ஆப்பிள் தேசம்-22: மூதாதையர்களைத் தேடுகிறார்கள்!
சுதந்திர தேவி சிலைத் தீவுகளுக்குச் செல்வதற்கான படகுத் துறையில் பெரும் கூட்டம் இருந்தது. படகில் ஏறக் காத்திருந்த சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்றார்கள். அப்போது ஒரு சுவையான நிகழ்ச்சியைக் கண்டேன். எனக்க


சுதந்திர தேவி சிலைத் தீவுகளுக்குச் செல்வதற்கான படகுத் துறையில் பெரும் கூட்டம் இருந்தது. படகில் ஏறக் காத்திருந்த சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்றார்கள்.
அப்போது ஒரு சுவையான நிகழ்ச்சியைக் கண்டேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த சீனக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, மெதுவாக ஒவ்வொரு ஆளாகத் தாண்டி வரிசையில் முன்னே போய் ஓர் இடத்தைப் பிடிக்க முயன்றுகொண்டிருந்தார். திடீரென்று இதைக் கவனித்த அந்த மூதாட்டியின் பத்து வயது பேத்தி, விரைந்து போய் அந்த மூதாட்டியைக் கையைப் பிடித்து இழுத்து வந்து பழைய இடத்தில் நிறுத்தினாள். நிறுத்திவிட்டு பாட்டிக்கு அறிவுரையும் சொன்னாள். இங்கே எங்கு சென்றாலும் வரிசையைப் பின்பற்றவேண்டும். மீறக்கூடாது. ஊரில் செய்வது போல இங்கே செய்யக் கூடாது என்று அந்த சிறுமி கறாரான தொனியில் பாட்டிக்கு எடுத்துச் சொன்னாள். அவள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவளாகத் தெரிந்தாள்.
படகு முதலில் எல்லிஸ் தீவுக்குச் சென்றது. அங்கே நானும் ராஜேஷும் இறங்கிக் கொண்டோம். வந்தேறிகளைப் பற்றிய அருங்காட்சியகத்துக்குச் சென்றோம். இவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் கதை சொல்லும் ஓர் அருங்காட்சியகத்தை இதற்கு முன்பு நான் கண்டதில்லை. அதன் ஒவ்வொரு அறையிலும் இருக்கும் விஷயங்களைப் பார்த்து, படித்துக் கொண்டே வந்தால், 1892லிருந்து 1954 வரை அதன் வழியே அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து வந்த ஒன்றரை கோடி பேரைப் பற்றியும் புரிந்து கொள்ள முடிகிறது. அன்றைய அமெரிக்கா எப்படி இருந்தது என்று உணர முடிகிறது. வரலாற்றைச் சாதாரணப் பார்வையாளருக்கு சுவாரஸ்யமாகச் சொல்வது எப்படி என்பதற்கான ஒரு பாடப் புத்தகம் போல அந்த அருங்காட்சியகம் இருக்கிறது.
எல்லிஸ் தீவின் வரலாற்றை முதலில் பார்ப்போம். மூன்றரை ஏக்கர் பரப்பளவில் வெறும் மண்ணாக இருந்த தீவு இது. 1700களில் இது கைதிகளைத் தூக்கில் போடும் இடமாக இருந்திருக்கிறது. அமெரிக்கப் புரட்சி சமயத்தில் இந்தத் தீவு சாமுவேல் எல்லிஸ் என்பவரின் சொத்தாக இருந்தது. அவருடைய வாரிசுகளிடமிருந்து இதை வாங்கிய அமெரிக்க அரசு இதை ராணுவ தளமாக மாற்றியது. பின்னர் இதைப் புலம் பெயர்ந்து அமெரிக்காவுக்குக் குடியேற வருவோருக்கான நுழைவு அனுமதிச் சாவடியாக மாற்றினார்கள். முதலில் அமைக்கப்பட்ட மர அலுவலகங்கள் தீவிபத்தில் நாசமானதும், பிரும்மாண்டமான கட்டடங்கள் கட்டப்பட்டன. விசாரணைக் கூடம், மருத்துவமனை, உணவு விடுதி என்று பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
மூன்றரை ஏக்கராக இருந்த எல்லிஸ் தீவுடன் இன்னும் இரண்டு தீவுகள் இணைக்கப்பட்டு மொத்தம் 27 ஏக்கராகிவிட்டது. தினசரி ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருந்தவர்களை விசாரித்து முடிவெடுக்க சுமார் 850 ஊழியர்கள் இங்கே பணியாற்றியிருக்கிறார்கள்.
புதுப் பொலிவுடன் விசாரணைச் சாவடி இருந்தது. ஆனால் ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பது போல சாவடிக்குள் இருந்த ஊழியர்கள் ஊழல் பேய்களாக இருந்தார்கள். புகலிடம் கோரி வருபவருக்கு அனுமதிச் சீட்டு தர, லஞ்சம் வாங்கினார்கள். அழகிய பெண்களாக இருந்தால், மாலையில் பக்கத்திலிருக்கும் ஓட்டல் அறையில் தன்னை தனியே சந்திக்க வரும்படி வற்புறுத்தினார்கள். மதிய உணவைத் தங்களிடம் வாங்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தி அதிக விலைக்கு விற்றார்கள். விசாரணைச் சாவடியிலிருந்து அமெரிக்காவின் இதர பகுதிகளுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கட்டுகளின் விலையைக் கூட்டி விற்றார்கள்.
இத்தாலியிலிருந்து 25 லட்சம் பேர், ரஷ்யாவிலிருந்து 19 லட்சம் பேர், ஹங்கேரி, ஜெர்மனி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா இங்கிருந்தெல்லாம் தலா ஆறு லட்சம் பேர், இன்னும் சின்ன நாடுகளிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கானவர்கள் என்று வந்து குவிந்தவர்களிடம் அவரவர் நாட்டு பணமும் நாணயங்களுமே இருந்தன. இவற்றை அமெரிக்க டாலருக்கு மாற்றும்போது தங்கள் இஷ்டப்பட்ட மதிப்புக்குப் பணம் கொடுத்து வந்தவர்களை ஏமாற்றினார்கள் விசாரணைச் சாவடி ஊழியர்கள்.
எல்லிஸ் தீவு ஊழல்கள் 1901}ல் அமெரிக்க ஜனாதிபதி தியடோர் ரூஸ்வெல்ட் காதுவரை எட்டியது. அவர் கொதித்துப் போய் கடும் நடவடிக்கைகள் எடுத்தார். எல்லா ஊழியர்களும் கூண்டோடு மாற்றப்பட்டார்கள்.
என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், எல்லிஸ் தீவில் அமெரிக்க அரசு நடத்தும் அருங்காட்சியகத்தில் தங்கள் அரசுத் துறையில் ஒரு காலத்தில் கடும் ஊழல்கள் நடந்தன என்று அரசே அதிகாரப்பூர்வமாக அதை விவரமாகப் பதிவு செய்திருப்பதுதான்.
முதல் உலக யுத்தம் நடந்த போது எல்லிஸ் தீவு விசாரணைக் கூடம் விசித்திரமான ஒரு சிக்கலைச் சந்திக்க வேண்டி வந்தது. அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. எனவே வெளியிலிருந்து புதியவர்களை அனுமதிக்க விரும்பவில்லை. அதே சமயம் ஐரோப்பாவிலும் மற்ற நாடுகளிலும் கடல் போக்குவரத்து யுத்தத்தால் தடை செய்யப்பட்டது. அமெரிக்காவுக்குள் நுழையவும் முடியாமல், தங்கள் நாட்டுக்குத் திரும்பவும் முடியாமல் 1500 ஜெர்மன் மாலுமிகள் எல்லீஸ் தீவில் அகதிகளானார்கள். சந்தேகத்தின் பேரில் இன்னும் 2200 பேர் தடுப்புக் காவலில் அங்கே இருந்தார்கள்.
எல்லிஸ் தீவு விசாரணைக் கூடம் 1916}ல் இரண்டாவது விபத்தைச் சந்தித்தது. அருகில் இருந்த ரயில் நிலைய சரக்குக் கூடத்தில் 14 பெட்டிகள் நிறைய டைனமைட் வெடி மருந்துடன் நின்றுகொண்டிருந்த ஒரு சரக்கு ரயிலைக் கிளர்ச்சியாளர்கள் கொளுத்திவிட்டார்கள். ஏற்பட்ட வெடி விபத்தில் விசாரணைக் கூடம் நாசமாகியது. ஆனால் எல்லாரும் தப்பித்தார்கள்.
1917}லிருந்து குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டன. மொத்தம் 33 வகையான வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சட்டம் போடப்பட்டது. புலம் பெயர்ந்து குடியேற வருவோர் படிப்பறிவற்றவராக இருக்கக் கூடாது என்ற விதி வந்தது. அமெரிக்காவுக்குக் குடியேற விரும்புபவரை அமெரிக்காவுக்கு வந்தபின் விசாரிப்பதற்குப் பதில், அவர் புறப்படும் நாட்டில் இருக்கும் அமெரிக்க தூதர் அலுவலகத்திலேயே விசாரித்து முடிவு செய்யலாம் என்ற நடைமுறை 1925}ல் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து எல்லிஸ் தீவில் வேலை மிகவும் குறைந்துவிட்டது. 1954}ல் இந்த விசாரணைக் கூடத்தை மூடினார்கள்.
அதன் பிறகு நடந்தவை மேலும் ஆச்சரியமானவை.
ஒன்றரை கோடி பேர் அமெரிக்காவில் நுழையக் காரணமாக இருந்த இடம் கவனிப்பாரில்லாமல், புறக்கணிக்கப்பட்டது. பிரும்மாண்டமான விசாரணைக் கூடமும் அதன் அறைகளும் பழுதடைந்து நாசமாகி பேய் வீடுகள் மாதிரி ஆகின. இப்படியே பதினோரு வருடங்கள் கழிந்தன. உபயோகிப்பார் இல்லாமல் நாசமாகி சிதிலமடைந்துபோன இடத்தை தேசிய சின்னமாக அறிவிக்க லிண்டன் ஜான்சன் அரசு முடிவு எடுத்தது. அதன்பிறகும் எதுவும் நடக்கவில்லை. ரொனால்ட் ரீகன் ஜனாதிபதியாக இருந்தபோது விளம்பரத்துறை கோடீஸ்வரர் லீ அயகோக்காவை அழைத்து எல்லிஸ் தீவு சாவடியைப் புனர் நிர்மாணம் செய்யக் கோரினார். கடைசியில் பொது மக்களிடமிருந்து நன்கொடை திரட்டி 17 கோடி டாலர் செலவில் விசாரணைக் கூடம் புதுப்பிக்கப்பட்டு 1990}ல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
எல்லிஸ் தீவு விசாரணைக் கூடம் கலகலப்பாக பரபரப்பாக இருந்த படங்கள் முதல், அது சிதிலமடைந்து கவனிப்பாரற்றுக் கிடந்த காட்சிகள், பின்னர் பழைய தோற்றத்துக்குப் புதுப்பிக்க எடுத்துக் கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைப் படங்கள் வரை அருங்காட்சியகத்தின் தனிப் பிரிவாகவே வைக்கப்பட்டுள்ளன. இதுதான் அமெரிக்கர்களின் தனித்தன்மை. ஒரு பழுதடைந்த கட்டடத்தைப் புதுப்பித்து வேறொன்றாக்கும்போது அந்த வரலாற்றையும் கூடவே சேர்த்து ஆவணப்படுத்திவிடுகிறார்கள்.
இந்த அருங்காட்சியகத்தில் இருக்குமொரு முக்கியமான பிரிவு வேர்களைத் தேட உதவும் பிரிவாகும். ஒவ்வொரு அமெரிக்கரும் ஆறு தலைமுறை பின்னால் போய் தேடத் தொடங்கினால், அதாவது சுமாராக 180 வருட காலத்தை அலசினால், அவருக்குக் குறைந்தது 126 மூதாதையர் இருப்பார்கள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஏழு தலைமுறை பின்னே அலசினால் மொத்தம் 252 மூதாதையர். கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி வரை மட்டும் போய் பார்த்தாலே 14 மூதாதையர் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
உங்கள் மூதாதையர் யார் என்று தேடுங்கள் என்று சொல்லி, அதற்கென்றே இங்கே ஒரு தனி மையம் வைத்திருக்கிறார்கள். 1924 வரை அமெரிக்காவுக்குள் வந்த மொத்தம் 2 கோடி 40 லட்சம் குடியேறிகளின் விவரங்கள் கணினிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்குப் பயணிகளை ஏற்றி வந்த 800 கப்பல்களின் முழு விவரங்களில் தொடங்கி, புகலிடம் தேடி வந்தவர் பெயர், குடும்பப் பெயர், இனம், கடைசியாக வசித்த நாடு ஊர், அமெரிக்காவுக்கு வந்த தேதி, அப்போதைய வயது, மண நிலை, பாலினம், எந்தக் கப்பலில் வந்தார், எந்த துறைமுகத்திலிருந்து வந்தார் என்ற விவரங்கள் அனைத்தும் இருக்கின்றன. அருங்காட்சியகத்தில் இதற்கென்றே 41 கணினிகள் இயங்குகின்றன. கூட்டம் கூட்டமாக இன்றைய அமெரிக்கர்கள் இவற்றில் தங்கள் மூதாதையரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு மாடியும் அவற்றில் ஒவ்வொரு அறையும் தகவல் களஞ்சியமாக இருக்கிறது. வீட்டிலிருந்து கொண்டு வந்த சொத்து என்ற பிரிவில், குடியேறிகள் கொண்டு வந்த பெட்டிகள், துணிகள், பழம் புகைப்படங்கள், சின்னச் சின்ன நினைவுப் பொருட்கள் என்று ஆயிரம் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லிஸ் தீவு வரலாறு என்ற பிரிவில் மண்ணும் சேறுமாக இருந்த தீவு எப்படி இப்போதைய நிலை வரை வந்தது என்ற முழு வரலாறும் படங்கள், கட்டட மாதிரிகள், மேப்கள் முதலியவற்றால் விளக்கப்பட்டிருக்கின்றன.
மெüனக் குரல்கள் என்ற தலைப்பில் இருக்கும் பிரிவில் கவனிப்பாரற்று பாழடைந்த எல்லிஸ் தீவுக் கட்டடங்களின் நிலையைப் புகைப்படங்களாகப் பார்க்கலாம். வரலாற்றுச் சின்னத்தைப் புதுப்பித்தல் என்ற பிரிவு எப்படி அத்தனையும் புதுப்பிக்கப்பட்டன என்பதைத் துல்லியமாக விவரிக்கிறது.
உச்சமான குடியேற்ற வருடங்கள் என்ற பிரிவில் மட்டும் பத்து அறைகள். இதில் குடியேறியவர்கள் நுழைந்தது முதல் ஒவ்வொரு நடப்பும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யார் யார் எந்தெந்த ஊர்களுக்குச் சென்றார்கள், அங்கே எப்படிப்பட்ட தொழில்களில் ஈடுபட்டார்கள், ஆரம்ப காலங்களில் அவர்கள் நடத்திய பத்திரிகைகள், பழைய தாய்நாட்டுடன் கொண்ட உறவு, பிரிவு, குடும்பங்கள் பிரிந்து கூடிய கதைகள், வந்தேறிகளுக்கும் ஏற்கனவே குடியேறி நிலை பெற்றுவிட்டவர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள், கலப்புகள் எனப் பல அம்சங்கள் இவற்றில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதில் பெரிய சோகம் என்னவென்றால் சுதந்திரதேவி சிலையைக் காணச் செல்லும் பெரும்பாலோர் வழியில் இருக்கும் எல்லிஸ் தீவு அருங்காட்சியகத்தைப் பார்க்காமலேயே போகிறார்கள் என்பதுதான்.
அமெரிக்கா குடியேறிகளின் தேசம் என்கிற நிலையில் இந்த அருங்காட்சியகம் அமெரிக்காவைப் புரிந்துகொள்ள மிக முக்கியமான ஒரு நுழைவாயில். இன்று குடியேறுபவர்களுக்கும் எல்லிஸ் தீவில் அன்று வந்து இறங்கிய குடியேறிகளுக்கும் என்ன வேறுபாடு என்று யோசிப்பது சுவையான ஆராய்ச்சியாக இருக்கும். அன்று வந்தவர்கள் யார் ?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...