அது 15 மாடிகளும், மாடிக்கு நான்காக மொத்தம் 60 வீடுகளும் கொண்ட மிகப் பெரிய குடியிருப்பு. இவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது வீட்டின் வரவேற்பு அறை ஏற்கெனவே கலர் காகிதங்கள், ஜிகினாக்கள் எல்லாம் ஒட்டப்பட்டு ஒரு குழந்தையின் பிறந்த நாளை எதிர் கொள்ளத் தயாராகவே இருந்தது. ஓர் எட்டு வயது மதிக்கத்தக்க பையனும், பிறந்த நாள் கொண்டாடப் போகும் பெண்ணும் ""அப்பா....'' என்றபடி வீரகேசவனிடம் ஓடி வந்து, முத்தையா நிற்பதைப் பார்த்து தயங்கி நின்றார்கள். ""அங்கிளுக்கு ஷேக் ஹேண்ட் குடுங்க'' என்றான் வீரகேசவன். கை கொடுத்தார்கள்.