விழிப்புணர்வு: வாக்குகள் விற்பனைக்கல்ல!
"தேர்தல்'.... என்கிற இந்த வார்த்தையைக் கேட்டாலே தமிழக மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் சலிப்பு வந்தது சில ஆண்டுகளுக்கு முன்புவரை. ஆனால், இன்றைக்கோ தேர்தல்... தேர்தல்.. தேர்தல் என்று ஏங்கும் நிலைக்கு வ


"தேர்தல்'.... என்கிற இந்த வார்த்தையைக் கேட்டாலே தமிழக மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் சலிப்பு வந்தது சில ஆண்டுகளுக்கு முன்புவரை. ஆனால், இன்றைக்கோ தேர்தல்... தேர்தல்.. தேர்தல் என்று ஏங்கும் நிலைக்கு வந்துவிட்டனர் நமது வாக்காளப் பெருங்குடி மக்கள்! தேர்தல் எல்லாம் பண விளையாட்டாகிவிட்டதுதான் காரணம்.
""அரசு அலுவலகங்களில் பணியைச் செய்வதற்கு லஞ்சம் பெறும் அரசு ஊழியர்களைக் குறைகூறி, தண்டனை வழங்க வேண்டும் என்று கூக்குரல் எழுப்பும் பொதுமக்களே (வாக்காளர்கள்) தங்களது வாக்குகளை பணத்துக்கு விற்பதும்கூட ஒருவித தண்டனைக்குரிய குற்றம்தானே?'' என்கிறார் "கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பின்' அமைப்பாளரும், சென்னை மாநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கண்காணிப்புக் குழு உறுப்பினருமான எம்.ஜி.தேவசகாயம்.
இந்த அமைப்பானது முன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி, தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.பி. அம்புரோஸ், ஐந்தாவது தூண் அமைப்பின் இயக்குநர் சுப்பிரமணி, "பாடம்' இதழின் ஆசிரியர் அ.நாராயணன் உள்ளிட்டோரை முக்கிய அங்கத்தினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
அண்மையில் இந்த அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற தென் மாவட்ட ஆர்வலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தேவசகாயம் நம்மிடம் பேசியதிலிருந்து...:
""இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு வாக்குக்கு லஞ்சம் அளிக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளன. இதை உணர்ந்துதான் ஒத்த கருத்துடைய நற்சிந்தனையாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து இந்த "கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பை' ஆரம்பித்துள்ளோம்.
2010-ம் ஆண்டு அக்டோபரில் இந்த அமைப்பை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒய்.எஸ்.குரேஷி சென்னையில் தொடங்கிவைத்தார். கடந்த 6 மாத காலமாக வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளைச் சென்னை, தருமபுரி, ஈரோடு, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தி வருகிறோம்.
குறிப்பாக, பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் இந்நிகழ்ச்சியை நடத்தி விழிப்புணர்வு அளித்து வருகிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் மூலம் பொதுமக்களிடம் நல்லதொரு மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம். அதற்கான உரிய வரவேற்பும் இருந்து வருகிறது.
தேர்தல் நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டு வருகின்றன.
வாக்குக்குப் பணம் பெறும் கலாசாரமானது, மக்களை ஊழலின் பங்குதாரர்களாக மாற்றியுள்ளது. வாக்குப் போடுவதற்கு பணம் பெறுவதால் மக்கள் தங்கள் மானத்தை இழப்பது மட்டுமின்றி, பலவித உரிமைகளையும் இழக்க நேரிடுகிறது. ஜனநாயகத்தை பணநாயகம் வென்றெடுக்கும் இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இப்போது விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். பல்வேறு சமூக அமைப்புகளில் இருந்தும் கல்லூரிகளிலிருந்தும் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
"வாக்குகள் விற்பனைக்கல்ல' என்பதுதான் எங்கள் கூட்டமைப்பின் தாரக மந்திரம். மக்கள் ஆவலோடு கலந்து கொண்டு கேட்கிறார்கள்.
மக்களைக் குறை சொல்லி பயனில்லை என்பது நாங்கள் செல்லும் இடத்தில் அவர்கள் காட்டும் ஆர்வத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஐநூறு ரூபாய் பணத்துக்காக வாக்குகளை விற்பதை தவறு என்று வலியுறுத்துகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன் பீகார் போன்ற மாநிலங்களில்தான் தேர்தலில் கேலிக்கூத்து நடப்பது போன்ற செய்திகள் வரும். ஆனால் இப்போது தமிழகத்திலும் நிலைமை மோசமாகி வருகிறது. இங்கு வாக்குக்குப் பணம் அளிக்கும் பார்முலா நம்மை பிற மாநிலங்களில் "முஃப்த்வாலா" (ஓசி வாங்குவோர்) என்று பேசும் அளவுக்கு நிலையை உருவாக்கியுள்ளது.
மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தலின் போது பிற மாநிலங்களில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து தேர்தலை நடத்தும் பணியில் ஈடுபடும் நிலையானது நமக்கு பெருமையில்லை.
மக்களுக்குத் தேர்தல் ஒன்றுதான் கிடைத்திருக்கும் பலமாகும். அதை வாக்களித்து சரியான நபரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்பதுபோல் மாணவர்கள் பலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இது மிகவும் மோசமான விளைவையே ஏற்படுத்தும்.
அவர்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவும், விரக்தி மனப்பான்மையும் இருப்பதே இதற்குக் காரணம். நல்ல கல்லூரிகளைத் தேடிச் சென்று சேரும் மாணவர்கள், நல்ல வேட்பாளர்களையும் தேடிச் சென்று வாக்களிக்க முன்வர வேண்டும். அந்த எண்ணம் மேலோங்கும்போது நல்லவர்களும் தேர்தல் களத்தில் நிற்க முன்வருவார்கள். இளம் கன்று பயமறியாது என்பதுபோல் இளைய தலைமுறையினர்தான் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்ற முடியும். அவர்கள் மத்தியில்தான் தலைவர்களை உருவாக்க வேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...