சேவை: நூறு ஆண்டுகளுக்கும் மேல் தொடரும் சேவை!
தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதும், வீட்டுக்கு வருவோருக்கு முதலில் ஒரு சொம்புத் தண்ணீர் கொடுத்து வரவேற்பதும் நமது பண்பாடு. இந்தப் பண்பாடு இன்றைக்கு நகர்ப்புறங்களில் மாறி வருகிறது. காரணம் நல்ல தண்ணீ


தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதும், வீட்டுக்கு வருவோருக்கு முதலில் ஒரு சொம்புத் தண்ணீர் கொடுத்து வரவேற்பதும் நமது பண்பாடு. இந்தப் பண்பாடு இன்றைக்கு நகர்ப்புறங்களில் மாறி வருகிறது. காரணம் நல்ல தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை அப்படி ஓர் இக்கட்டான நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல வைத்துவிட்டது. கிராமப்புறங்களிலும் நல்ல நீருக்காக நாம் அலைய வேண்டியிருக்கிறது.
இப்படிப்பட்ட கொடுமையான இக்காலத்தில் மதுரை அருகே சோழவந்தானில் ஆற்றில் ஓடுகால் அமைத்து இலவசமாக மக்கள் குளிப்பதற்கான வசதியைச் செய்து தந்துள்ளனர் ஓர் அமைப்பினர். அதுவும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தச் சேவையை அவர்கள் செய்து வருகின்றனர்.
"மலையாளம் கிருஷ்ணய்யர் தர்மங்கள் அறக்கட்டளை' என்ற அமைப்புதான் இந்த "இலவச குளியல் துறை' சேவையைச் சத்தமில்லாமல் செய்து வருகின்றனர். இந்த அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலராக உள்ள எஸ். சேதுரத்தினத்திடம் இதைப் பற்றிப் பேசினோம்.
""எங்கள் தாத்தா மாதவய்யரின் சித்தப்பா கிருஷ்ணய்யர் 1881-ம் ஆண்டு இந்த மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்டை ஏற்படுத்தினார். இந்த டிரஸ்ட், வேத சாஸ்திர பாடசாலை அமைத்து மாணவர்களுக்கு வேதக் கல்வியை அளிப்பது, அவர்களுக்கான உணவு, உறைவிடம், உடைகள் வழங்குவது ஆகியவற்றைச் செய்தது. மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலில் விழாக் கால உற்சவத்தின்போது வரும் தேசாந்திரிகளுக்கு அப் பகுதி சத்திர மண்டபத்தில் இருக்கச் செய்து உணவு வழங்கியது. சோழவந்தான் பகுதி வைகையாற்றில் மணலில் நீளமான ஊற்று தோண்டி - அதாவது ஓடுகால் அமைத்து - அந்தத் தண்ணீரைக் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் மக்கள் பயன்படுத்தும் வகையில் செய்தது. இப்படிப்பட்ட பணிகள் செய்வதற்காகவே இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.
அன்றைய காலத்தில் கிணறு வெட்டுவது ஒரு தர்மமாகவே கருதப்பட்டது. இதனால்,சோழவந்தானுக்கருகில் உள்ள ஊர்களான வாடிப்பட்டி, குட்லாடம்பட்டி பகுதியில்கூட எங்கள் தாத்தா கிணறு வெட்டியுள்ளார்.
அக்காலத்தில் ஆற்றில் ஊற்றுத் தோண்டி அந்த நீரை மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இதனால், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களுடைய முன்னோர் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் காலப் போக்கில், வேதசாஸ்திரப் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் குறைந்துவிட்டனர். தற்போது பாடசாலையும், சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியரும் இருந்தும் மாணவர்கள் எதிர்பார்த்த அளவில் வராததால், இதன் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனினும், சோழவந்தானில் படித்துறை எதிர்புறம் உள்ள வைகையாற்றின் நடுவில் சுமார் 80 அடி நீளத்துக்கு நூற்றாண்டுக்கும் மேலாக இரண்டு ஓடுகால் போட்டு இச் சேவையைத் தொடர்ந்து செய்து வந்தோம்.
ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும்போது ஓடுகால் போடத் தேவையில்லை. மக்கள் நேரடியாக ஆற்றில் குளித்துக் கொள்வார்கள். ஆற்றில் தண்ணீர் வராத மற்ற நேரங்களில் இந்த ஓடுகால் செயல்பட்டு வந்தது.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் மேம்பால வேலை நடைபெற்றதால், ஓடுகால் போடுவதைத் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை.
இதனால், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரப் பகுதியில் இருந்து ஆற்றுக்குள் இறங்கிச் செல்லும் படித்துறைப் பகுதியில் இருந்த சிறிய இடத்தில் இலவசமாகப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குளியல் துறை அமைக்கத் திட்டமிட்டோம். அந்தப் பொது இடத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டோம். பொதுமக்களுக்குப் பயன்படுகிறது என்பதால், அந்த இடத்தை இலவச குளியல் துறையாக அமைப்பதற்கு பேரூராட்சிக் கவுன்சில் குழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளித்தது. பொதுமக்கள் குளிப்பதற்கு இலவச குளியல் துறை அமைக்கப்பட்டது.
கடந்த 2003-ம் ஆண்டில் சுமார் ரூ. 15 லட்சம் செலவில் ஒரு தனி கட்டடத்தில் ஆண்களும், பெண்களும் பயன்படுத்தும் வகையில் தனித்தனியாக குளியல் அறைகள் கட்டப்பட்டன.
சூரிய ஒளி ஆற்றலின் மூலம் மோட்டார் பம்ப் இயக்கப்பட்டு, தண்ணீர் மேல்தொட்டிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு குழாய்கள் மூலமாக பொதுமக்கள் குளிப்பதற்கு வழங்கப்படுகிறது. தினமும் சுமார் 500 பேர் வரை குளிக்கிறார்கள்.
சோழவந்தானில் வைகாசி மாதம் நடைபெறும் மாரியம்மன் திருவிழா போன்ற முக்கிய விழாக் காலங்களின்போது இதைவிட நிறையப் பேர் இக் குளியல் துறையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சோலார் முறையில் அமைப்பை நிறுவிட "கப்பார்ட்' (இஞமசஇஐக ஊஞத அஈயஅசஇஉஙஉசப ஞஊ டஉஞடகஉ'ந அஇபஐஞச அசஈ தமதஅக பஉஇஏசஞகஞஎவ) நிறுவனம் ரூ.3.25 லட்சம் நிதி வழங்கியது. அதைப் பயன்படுத்தி இந்த சிஸ்டம் நிறுவப்பட்டது.
குளிர்காலம் மற்றும் மழைக் காலங்களில் சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும். சோலார் மோட்டாரை இயக்க முடிவதில்லை. இதற்காக டீஸல் மோட்டாரைப் பயன்படுத்தி வருகிறோம். இதற்கான டீஸல் செலவு, பராமரிக்கும் ஊழியர் செலவு என ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. அதை டிரஸ்ட் நிதியில் இருந்து சமாளித்து வருகிறோம்.
தற்போது டிரஸ்ட்டுக்கான வருவாய் குறைவாக இருப்பதால் இந்தச் சேவையைத் தொய்வின்றி தொடர்ந்து நடத்த முடியுமா என்ற சிந்தனை எழ ஆரம்பித்துள்ளது.
குளியல் துறை கட்டடத்திற்கு மின் இணைப்பு இல்லாததால், இரவில் வரும் பாதயாத்திரை பக்தர்கள் குளிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
ஆகவே, பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இந்தக் குளியல் துறைக்கு மின் வாரியம் இணைப்பு வழங்கி உதவ வேண்டும். எங்களுடைய மக்கள் சேவையைத் தொடர்ந்து செய்ய மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மின் இணைப்பு வசதி மற்றும் அரசு நிதி உதவியைப் பெற உத்தேசித்துள்ளோம்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...