தன்னுடைய வருகை அவளுடைய குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுமோ? என்ன ஆனாலும் பரவாயில்லை. அவளைப் போய் பார்த்துவிட்டு வருவது என்று தீர்மானித்தான்.

  திருநெல்வேலி டவுனின் முக்கிய வீதியிலிருந்த அன்னபூரணியின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் அவனுக்குச் சிரமமேதும் இருக்கவில்லை. வீட்டின் மையத்தில் மூன்று படிக்கட்டுகளும் அதன் இருபுறமும் சிமெண்ட் திண்ணைகளும், நிறைந்த பூ வேலைப்பாடுகளுடன் ஓங்குதாங்காய் நின்ற தேக்கு மரக் கதவுகளும் பழம் பெருமை பேசி அவனை வரவேற்றன. திண்ணையில் வயதான ஒரு பெண் படுத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவசரமாய் எழுந்து, ""நீ யாருப்பா? உனக்கு என்ன வேணும்?'' என்றாள்.

""நான் சென்னையிலிருந்து வாரேன். இங்க அன்னபூரணிங்கறது?....''

 ""என் பொண்ணுதான். கொஞ்சம் இருப்பா. கூப்புடுறேன்'' என்றபடி வீட்டுக்குள் பார்த்துச் சத்தங் கொடுத்தாள். அவசர அவசரமாய் வெளியே வந்த அன்னபூரணி இவனைக் கொஞ்ச நேரம் யாரோ போல் புரியாமல் ஏற இறங்கப் பார்த்துவிட்டு சட்டென்று ஞாபகம் வந்தவளாய், ""ஏய் தனா, நீ எங்க இந்தப் பக்கம்?'' என்றபடி மலர்ந்தாள்.

  ""அம்மா இவர் தனசேகர். கவிதையெல்லாம் எழுதறவர். ஏற்கனவே இவரப் பத்தி உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல'' என்று அறிமுகப்படுத்தினாள்.

 ""அம்மாட்ட பேசிட்டுரு ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்'' என்றபடி அவசரமாய் வீட்டுக்குள் போனாள். சிறிது நேரத்தில் ஒரு டம்ளர் மோருடன் வந்தாள்.

  ""இவ்வளவு வருஷங்களுக்கப்புறம் மறுபடியும் உன்னைப் பார்த்தது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு தனா! ஆமா, இந்த வீட்டு முகவரி உனக்கெப்படிக் கிடைச்சது? நாங்களே இங்க குடிவந்து ரெண்டு மாசந்தானே ஆகுது?'' என்றாள்.

 தனசேகர் எல்லா விபரங்களும் சொல்லி அவளின் கடிதத்தை எடுத்துக் காண்பித்தாள். கொஞ்ச நேரம் பலதையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ""இரு உனக்கு காபி கலந்து எடுத்துட்டு வர்றேன். நீ தான் காபின்னா பெண்டாட்டியையே விக்கிற ஆளாச்சே'' என்று எழுந்தபடி சமையலறைக்குள் போனாள் அன்னபூரணி.

  ""பூரணிக்கு எத்தனை குழந்தைங்கம்மா? ஒண்ணையும் கண்ணுல காங்கல'' என்று அன்னபூரணியின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான் தனசேகர்.

கொஞ்சநேரம் எதுவும் பேசாமல் அவனையே குறுகுறுவென்று பார்த்திருந்துவிட்டு ""கொழந்தையா? அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலையேப்பா'' என்றாள்.

 இவனுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

  ""பூரணி சொன்னாங்களே அவுங்களைக் கல்யாணம் பண்றதுக்காக தாய்மாமன் காத்திருந்த கதையெல்லாம்.''

  பூரணியின் அம்மா சிரித்தாள். ""அவளுக்குத் தாய்மாமன்னு யாருமில்லப்பா'' என்றாள் மெதுவான குரலில்.

 ""நீ அன்னத்தக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டியாமே. அன்னைக்கு முழுவதும் அழுதுக்கிட்டே இருந்தாள். உன் மேல் அவளுக்கு ரொம்ப இஷ்டம் தெரியுமா?''

 ""பூரணிக்கு என் மேலே ரொம்ப இஷ்டம்ங்குறீங்க. அப்புறம் ஏன் புதுசா ஒரு தாய் மாமாவை உருவாக்கி என்னைத் தட்டிக் கழிக்கணும்? எனக்குப் புரியலேம்மா'' தனசேகர் கேட்கவும் அவள் பொட்டென்று அழத் தொடங்கிவிட்டாள். அன்னபூரணி காபியுடன் வந்ததும் கண்களைத் துடைத்தபடி, ""நீ காபி குடிப்பா?'' என்றாள்.

  அன்னபூரணி அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தாள்.

இவன் காபியைக் குடித்ததும் காலி கோப்பைகளுடன் உள்ளே போனதும், அம்மா சொன்னாள்:

  ""உன்னப் பார்த்தா, ரொம்ப நல்ல மாதிரியாத் தெரியுது. கண்டிப்பா புரிஞ்சுக்குவங்குற நம்பிக்கையில அவ கல்யாணம் பண்ணிக்க மறுத்த காரணத்தை நான் சொல்றேன். அது இயற்கை அவளுக்குப் பண்ணுன சதி...வேறென்ன?'' அன்னபூரணியின் அம்மா சற்று நிறுத்தினாள். பின்பு தொடர்ந்தாள்.

""அன்னம் இன்னும் பெரிய மனுஷியாவே ஆகல தம்பி. நாங்க பாக்காத வைத்தியமில்ல. ஒண்ணும் பிரயோசனமில்ல தம்பி. சரி, அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்னு விட்டுட்டோம். வேறென்ன செய்றது?''

  அவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான். அன்னபூரணிக்கு எவ்வளவு நல்ல மனது?

வீட்டினுள் இருந்து அன்னபூரணி வந்து நின்றாள். அவளைப் பார்த்துக் கொண்டே அவன் சொன்னான்.

  ""தாம்பத்ய சுகமும், வம்ச விருத்தியுமே வாழ்க்கை இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டவன்மா நான். பூரணி சம்மதிச்சா நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்மா. அவ எனக்கு ஒரு தோழியா இருந்தாப் போதும். அன்னபூரணியாலே அது நிச்சயமா முடியும்.''

 ""அப்படின்னா தாராளமா கூட்டிட்டுப் போங்க தம்பி. உங்கள மாதிரி மனுஷனுக்காகத்தான் அவ இவ்வளவு நாளாக் காத்திருந்தாலோ என்னமோ?''

  ""பூரணி மட்டுமில்லம்மா. நீங்களும் வாங்க'' என்றான் தனசேகர்.

அன்னபூரணியின் முகத்தில் சந்தோஷம். விழிகளில் வழிந்த சிரிப்பு. விடிவே இல்லை என்று இருட்டில் கிடந்தவள் திடீரென்று கண்ணைத் திறந்து பார்த்தபோது விடிந்து வெகுநேரம் ஆகி கண்ணைக் கூசும் வெளிச்சம் பளீச் என்று தெரியும்போது ஏற்படும் திகைப்பு. என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று தெரியாத பிரமிப்பு.

  அம்மா இருக்கிறாளே என்ற உணர்வின்றி அன்னபூரணி சட்டென்று அவனை நெருங்கி நின்று அவனுடைய கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு நின்றாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.