தாய்லாந்தின் "தண்ணீர் திருவிழா'

தாய்லாந்து என்றாலே "மசாஜ்'தான் நினைவுக்கு வரும். ஐரோப்பாவின் "அந்தப்புரம்' என அழைக்கப்படும் தாய்லாந்தில், மசாஜ் மட்டுமின்றி அந்நாட்டு
தாய்லாந்தின் "தண்ணீர் திருவிழா'
Updated on
2 min read

தாய்லாந்து என்றாலே "மசாஜ்'தான் நினைவுக்கு வரும். ஐரோப்பாவின் "அந்தப்புரம்' என அழைக்கப்படும் தாய்லாந்தில், மசாஜ் மட்டுமின்றி அந்நாட்டு பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் விதவிதமான வேடிக்கை திருவிழாக்களும் உண்டு. அத்தகைய திருவிழாக்களில் ஒன்று "சோங்ரன்' (SONGKRAN). இது ஹோலி பண்டிகையைப் போன்ற ஒரு வேடிக்கையான "தண்ணீர் திருவிழா'.

ஆண்டுதோறும் ஏப்ரல் 13 முதல் 15 வரை 3 நாள்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவின்போது நாம் பொங்கலுக்கு வீட்டைச் சுத்தம் செய்வதுபோல வீட்டைச் சுத்தம் செய்கின்றனர். வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்து குடும்பத்தினருடன் கூடி மகிழ்கின்றனர். கோயில்களுக்குச் சென்று வழிபாடும் நடத்துகின்றனர்.

 திருவிழாவில் முக்கியமானதும், வேடிக்கையானதும் "தண்ணீர் அடிக்கும்' கொண்டாட்டம்தான். தாய்லாந்து நாட்டு தெருக்களில் வயது வேறுபாடின்றி அனைவரும் தண்ணீர் வாளி, கேன், டப்பா, டிரம் என கையில் கிடைத்த பாத்திரங்களுடன் கூடி ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை வாரி இறைத்தும், துப்பாக்கி மூலம் மற்றவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்கின்றனர். சாலைகளில் செல்லும் யாருமே தப்பிக்க முடியாது. உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் தண்ணீர் அபிஷேகத்தை ரசிக்கின்றனர்.

 அதுமட்டுமின்றி, "டின் சோர் பாங்' என்ற சுண்ணாம்புத் தூளை சந்தனம் போன்று தண்ணீரில் குழப்பி ஒருவருக்கொருவர் கன்னத்தில் பூசி வாழ்த்து தெரிவிக்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் அவர்களுக்கும் சுண்ணாம்பு பசையைக் கன்னத்தில் பூசி ஆரவாரம் செய்கின்றனர். தண்ணீர் அடிப்பதாலோ, இந்த சுண்ணாம்பு பசையை பூசுவதாலோ யாரும் கோபப்படுவதில்லை. எல்லோரும் ரசித்து திருவிழாவை கொண்டாடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

 தாய்லாந்தின் புத்தாண்டு ஏப்ரலில்தான் தொடங்குகிறது. கோடைகாலமான இந்த நாள்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில்தான் இந்த தண்ணீர் அடிக்கும் திருவிழா. தண்ணீரின் குளிர்ச்சியை அதிகரிக்க அதில் ஐஸ் கட்டிகளையும் சேர்த்துக் கொள்கின்றனர். அந்த ஐஸ் தண்ணீரை உடலில் பீய்ச்சி அடித்தால் எப்படி இருக்கும்? அது ஒரு திரில் அனுபவம்.

 தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகர வீதிகளில் எங்கு பார்த்தாலும் "தண்ணீர் அடிக்கும்' கூட்டம்தான். அதிலும் சிலோம் சாலை பகுதியில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு திரண்டிருக்கும் இளைஞர்கள் கூட்டத்தில் ஒருவர் சிக்கிக் கொண்டால் முழுவதும் நனைந்துதான் வெளியேற முடியும்.

தண்ணீர் அடிப்பது மட்டுமல்ல. அந்த பகுதியில் காதை பிளக்கும் இசைக் கச்சேரிகளுடன் நடனமாடி தூள் கிளப்புகின்றனர்.

 கூட்டத்திற்கு நடுவே சாலையோரங்களில் தண்ணீர், சுண்ணாம்பு தூள், குளிர்பானங்கள், தண்ணீர் துப்பாக்கி, பீர் என வியாபாரமும் ஜோராக நடைபெறுகிறது. தெருவோர விருந்துகளும் உண்டு. இளைஞர்களும், இளம் பெண்களும் தண்ணீரில் நனைந்து கொண்டே வியாபாரத்தையும் பார்த்துக் கொள்கின்றனர்.

 ஒரு பக்கத்தில் இயந்திரம் மூலம் தண்ணீரை நுரையாக்கி தலையில் கொட்டுகின்றனர். இளைஞர்களும், இளம்பெண்களும், அந்த நுரையை உடலில் ஏந்திக் கொண்டு ஆட்டம் போடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

 கெளசான் சாலையில் உள்ள மக்களாட்சி நினைவிடப் பகுதியில் ஒரு பெருங் கூட்டம். சிலோம் பகுதியில் இளைஞர் கூட்டம் என்றால் இங்கே பெரியவர் கூட்டம். வரிசைகட்டி நிற்கும் திருவிழா கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

 புத்தாண்டை வரவேற்க ஏன் இப்படி தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்கின்றனர்? தண்ணீரின் சுத்திகரிக்கும் தன்மை புனிதமாக கருதப்படுகிறது. ஒருவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால் அவருடைய வாழ்வில் கடந்த காலத்து துன்பங்களையும், துரதிர்ஷ்டங்களை கழுவி சுத்திகரித்துவிட்டு புத்தாண்டில் புதுவாழ்வையும், அதிர்ஷ்டத்தையும் வரவேற்க தயார்படுத்துவதன் அடையாளம்தான் இந்த தண்ணீர் அடிக்கும் பழக்கம் என்கின்றனர் தாய்லாந்து மக்கள்.

திருவிழாவின் முதல் நாளை தேசிய முதியோர் தினமாக அனுசரிக்கின்றனர். அந்த நாளில் பெற்றோர்களிடமும், பெரியோர்களிடமும் அவர்களது உள்ளங்கையில் வாசனை திரவியம் கலந்த தண்ணீரை ஊற்றி இளையவர்கள் ஆசி பெறுகின்றனர்.

இரண்டாவது நாளை குடும்ப நாளாக அனுசரிக்கின்றனர். அன்று அதிகாலையில் அனைவரும் எழுந்து குளித்து முடித்து புத்த துறவிகளுக்கு தானம் செய்து ஆசி பெறுகின்றனர். அன்றைய நாளின் எஞ்சிய பகுதியை குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி விருந்துகளுடன் கொண்டாடுகின்றனர்.

 திருவிழாவின் முக்கியமான  வழிபாட்டு நிகழ்வுகளில் ஒன்று புத்தர் வழிபாடு. வீடுகளிலும், கோயில்களிலும் உள்ள புத்தர் சிலைக்கு வாசனை திரவியம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, தாமரை மலர் படைத்து, ஊதுபத்தி கொளுத்தி வழிபாடு நடத்துகின்றனர். சிலர் புத்தர் சிலைகளை வீதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.

 "சோங்ரன்' திருவிழா முதலில் வட தாய்லாந்து பகுதியில்தான் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின் தாக்கத்திற்கு ஆளான பர்மிய மக்களால் மெல்ல மெல்ல தென் தாய்லாந்துக்கு பரவி பிறகு 20-ம் நூற்றாண்டின் மத்திய காலத்திற்கு பிறகு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போது இந்த தண்ணீர் திருவிழா மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

திருவிழாவையொட்டி மூன்று நாள்களும் அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.  அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. எனினும் முக்கியமான இடங்களில் உள்ள உணவு விடுதிகள், மால்கள் திறந்திருக்கின்றன.

தண்ணீர் திருவிழாவை கொண்டாடும் இடங்களில் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நிகழுவதில்லை.  போலீஸ் பாதுகாப்பு பெரிதாக இல்லை.

புத்த துறவிகள், முதியவர்கள், கைக் குழந்தைகள் ஆகியோர் மீது தண்ணீர் அடிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு உண்டு. அதேபோன்று

பாதுகாப்பு கருதி மோட்டார் சைக்கிளில் செல்வோர் மீதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் மீதும் தண்ணீர் அடிக்க கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com