

மிகப்பெரிய சாதனைகள் செய்த ஆண்களுக்குப் பின்னால், அவர்களது மனைவிமார்கள் மிகப் பெரிய துணையாக நின்றிருக்கிறார்கள். கணவர்களுடன் முரண்பட்டு அவர்களுக்கு எதிராக நின்று தொல்லை கொடுத்தவர்களும் உண்டு.
பாரதிக்கு உயிராக இருந்து செயல்பட்டிருக்கிறார் அவரது அருமை மனைவி செல்லம்மா. பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு, வழிகாட்டி. பெண்கள் அனைவரும் படிக்க வேண்டிய பாடம்.
பாரதியைக் கைப்பிடிக்கும்போது செல்லம்மாவுக்கு வயது எட்டு. அவருடைய எட்டாவது வயதிலேயே பால்யவிவாகம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் பாரதியோ யாருக்கும் அடங்காத முரட்டு மனிதர். வீட்டைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நாட்டைக் கவனித்தவர். வீட்டுத் தேவைகளை உணராமல் நாட்டினுடைய தேவைகளை உணர்ந்தவர். தன்னுடைய மனைவி மக்களை மட்டும் பார்க்காமல் இந்திய நாட்டு மக்களையே தன்னுடைய குடும்பமாகப் பார்த்தவர்.
பொதுவாகவே கலைஞர்கள் உணர்ச்சி வயப்பட்டவர்கள். கவிஞர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிலும் பாரதி ஒரு மகாகவி. அவருடைய கற்பனைக்கும் செயல்களுக்கும் ஒரு எல்லை என்பதே கிடையாது.
பாரதியின் வீட்டிலோ வறுமை தாண்டவமாடும். அந்த நேரத்தில் சமைக்க வைத்திருந்த அரிசியை எடுத்து குருவிகளுக்குப் போட்டுவிட்டு அது உண்பதைப் பார்த்துப் பரவசப்பட்டவர் பாரதி. அந்த பாரதியின் செயல்களைப் பொறுத்துக் கொண்டார் செல்லம்மா.
வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும், மரணம் நம்மை பிரிக்கும் மட்டும் ஒன்றாக இருப்போம் என்று உறுதி மொழி எடுத்துதான் திருமணம் முடிக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்குப் பின்னால் உறுதிமொழிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிடுகிறார்கள்.
பாரதியின் மேல் செல்லம்மா வைத்திருந்தது முதிர்ந்த காதல். அந்தக் காதல், அன்பு, மரியாதை, குடும்பப் பொறுப்பு இந்த நான்கு தூண்களில்தான் செல்லம்மா தனது கணவர் பாரதியைத் தாங்கிக் கொண்டார்.
செல்லம்மாவின் சொந்த ஊர் கடையம். செல்லம்மாவுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். பாரதியார் இறந்த பிறகு 34 ஆண்டுகள் செல்லம்மா உயிர் வாழ்ந்திருக்கிறார். பாரதி ஆஸ்ரமத்தை உருவாக்கி அவரது பாடல்களின் முதல் தொகுதியை புத்தகமாக வெளியிட்டார்.
அன்பு, பண்பு, பாசம் இவற்றுக்கெல்லாம் செல்லம்மா சொந்தக்காரி. அவர் கடைசி காலங்களில் நடமாட்டமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். சுயநினைவு இல்லாத நிலையிலும், வாயைத்திறந்தால் பாரதியின் பாட்டுதான் வரும். தன் கணவரை நினைத்து, ""என்னை விட்டுப்போய் விட்டாயே ராஜா நீ சொன்னதை சில நேரங்களில் நான் கேட்காமல் போய்விட்டேனே'' என்று சொல்லி கண்கலங்கினார்.
பாரதி உடல், பொருள், ஆவி, சொல், செயல் ஆகிய ஐந்தையும் இந்தியத் திருநாட்டிற்கே அர்ப்பணம் செய்தார். மேலே குறிப்பிட்ட ஐந்தையும் செல்லம்மா தன் கணவர் பாரதிக்கு அர்ப்பணம் செய்தார். எனவேதான் பாரதியால் நிமிர்ந்து நடக்க முடிந்தது. வறுமையிலும் கவிதை எழுத முடிந்தது. நாட்டைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் கவிதை எழுத முடிந்தது.
அவ்வளவு வறுமையிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கெடுபிடியிலும் பாரதிக்கு சொர்க்கத்தைத் தந்தவள் செல்லம்மா. எனவேதான் இன்றைக்கும் பாரதி பேசப்படுகிறார்; பாரதியைப் போற்றுபவர்கள் செல்லம்மாவையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
செல்லம்மா பாரதியின் பாடல்களைக் கேட்டு ரசித்து இதயத்திற்குள் அவர் சொர்க்கத்தைக் கண்டார். ""பாரதியோடு வாழ்ந்த இந்த பாக்கியத்தை மறுபடியும் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் தவமிருக்கத் தயாராக இருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார் செல்லம்மா.
பாரதியார் இறந்த பிறகு, பாரதியின் கவிதைகளோடும் அவரது நினைவுகளோடும் உயிர் வாழ்ந்திருக்கிறார். முழுமைப் பெற்ற காதலெல்லாம் முதுமை வரை ஓடி வரும் என்றார் கண்ணதாசன். இந்தக் காதல் இறந்த பிறகும் ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுதும் பேசப்படுகிறது. எனவேதான் புரட்சிகவிஞர் பாரதிதாசன் செல்லம்மா பாரதியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார் என்று சொல்லுவார்கள். இப்போது வாழும் கவிஞர்களில் வாலியும் செல்லம்மாவை ஐம்பதுகளில் சந்தித்திருக்கிறார்.
செல்லம்மா, பாரதி கண்ட புதுமைப் பெண் இல்லைதான். ஒன்பது கஜம் புடவை கட்டிய ஆசாரமான வாழ்க்கையைக் கடைபிடித்தவர்தான். மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு பூணூலை அறுத்தெறிந்து வீறுநடை போட்ட பாரதியை, செல்லம்மா இல்லாமல் நினைவுகூர முடியுமா? தமிழில் எத்தனை கவிஞர்களின் மனைவியைரை அப்படி நினைவுகூர முடிந்திருக்கிறது?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.