ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முகங்கள்: புத்​த​கத் தாத்தா!

புத்தகத் தாத்தா', "தோழர் தாத்தா', "சிகப்புச் சட்டை தாத்தா' என விதவிதமாய் ரா.சண்முகவேலுவைத் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர்கள் அழைக்கிறார்கள். 70 வயதாகும் அவர் ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் எனும் சி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:30 am

வை. இராமச்சந்திரன்

புத்தகத் தாத்தா', "தோழர் தாத்தா', "சிகப்புச் சட்டை தாத்தா' என விதவிதமாய் ரா.சண்முகவேலுவைத் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர்கள் அழைக்கிறார்கள். 70 வயதாகும் அவர் ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் எனும் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவர் செய்வது என்ன? தன் வீட்டு மாடியிலேயே மாணவர்களின் அறிவுப் பசியைப் போக்கும் வகையில் ஆயிரக்கணக்கான நல்ல புத்தகங்களை வைத்து இலவசமாகப் படிப்பகம் நடத்தி வருவதுடன் ஒவ்வொரு பள்ளியாகப் புத்தகக் கட்டுகளுடன் ஏறி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களைக் கொடுத்து படிக்க வைத்து வருகிறார்.

""கடையநல்லூர் அருகே உள்ள சங்கனாபேரி தான் எனது சொந்த ஊர். திருமணத்திற்குப் பின் கீழக்கலங்கலில்தான் குடியிருந்து வருகிறேன். பத்தாம் வகுப்பைக்கூட முழுமையாக நான் முடிக்கவில்லை. சிறு வயது முதலே தாய்மாமாவால் வளர்க்கப்பட்டேன்.

அவர் இடதுசாரி இயக்கத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர். அவர் போகிற கூட்டங்களுக்கெல்லாம் என்னையும் அழைத்துப் போவார். அப்படிப் போகும்போது தோழர் ஜீவாவின் பேச்சையும், ஆற்றலையும் நேரில் பார்த்தேன்.

அவரின் எளிமையும், கொள்கையும் எனக்குப் பிடித்துப்போயின. அதிலிருந்து அவரைப் பின்பற்றி அவரின் வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறேன். சிறுவயதிலிருந்து இதுவரை சிகப்பு சட்டை மற்றும் கைலி அணிந்து வருகிறேன்.

ஐக்கிய பொதுவுடமை இயக்கத் தோழர்கள் குணாளன், எல்.ராமர் ஆகியோரால் 1988-ல், ஜீவா படிப்பகம் தொடங்கப்பட்டது. முதலில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த படிப்பகம், தற்போது எனது வீட்டு மாடியில் இயங்கி வருகிறது. சுமார் 5000 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.  இங்கே வந்து படிப்பவர்களுக்கும், வீட்டிற்கு எடுத்துச் சென்று படிப்பவர்களுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை.

ஜீவா படிப்பகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது 23-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஒவ்வோர் ஆண்டு விழாவின் போதும் முக்கிய பிரமுகர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து பேச வைப்பது வழக்கம்.

எங்கள் விழாவில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி,திரைப்பட இயக்குனர் சேரன், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளனர்.

நான் படிப்பகம் நடத்தி வருவதோடு, புத்தகங்கள் வியாபாரமும் செய்கிறேன். சைக்கிளில் சென்று அருகில் உள்ள கிராமத்து மக்களையும் படிக்கத் தூண்டும் வகையில் புத்தம் புது புத்தகங்களை அவர்களது இல்லங்களுக்கே கொண்டு சேர்ப்பேன். பொதுமக்கள் அரிய வகை புத்தகங்கள் கேட்கும்பொழுது,எங்காவது தேடிக் கொண்டு வந்து தருவேன்.

பள்ளி மாணவர்களுக்கும் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களையும் தேடித் தருகிறேன். இதை மாணவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். இதன் காரணமாகவே மாணவர்கள் என்னைப் "புத்தகத் தாத்தா', "சிகப்பு சட்டைத் தாத்தா' என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

ஜீவா படிப்பகம் ஆண்டு விழாவை வருடந்தோறும் சிறப்பாக நடத்துகிறோம். இதில் சிறந்த பள்ளி ஆசிரியர்கள், சிறந்த மாணவர்கள், சிறந்த எழுத்தாளர்கள், சிறந்த சமூகத் தலைவர்கள், சிறந்த தம்பதியினர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறோம். அதோடு நாட்டுக்கு உழைத்த தியாகிகளுக்கும் அஞ்சலி செலுத்தி வருகிறோம்.

மேலும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்பனா கலைக்குழு அமைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். அதில் முற்போக்கு சிந்தனையுடன் கூடிய பாடல்களை நானே பாடி வருகிறேன்.

எனது பணிக்கு என் மனைவி லட்சுமி உள்பட பலர் உதவிக்கரமாக இருந்து வருகிறார்கள். வருகிற ஆண்டுகளில் ஜீவா பெயரில் ரத்ததான இயக்கமும், கண்தான இயக்கமும் ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்'' என்கிறார் புத்தகத் தாத்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.