இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விளையாட்டு: தடகள தங்கங்கள்!

சென்னை நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ உடற்கல்வி கல்லூரி வளாகம். விடியற்காலை 6 மணிக்கே 10 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர்களும், சிறுமியர்களும் தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். சர்வதேச தடகள பயிற்சியாளர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:29 am

வா.சங்கர்

சென்னை நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ உடற்கல்வி கல்லூரி வளாகம். விடியற்காலை 6 மணிக்கே 10 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர்களும், சிறுமியர்களும் தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். சர்வதேச தடகள பயிற்சியாளர் ஆர். நடராஜன் அவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு சர்வதேசத் தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், சென்னையில் 1995-ல் நடைபெற்ற தெற்காசிய சம்மேளன போட்டிகளில் பல பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது. சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்காக, கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா ஸ்போர்ட்ஸ் புரொமோஷன் அகாதெமியை நடத்தி வருகிறார்.

 எந்த வயதில் தடகள பயிற்சியைத் துவங்கினால் சரியாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

 இன்றைய சூழலில் குழந்தைகளை 5 வயது முதலே பயிற்சிக்கு அனுப்பிவிடுகின்றனர். ஆனால் 12 வயதில் தடகள பயிற்சியைத் தொடங்கினால் சரியாக இருக்கும்.

 உங்கள் அகாதெமியில் என்ன மாதிரியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன?

 இந்த அகாதெமி நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாமில் சேரும் மாணவ, மாணவியரை 10 முதல் 12 வயதுக்குட்பட்டோர், 12 முதல் 14 வயதுக்குபட்டோர், 14 முதல் 16 வயதுக்குட்பட்டோர், 16 முதல் 18 வயதுக்குட்பட்டோர் என நான்கு பிரிவாக பிரிக்கின்றோம். இவர்களுக்கு ஓட்டத்திறனை அதிகரித்தல், மனதை ஒருங்கிணைத்தல், இடுப்பெலும்பை வலுவாக்குதல், என வழக்கமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், யோகா, பிரணாயாமம் போன்ற பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சிகளைச் சர்வதேச பயிற்சியாளர்களான அன்னாவி, நிஜாமுதீன் ஆகியோருடன் சேர்ந்து அளித்து வருகிறேன். மேலும் வீரர்களின் ஓட்டம், பயிற்சி முறைகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டு பெரிய திரையில் அவர்களுக்குக் காட்டப்படுகின்றன. இதனால் அவர்கள் செய்யும் தவறுகளைத் தெரிந்துகொண்டு திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற வீடியோ அனாலிசிஸ் முறையிலான பயிற்சியையும் நாங்கள் அளிக்கிறோம்.

 தடகள வீரர்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது என்ன?

 தடகள வீரர்களுக்கு முக்கியமாக வலிமை, வளையும் தன்மை, வேகம், உடல் ஒத்துழைப்பு, இந்த நான்கையும் தொடர்ச்சியாக செய்யக்கூடிய ஆற்றல் ஆகிய ஐந்தும் முக்கிய தேவையாகும். இவை ஒருங்கே அமையப் பெற்றால் வெற்றிகரமான தட கள வீரராக ஜொலிக்க முடியும். இந்த ஐந்து முக்கிய விஷயங்களை இங்கே கற்றுத் தருகிறோம்.

 கோடை கால பயிற்சி முகாம்கள் மாணவ, மாணவிகளுக்குப் பலன் அளிக்கிறதா?

 நிச்சயமாக. 100 சதவீதம் பயனைப் பயிற்சி முகாம்கள் அளிக்கின்றன. படிப்புச் சுமை இல்லாத கோடைக் காலத்தில் மாணவ, மாணவிகள் முழுமையாக விளையாட்டின் மீது கவனத்தைச் செலுத்த முடிகிறது. பயிற்சி முகாம்களுக்கு வரும் மாணவ, மாணவிகளின் திறமையை எளிதில் கணக்கிட முடிகிறது. எனவே மாணவ, மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்கள் பலன்களையே அளிக்கின்றன.

 இதுவரை நீங்கள் நடத்திய முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள் எத்தனை பேர்?

 10 வருடங்களாக நடத்தி வருகிறோம். எங்கள் அகாதெமி நடத்தும் முகாமுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஐஓபி ஸ்பான்சர் செய்து வருகிறது. எங்கள் மீதுள்ள திறமை மீது நம்பிக்கை வைத்து இந்த ஆண்டில் ஏர்செல் நிறுவனமும், வேலம்மாள் சர்வதேச பள்ளியும் ஸ்பான்சர் செய்துள்ளன. பத்து ஆண்டுகளாக நாங்கள் நடத்திவரும் இக்கோடைக்கால பயிற்சி முகாமில், இதுவரை சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குப் பங்கு பெற்றுள்ளனர். இதில் ஏராளமானோர் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர். அவர்களில் நிவேதா, ஐஸ்வர்யா, சதீஷ், ரோஹன், சரவணன் உள்ளிட்டோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.

 உங்களின் எதிர்காலத் திட்டம் என்னென்ன?

 சிறுவயதில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்தான் பிற்காலத்தில் அவர்களைச் சர்வதேச வீரர்களாக வலம் வரச் செய்ய உதவுகின்றன. எனவே எதிர்காலத்தில் இந்தப் பயிற்சியை நாடு முழுவதும் அளிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்.

 சர்வதேச அளவில் இந்தியாவிலிருந்து தடகள வீரர்கள் அதிக அளவில் வராததற்கு என்ன காரணம்?

 போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததுதான் காரணம். வீரர்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகளை அளித்தால் அவர்கள் நிச்சயம் சர்வதேச அளவில் ஜொலிக்கத் துவங்குவர். மேலும், பள்ளி அளவிலேயே விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

 தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பல்கலைக்கழகத்தால் ஏதேனும் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா?

 விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே. வைத்தியநாதன், பல்வேறு புதிய படிப்புகளை துவங்கியிருக்கிறார். இது நிச்சயம் பலன் அளிக்கும். ஆனால் அதற்குச் சிறிது காலமாகும். இங்கு அளிக்கப்படும் புதிய படிப்புகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் நல்ல மாற்றம் வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.