விளையாட்டு: வாலிபால்தான் வாழ்க்கை!
நெடுநெடு உயரம்... துறுதுறு கண்கள்... அலைபாயும் கால்கள்... பரபரக்கும் ஷாட்கள் அடித்து எதிரணி வீரர்களைப் பதறவைக்கிறார் ஜனனி. சென்னை எஸ்ஐஇடி கல்லூரியின் வாலிபால் வீராங்கனை. எஸ்ஐஇடி கல்லூரியில் ஜனனி சேர்ந


நெடுநெடு உயரம்... துறுதுறு கண்கள்... அலைபாயும் கால்கள்... பரபரக்கும் ஷாட்கள் அடித்து எதிரணி வீரர்களைப் பதறவைக்கிறார் ஜனனி. சென்னை எஸ்ஐஇடி கல்லூரியின் வாலிபால் வீராங்கனை. எஸ்ஐஇடி கல்லூரியில் ஜனனி சேர்ந்த பின்னர், அணிக்கு இவர் தேடித் தந்த வெற்றிகள் ஏராளம்.
இளம்வயதிலேயே தமிழக மினி ஜூனியர் அணிக்காகவும், சப்-ஜூனியர் அணிக்காகவும் தேசியப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இப்போது சென்னை பல்கலைக்கழக அணிக்காகவும், எஸ்ஐஇடி அணிக்காகவும் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஏராளமான தேசியப் போட்டிகள், மாநிலப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியிருக்கிறார் ஜனனி. ஒரு மாலை நேரத்தில் எஸ்ஐஇடி கல்லூரி வளாகத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்.
வாலிபால் மீது ஆர்வம் வந்தது எப்படி?
நான் சென்னை மைலாப்பூரிலுள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில்தான் படித்தேன். நான் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளியில் மாணவிகள் வாலிபால் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது முதல் எனக்கும் வாலிபால் ஆர்வம் தொற்றிக் கொண்டுவிட்டது. அப்போதைய பயிற்சியாளர் குமார் என்பவரிடம் நான் வாலிபால் பழகினேன்.
விரைவில் நன்கு பயிற்சி பெற்று தமிழக அணிக்காகவும் தேர்வானேன். அன்று முதல் நானும், வாலிபாலும் ஒன்றாகிவிட்டோம். வாலிபால்தான் என்னுடைய வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன்.
வாலிபால் விளையாட்டில் நீங்கள் சாதித்தவை எவை?
பள்ளியில் படித்தபோது மினி தேசிய விளையாட்டில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்று 2-ம் இடம் பிடித்தோம். தேசிய சப்ஜூனியர் போட்டியில் 2-ம் இடம் பிடித்தோம். 2003, 2004 தேசிய சப்ஜூனியர் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றோம்.
2007-08-ம் ஆண்டில் தேசிய ஜூனியர் போட்டியில் தங்கப் பதக்கத்தை தமிழக அணிக்காக வென்றோம். 2009-ல் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற தேசிய இளையோர் (நேஷனல் யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில்) 2-ம் இடம்பிடித்தோம்.
நீங்கள் தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி செய்வீர்கள்?
காலையில் 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலையில் 3.30 முதல் மாலை 6 மணி வரையிலும் இடைவிடாத பயிற்சி இருக்கும். விடுமுறை நாள்களில் அதிக நேரம் பயிற்சிகள் இருக்கும்.
வாலிபால் விளையாட்டுக்காக சிறப்புப் பயிற்சியை எடுத்துக் கொள்கிறீர்களா?
வாலிபால் விளையாட்டுக்காக சிறப்புப் பயிற்சியை எடுத்துவருகிறேன். நெட் பிராக்டீஸ், வால்-ஜம்ப்பிங் போன்ற கடினமான பயிற்சிகள் அளிக்கப்படும். நாங்கள் செய்யும் இந்தப் பயிற்சிகள் போட்டியின்போது எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வாலிபால் தவிர என்ன விளையாட்டு விளையாடுவீர்கள்?
பாட்மிண்டன் ஆடுவேன். ஆனால் போட்டிகளில் கலந்துகொண்டது இல்லை.
வாலிபாலில் உங்களுடைய பொசிஷன் என்ன?
என்னுடைய உயரம் 1.73 மீட்டராகும். எதிரணி வீராங்கனைகள் அடிக்கும் ஷாட்களை தடுக்கும் பிளாக்கராக நான் செயல்படுவேன். பந்தை பிளாக்கிங் செய்வதற்கு உயரம் மிகவும் அவசியம். மின்னல் வேகத்தில் எதிரணி வீராங்கனைகள் அடிக்கும் பந்தை பிளாக் செய்து அவர்களது களத்துக்குள் விழச் செய்வதுதான் பிளாக்கர் வீராங்கனையின் பணியாகும். வாலிபால் விளையாட்டில் இது மிகவும் முக்கியமான பொசிஷன்.
இந்த விளையாட்டில் உங்களுக்குப் பிடித்த வீராங்கனைகள்?
தென்னக ரயில்வே அணிக்காக ஆடும் மினிமோள், ரம்யா ஆகியோரின் ஆட்டமுறைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களது ஆட்டத்திறன், நுணுக்கங்களைப் பார்த்து நானும் பழகுவேன்.
இப்போது யாரிடம் பயிற்சி எடுத்து வருகிறீர்கள்?
எஸ்ஐஇடி கல்லூரி வாலிபால் பயிற்சியாளர் ஓம்பிரகாஷிடம் கடந்த 3 ஆண்டுகளாகப் பயின்று வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் கல்லூரி அணிக்காக ஏராளமான பட்டங்களை வென்றுள்ளோம். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற எக்ஸ்னோரா மாநிலப் போட்டி, அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் நடந்த மாநிலப் போட்டியில் 2010, 2011-ல் சாம்பியன் பட்டம் வென்றோம்.
விளையாட்டில் உங்களுக்கு ஊக்கம் அளிப்பவர்கள் யார்யார்?
எங்களை நன்கு ஊக்குவித்து வருபவர்கள் கல்லூரியின் முதல்வர் நெüஷாத் தாவூத், உடற்கல்வி இயக்குநர் இந்திரா, பயிற்சியாளர் ஓம்பிரகாஷ் ஆகியோர்.
மேலும் நான் வெற்றி பெற்றுத் திரும்பும்போது எனது பெற்றோர் முரளி-செண்பகம் ஆகியோர் மிகவும் பாராட்டுவர். அதுதான் எனக்கு உற்சாக டானிக்.
எதிர்கால லட்சியம் என்ன?
இப்போது தேசியப் போட்டிகளில் தமிழக அணிக்காக ஆடி வருகிறேன். சென்னை பல்கலைக்கழக அணிக்காக ஏராளமான போட்டிகளில் கலந்துகொண்டுவிட்டேன். இதேபோல தமிழக சீனியர் அணிக்காக விளையாடவேண்டும். அதைத் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற்று உலகம் முழுவதும் சென்று வாலிபாலில் வெற்றிக்கொடி நாட்டவேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, லட்சியம், எண்ணம், கனவு எல்லாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...