சிறுகதை: தெய்வானையும் சின்ன கரடி பொம்மையும்
ராதிகா அதைச் சொன்னபோது தூரத்தில் யாரோ பேசிக் கொள்வதுபோல் இருந்தது. முதலில் அது தனக்குச் சம்பந்தம் இல்லை என்பது போல்தான் தெய்வானை நினைத்தாள். ராதிகா சொன்னது தன்னிடம்தான் என்று உணர்ந்த போது அவளால் தாங்க


ராதிகா அதைச் சொன்னபோது தூரத்தில் யாரோ பேசிக் கொள்வதுபோல் இருந்தது. முதலில் அது தனக்குச் சம்பந்தம் இல்லை என்பது போல்தான் தெய்வானை நினைத்தாள். ராதிகா சொன்னது தன்னிடம்தான் என்று உணர்ந்த போது அவளால் தாங்க முடியவில்லை. ஓர் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள். அதற்குள் எல்லாம் முடிந்து விட்டதா? காலம் சுலபமாய் பனிக்கட்டி போல் கரைகிற ஒன்றா? கை சொடுக்குகிற கணங்களில் முடிந்து விடுகிற கனவா? எதுவும் புரியவில்லை தெய்வானைக்கு. இந்த வீட்டிற்கு வேலைக்கென வந்து அதற்குள் நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன. அதற்குள் கடைசி நாள் வந்துவிட்டது. ராதிகா இப்போது விளக்கமாய்ச் சொல்ல ஆரம்பித்தாள்.
""தெய்வானை.. நித்தினை இந்த வருஷம் ஸ்கூல்ல சேர்த்திரலாம்னு முடிவில இருக்கோம். இனி அவன நாங்களே பாத்துக்கறோம். நீங்க உங்களுக்குச் சேர வேண்டிய பணத்த வாங்கிட்டு எப்ப வேணுன்னாலும் ஊருக்குக் கிளம்பிக்கங்க..''
தெய்வானை மெல்ல தலையைக் குனிந்து கொண்டாள். தனக்குதான் அந்தச் செய்தி என்ற அதிர்ச்சியில் மெல்லமெல்ல உறைய ஆரம்பித்தாள். கண்கள் சட்டென கலங்க ஆரம்பித்தன.
""எங்களுக்கும் இத சொல்ல கஷ்டமாத்தான் இருக்கு. வேற வழியில்ல தெய்வானைம்மா..'' - சங்கரும் பக்கத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தான்.
அதற்கு மேல் எந்த வார்த்தைகளும் தெய்வானையின் காதில் விழவில்லை. எல்லாவற்றிற்கும் முடிவு இருக்கத்தான் செய்கிறது என்கிற நிஜம் அவளை ரொம்பவே உலுக்கிப் பார்த்தது. மளமளவென வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். என்ன சொல்வது? அப்படியே ஓர் ஓரமாய் சம்பளமே இல்லாமல் இருந்து கொள்கிறேன் என்று அவர்களிடம் கெஞ்சத் தோன்றியது. ஆனால் சிரமப்பட்டு அதை அடக்கிக் கொண்டாள். அவர்களின் பிரச்னை அதைவிட இருக்கலாம். அப்படியெதுவும் இல்லையென்றால் நிச்சயம் தன்னை இருக்கச் சொல்லியிருப்பார்கள் என்று தெய்வானை தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள். ""சரிங்க'' என்கிறமாதிரி தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள். பக்கத்தில் சின்ன கரடி பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும் நித்தினைப் பார்க்க அவளுக்குத் தைரியம் வரவில்லை. பார்த்தால் நிச்சயம் கதறி அழுதுவிடுவோம் என்று தோன்றியது. நித்தின் "பாத்தி' எனக் கூப்பிடுவதை இனி கனவில்தான் கேட்க முடியுமா? அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அந்த இடத்தில் நிற்க முடியாமல் வேகமாய் ஸ்டோர் ரூமிற்குள் வந்தாள். கதவைச் சாத்திக் கொண்டாள். நாளை காலை கிளம்பிக் கொள்ளலாம் என உடனே முடிவுக்கு வந்தாள். இங்கே இருந்தால் இவர்களைப் பார்க்க பார்க்க மனதில் இருக்கிற கொஞ்ச பலமும் போய் விடும் என்று தோன்றியது. கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
தெய்வானைக்கு வயது அறுபதிற்கு மேலாகிறது. கம்பீரமான உயரம். பார்வை குறையாத கண்கள். முகத்தில் விழத்தொடங்கியிருக்கும் சுருக்கம். தலையில் முக்கால் பாகம் பரவின நரைத்த முடி. ஆனால் இன்னும் வேகம் குறையாத உழைப்பும், நூறு சதவீத நேர்மையும் அவளிடம் இருந்தது.
தெய்வானை ஷெல்ப்பில் இருந்த பெட்டியை எடுத்தாள். அதில்தான் அவளது துணிகள் இருந்தன. பொங்கல் தீபாவளிக்கென ராதிகா தவறாமல் எடுத்துக் கொடுத்த சேலைகள். ஒரு பெரிய துணிப்பையில் இப்போதே எல்லாவற்றையும் திணித்துக்கொண்டாள். தெய்வானையின் சொத்து என்று சொன்னால் அதுதான்.
இரவு. தெய்வானைக்குத் தூக்கம் வரவில்லை. மிக நீண்ட இரவாய் இருந்தது. தன் எதிர்காலம் கண் முன் இருளாய் நின்று பயமுறுத்துவதாய்த் தோன்றியது. அதை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்பது தெய்வானைக்கு இப்போதே சவாலாய்த் தெரிந்தது. இந்த நான்கு வருடம் உணராத பாரம் அவள் மனசு முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்து கொண்டாள். தண்ணீர் குடித்தாள். இப்படியே விடியாமல் இருந்துவிட்டால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. வெளியே காகம் கத்துவது கேட்டது.
காலை. அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை தினம். எல்லோரும் தாமதமாய் எழுந்தார்கள். தெய்வானை தன் வழக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தாள். இருக்கிற பாத்திரங்களைக் கழுவினாள். துணிகளை வேகமாய் துவைத்துப் போட்டாள். வீட்டை முழுவதும் சுத்தம் செய்தாள். எழுந்த நித்தினை பாத்ரூம் போக வைத்தாள். பிறகு அவனுக்குப் பால் கலந்து குடிக்கத் தந்துவிட்டு குளிக்கவும் வைத்தாள். ராதிகா உதவியாய் மிக்ஸியில் சட்னி அரைத்துத் தந்துவிட்டு போனாள். தெய்வானை எல்லோர்க்கும் இட்லி ஊற்றினாள். சூடாய்ப் பரிமாறினாள். இன்று எல்லாம் இயந்திரத்தனமாய் நடக்கிற மாதிரி இருந்தது. கூடவே நிழல் போல் பின்தொடரும் ஒரு அமைதி. பத்து மணிக்கெல்லாம் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டாள். தெய்வானை கிளம்பினாள். துணிப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். ராதிகாவும் சங்கரும் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
""நான் கிளம்பறம்மா..'' என்றாள் தெய்வானை.
""இன்னைக்கே கிளம்பணுமா'' அதிர்ச்சியோடு எழுந்தாள் ராதிகா.
""இன்னைக்கென்ன.. நாளைக்கென்னம்மா கிளம்பிக்கறன்..''
இருவருக்கும் என்ன பேசுவதென தெரியவில்லை.
""சரி.. சாப்பிட்டுட்டு போகலாமில்ல..''
""சுத்தமா பசியில்லம்மா.. போற வழியில எதாவது சாப்பிட்டுக்கறேன்.. கிளம்புட்டுங்களா''.
தெய்வானைக்கு கோயமுத்தூருக்கு பக்கத்தில் சிங்கநல்லூர்தான் சொந்த ஊர். ராதிகாவும் அதே ஊர்தான். அவளுக்கு குழந்தை பிறந்ததும் அதை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் என்ற போதுதான் ராதிகாவின் அம்மாதான் தெய்வானையிடம் கேட்டார்கள். ஒரு நொடி கூட யோசிக்காமல் தெய்வானை ஒத்துக்கொண்டாள். ஒரு நீண்ட வலிக்கு மருந்து கிடைத்தது போல் இருந்தது அந்த வாய்ப்பு. அன்றிரவே சென்னைக்குக் கிளம்பினாள்.
அடுத்த நாள். சென்னை. மருத்துவமனை. ராதிகாவின் குழந்தையை தன் கையில் வாங்கின போது தெய்வானைக்கு கண்கள் கலங்கிப்போயின. சட்டென தன் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக மாறிப்போனதை உணர்ந்தாள்.
அதற்குபிறகு குழந்தையின் அத்தனை தேவைக்கும் தெய்வானைதான் என்று ஆகிப்போனது. நித்தின் தவழ்ந்தது. விளையாடினது. அவன் எழுந்து விழுந்து நடந்ததென நித்தினின் சரித்திரம் தெய்வானையின் கைப்பிடித்தே நடந்தது. அவன் பேச தொடங்கியபோது முதலில் அழைத்தது "பாத்தி' என்று தெய்வானையைத்தான். அதில் ராதிகாவுக்கு கொஞ்சம் வருத்தம் என்றாலும் இத்தனை பார்த்துக் கொள்ளும் தெய்வானையின் மீது பெருமையும் வந்தது. நித்தின் மீதும் அந்த வீட்டின் மீதும் வைத்த அளவு கடந்த அன்பும் ஒருநாள் தண்டனையாகும் என்பதை தெய்வானை அப்போது நினைத்துப் பார்க்கவில்லை.
""இந்தாம்மா.. உங்களுக்கு சேரவேண்டிய பணம்..'' சங்கர் மொத்தமாய் தெய்வானையின் சம்பளப்பணத்தை ஒரு கவரில் வைத்து நீட்டினான்.
""எனக்கு எதுக்கப்பா பணம்.. நான் என்ன செய்யப்போறேன்.. நாலு வருசம் நல்லா கவனிச்சுட்டீங்க.. அது போதாதா..''
""உங்களுக்கு சேரவேண்டிய பணந்தான். நீங்களே எடுத்துக்குங்க.. உங்க கையில கொஞ்சம் பணம் இருந்தாதான் உங்களுக்கு மரியாதை உங்களுக்கு வேற என்ன உதவி வேணுன்னாலும் என் நம்பருக்கு கூப்பிடுங்க..'' என்று சங்கர் வீட்டு முகவரியையும் போன் நம்பரையும் ஒரு பேப்பரில் எழுதித்தந்தான்.
தெய்வானை அதை வாங்கிக்கொண்டாள். நித்தினை திரும்பிப்பார்த்தாள். நித்தின் ஒரு கார் பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
""நான் கிளம்பட்டுங்களா.. உங்களுக்கு அடுத்த குழந்தை பிறந்தா கண்டிப்பா என்னையே கூப்பிடுங்க..'' என்றதும் தெய்வானைக்கு அழுகை தாங்கமுடியவில்லை. நித்தினைப் பார்த்தாள். அவன் அருகில் வந்தாள். தெய்வானை சட்டென கண்ணீரை துடைத்துக் கொண்டாள். "என்ன பாட்டி?' என்கிறமாதிரி நித்தின் தெய்வானையின் கையை பிடித்தபடி எழுந்து பார்த்தான். அவனை வாரி அணைத்துக் கொண்டாள்.
""நல்லா படிக்கணும். இந்த பாட்டியை மறக்கக்கூடாது.. என்ன..''
நித்தின் ஏதோ புரிந்தவிதமாய் தலையை ஆட்டினான். தெய்வானை அவனை கீழே விட்டாள். வெளியே நடக்க ஆரம்பிக்க ராதிகாவுக்கும் கண் கலங்கியது. தெய்வானை ஒரு நிமிடம் தயங்கி நின்றாள்.
""என்ன வேணும் தெய்வானையம்மா?'' என்றாள்.
""அது வந்தும்மா..'' தெய்வானைக்கு கேட்க தயக்கமாய் இருந்தது.
""ம்.. சொல்லுங்க..'' என்றான் சங்கர்.+
""நித்தின் ஞாபகமா.. அந்த கரடி பொம்மை வேணும்.. எடுத்துக்கட்டா..?''
""இவ்வளவுதானா..?'' என்றபடி ராதிகா வேகமாய் போய் அந்த கரடி பொம்மையை எடுத்து வந்து தெய்வானையிடம் தந்தாள். அவள் அதை வாங்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். கொஞ்சம் ஆறுதலாக இருப்பதாகத் தோன்றியது. நன்றி சொல்லிக்கொண்டாள். வாசலில் இறங்கிச் சரசரவென திரும்பிப்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள். நித்தின் திடும்மென வீறிட்டு அழும் சத்தம் தெய்வானையின் காதில் நெடுந்தொலைவு கேட்டது.
தெய்வானை நடக்க ஆரம்பித்தாள். திசை புரியாத பாலைவனம் போல் தெரிந்தது நகரம். சத்தமற்ற சூன்யமாய் இருந்தது வெளி. தன் வீதியிலிருந்து மெயின் ரோட்டிற்கு வந்தாள். திடீரென தன் கணவனின் ஞாபகம் வந்தது தெய்வானைக்கு. தன் வாழ்க்கையை குடிக்கென அர்ப்பணித்த கணவன். தென்னைமரம் ஏறுகிற தொழில். ஒருமுறை முழு போதையில் மரத்தில் ஏறி நிதானமில்லாமல் விழுந்ததுடன் அவன் வாழ்க்கை நிறைவு பெற்றது.
பாண்டிபஜாரில் தெய்வானை நடக்க ஆரம்பித்தாள். அதற்குள் பரபரப்பான கடைத் தெரு. பஸ் மாறி கோயம்பேடு போய் அங்கிருந்து கோவை போவதாகத் திட்டம். இப்போது தெய்வானைக்கு தன் மகனின் ஞாபகம் வந்தது. ஒரே மகன். அப்பனுக்கு தப்பாத பிள்ளை. பதினாறு அடி பாய்ந்த குட்டி. அவனிடம் குடியுடன் திருட்டும் சேர்ந்திருந்தது. நண்பர்களுடன் ஒரு கார் திருட்டில் மாட்டி ஜெயிலுக்கு போனான். திரும்பி வந்தான். திருந்திவிட்டான் என தெய்வானை நினைக்க அவன் செய்த இன்னொரு நகை திருட்டு ஒரு கொலையில் முடிந்தது. தண்டனைக்கு பயந்து ஓடியவனின் திசை இதுவரை போலீஸýக்கும் தெரியாது. தெய்வானைக்கும் தெரியாது.
எல்லாம் நடந்து தெய்வானையின் வாழ்க்கை ஓர் அடர்ந்த காட்டிற்குள் போன போதுதான் ராதிகாவின் வீட்டிற்கு வேலைக்கு கூப்பிட்டார்கள். தன் வாழ்க்கையின் கேள்விக்குறி நிமிர்ந்த மாதிரி இருந்தது. உடனே ஒத்துக்கொண்டு சென்னை கிளம்பினாள். தெய்வானை வாழ்ந்தது என்று பார்த்தால் இந்த நான்கு வருடம் மட்டுந்தான். அதற்குள் முற்றுப்புள்ளி வந்தாயிற்று. மீண்டும் அதே பழைய நிலைமை. ஒரு நேரம் உட்காரச் சொல்லி சோறு போட ஒரு சொந்தமும் இல்லை. ஊருக்கு போனால் ஒதுங்க இருந்த அந்த குடிசையும் இப்போது இருக்குமா தெரியவில்லை. எதாவது வேலை கிடைத்துவிடும். வாழ்ந்துவிடலாம். ஆனால் நமக்கென யார் இருக்கிறார்கள்? எந்த உறவுக்காக இனி வாழப்போகிறேன்? தெய்வானைக்கு எதுவும் விளங்கவில்லை. அவள் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்திருந்தாள். தொலைதூரம் மிக மங்கலாய்த் தெரிய ஆரம்பித்தது.
""வா ஆயா.. வா.. பொம்மை எதாவது வாங்கிட்டு போ..''
ஒரு கடைக்காரரின் குரல் கேட்டுத்தான் தெய்வானை நிதானத்துக்கு வந்தாள். அந்த கடையை பிளாட்பார்மில் நின்றபடியே பார்த்தாள். அங்கே குழந்தைகளுக்கு தேவையான விதவிதமான பொம்மைகள் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன.
""என்ன பொம்மை வேணும் ஆயா.. உள்ள வாங்க..'' என கடைக்காரர் தெய்வானையை மீண்டும் கூப்பிட்டார்.
தெய்வானை சொன்னாள்.
""எங்கிட்ட பொம்மையிருக்கு.. அத வச்சு விளையாட ஒரு குழந்தை வேணும் கிடைக்குமா..?'' என்றபோது அந்த கடைக்காரன் தெய்வானை என்ன சொல்கிறாள் எனப்புரியாமல் அவளை வினோதமாய்ப் பார்த்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...