தலை நிமிரவைத்த தமிழர்!

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தேன்.
தலை நிமிரவைத்த தமிழர்!
Updated on
4 min read

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தேன். சிங்கப்பூர் நிகழ்ச்சிகளுக்குச் சென்றபோதெல்லாம் அங்குள்ள அறிஞர்களை, படைப்பாளிகளை, அமைப்புக்களை வழிநடத்தும் தலைவர்களைச் சந்தித்து உரையாடுவதில்தான் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளோம். இம்முறையும் எம்மை அழைத்த எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பனிடம் சிங்கப்பூரின் முன்னாள் குடியரசுத்தலைவர் எஸ்.ஆர்.நாதன் அவர்களைச் சந்திக்க தக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.

""அவருக்கு வயது 91. உடல்நிலை பாதிப்படைந்துள்ளார். இன்னும் பல காரணங்களால் அவரை சந்திக்க வாய்ப்புக் கிடைப்பது மிகவும் கடினம். இருப்பினும் நீங்கள் மிகவும் வலியுறுத்துவதால் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்கிறேன். உங்கள் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் பொதுவாழ்வுச் செயல்பாடுகள் குறித்து விரிவாக எழுதி அனுப்புங்கள். முயற்சிப்பதற்கு அவை தேவைப்படுகின்றன'' என்று தொலைபேசியில் ஆண்டியப்பன் கூறினார். அவர் கேட்டதையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பி வைத்தேன்.

இருப்பினும் சிங்கப்பூர் சென்று இரண்டுநாட்கள் கழித்து நான் சென்ற நிகழ்ச்சியில் பேசி முடித்த பிறகு தமிழகம் திரும்புவதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் சந்திக்க நேரம் ஒதுக்குவதாக முன்னாள் அதிபரின் அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்தது.

முன்னாள் அதிபரின் இல்லத்திற்குக் காரில் அழைத்துச் செல்லப்பட்டேன். சமீபத்தில் அதிபரின் "உழைப்பின் உயர்வு' சுயசரிதையைப் படித்திருந்தேன். போகும் வழியெங்கும் இதே சிந்தனை.

ஆடம்பரமற்ற வீடு.

அதிபர் எங்களை வரவேற்றார். நாற்காலியில் அமர்ந்தவுடன் எம்மை அறிமுகப்படுத்தினர் . உடனே, அதிபர் ஓர் அழகான பையில் ஏதோ ஒரு பொருளைப் போட்டு எனக்கு அன்பளிப்பாக அளிக்கும் வகையில் கொடுத்தார். அந்தப் பையை விரித்துப் பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சிக்கு ஆட்பட்டேன். "உழைப்பின் உயர்வு' என்ற அதிபரின் சுயசரிதைப் புத்தகம் அந்தப்பையில் இருந்தது.

'An unexpected Journey: Path to the Presidency' என்பது அதிபர் எழுதிய ஆங்கில சுய சரிதை நூல். அதன் தமிழ் மொழி பெயர்ப்புதான் "உழைப்பின் உயர்வு' என்ற 679 பக்கங்கள் கொண்ட இப்பெருநூல். "உழைப்பின் உயர்வை' ஏற்கெனவே படித்திருந்ததால், அதில் சில பகுதிகள் நினைவுக்கு வந்தன.

அதிபரின் பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் எஸ்.இராமநாதன். இவரின் தந்தை செல்லப்பன். தாயார் அபிராமி. இவர் பிறந்ததே சிங்கப்பூரில். இவரது குடும்பம் இரண்டு தலைமுறைகளாகவே சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறது. இவரது மூதாதையர் தமிழகத்தின் எந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது. இவரது தாய்வழிப் பாட்டி தமிழகத்திலிருந்து வந்து நிரந்தர சிங்கப்பூர்வாசியாகி விட்ட ஒரு நகரத்தாரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதைத் தவிர வேறு உறவுகளையும் பூர்வீகத்தையும் பற்றி இவர் குடும்பத்தாருக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. இவரது சகோதரிகளின் பெயர் சிவயோகம், பருவதம், அமிர்தம், வள்ளி என்பனவாகும். என்னதான் தலைமுறை தலைமுறையாக இவர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்தாலும் அவர்களின் பெயர்கள் அனைத்தும் இத்தகையதே என்பதோடு இவர்கள் அனைவரின் வீடுகளிலும் தமிழில்தான் பேசுகின்றனர். இவர்களின் பேச்சில்கூட பல்லாண்டுகளாக வெளிநாட்டில் வாழ்பவர்களின் சாயலே துளிகூட இல்லை என்பது ஆச்சரியம்தான்.

அதிபரின் தந்தையார் வழக்கறிஞரின் எழுத்தராகப் பணியாற்றினார். சின்னஞ்சிறு வயதில் செல்வமும், செல்வாக்குமாக வாழ்ந்த அதிபரின் வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. பள்ளிப்படிப்பின் போதே எதிர்பாராத தந்தையாரின் தற்கொலை போன்ற சோகங்கள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்ததால் ஒரு கட்டத்தில் கல்வியைக்கூடத் தொடரமுடியாத நிலையில் வீட்டைவிட்டு வெளியேறினார்.

பள்ளி மாணவனாக இருந்தபோது செய்யாத குற்றத்திற்காக விசாரணையே இல்லாமல் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார். வேறு பள்ளியில் சேர்ந்து படிக்கும்போது அங்கும் வீண் பழிசுமத்தப்பட்டு, கொஞ்சமும் கருணையின்றி அவர் தரப்பு வாதத்தைக்கூட வாய்திறந்து கேட்காமல் அப்பள்ளியை விட்டும் விரட்டப்பட்டார்.

""அந்தச் சூழலில் உணவுக்காக மற்றவர்களிடம் கெஞ்சிக் கேட்டேன். சில சமயங்களில் அதிர்ஷ்டம் இருக்கும். மற்ற சமயங்களில் குழாய்த் தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டியதாயிற்று. இப்போது நான் இரவுநேரங்களில் சொகுசான வாகனத்தில் பயணம் செய்யும்போது, இருட்டும்வரை சுற்றித் திரிந்தது, யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்காமல் தூங்குவதற்காக ஓர் இடத்தைத் தேடி அலைந்தது போன்றவை பற்றிய பழைய நினைவுகள் என் மனதில் நிழலாடுகின்றன'' என்று அதிபர் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

இத்தனை சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து, தொடர்ந்து சோர்வின்றி உழைத்து பின்னர் ஒரு கட்டத்தில் தனது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னம்பிக்கையோடு களத்தில் இறங்கி கல்விநிலையங்களில் சேர்ந்து, சிறந்த முறையில் படித்து முன்னேறியவர்தான் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன். படிக்கும்போதே ஊர்மிளா என்ற வங்காளப் பெண்ணைக் காதலித்து பல்லாண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார்.

""எப்படிப் படிப்பது என்பதை பல்கலைக்கழகம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. கற்றல் என்பது ஒரு பழக்கமாயிற்று. நடப்பு விவகாரம், சமகால அரசியல் நிகழ்வுகள், சமுதாயப் பிரச்னைகள் முதலிய எது பற்றியதாக இருந்தாலும், கற்றல் என்பது அறிவைத் தேடும் தொடர்ச்சியான வேட்கை. எனக்குத் தெரியாதது எவ்வளவோ இருக்கிறது என்பதை உணர்ந்தேன். பல்கலைக்கழகப் படிப்பிற்குப் பிறகும், என்னிடம் இருந்த படிக்கும் ஆர்வம், தொடர்ந்து படிக்கும் பழக்கம் எனது பிற்கால வேலைகளுக்குப் பேருதவியாக இருந்தது'' என்று அதிபர் தனது வரலாற்றுக் குறிப்பில் கூறியுள்ளார்.

பட்டறிவும் படிப்பறிவும் இரண்டறக் கலந்த, ஆர்வமும் ஈடுபாடும் இணைந்த, சமுதாய அக்கறையோடு சுயமாகச் சிந்தித்துச் செயல்படுகிற மனிதராகத் திகழும் இவர் சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் மிகவும் சிறுபான்மை இனமான தமிழினத்தில் பிறந்து அந்த நாட்டின் ஆகப்பெறும் அதிபராக உயர்ந்துள்ளார். திறமை, தகுதி இருக்குமானால் சிறுபான்மை என்பதற்காக ஒதுக்கப்படும் போக்கு இல்லாதது சிங்கப்பூரின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.

மருத்துவமனைப் பணியாளர், கடலோடிகளின் ஆலோசகர் போன்ற சின்னச் சின்னப் பணிகளில் தொடங்கி, பொதுப்பணித்துறை ஊழியர், தொழிற்சங்கப் பிரதிநிதி என்ற அடுத்தடுத்த கட்டத்திற்குள் நுழைந்து சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் இயூ-வின் கவனத்தில் பதியும் அளவுக்கு தனது இடையறாத உழைப்பால் உயர்ந்தார் எஸ்.ஆர்.நாதன். தனது தகுதி மற்றும் தனித்திறன்களை பன்மடங்கு அரிதின் முயன்று வளர்த்துக் கொண்டதாலும், இவரது வித்தியாசமான அணுகுமுறை போன்ற பண்பு நலன்களின் காரணமாகவும் சிங்கப்பூரின் உளவுத்துறை அலுவலர், மலேசியா-அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான தூதர் போன்ற மிகஉயர்ந்த பொறுப்புக்களை வகித்து அவற்றை மிகச்சிறப்பாகவும் நிறைவேற்றினார்.

மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதராகப் பணியாற்றியபோது ஏராளமான சவால்களையும் மிகவும் சிக்கலான பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியவராக விளங்கினார். அவற்றை அவர் மிகுந்த திறமையோடும் சாமர்த்தியத்தோடும் எதிர்கொண்டு வெற்றிகண்டார். அப்பிரச்னைகளைத் தீர்த்து வைத்து சிங்கப்பூருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்த செயல் அன்றைய பிரதமர் லீ குவான் இயூ வை மிகவும் கவர்ந்தது. இவ்வாறான அவரது தொடர்ந்த சிறப்புமிக்க பணிகளால் சிங்கப்பூரின் மக்கள் தலைவர் லீ குவான் இயூ வின் அணுக்கமான நட்பையும், நன்னம்பிக்கையையும் பெற்றார். முன்னதாக 1970களில் லீ குவான் இயூ மேற்கொண்ட மிக விரிவான அதிகாரபூர்வ உலகப்பயணத்தில் அவருடன் சென்ற குழுவில் இடம்பெற்ற ஒரே வெளியுறவு அமைச்சக அதிகாரி என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

""இதனால் முக்கியத் தலைவர்களுடான அவருடைய சந்திப்பில் உடனிருந்தேன். நன்மை பல பெற்றேன்'' என்று அவரது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அறிவு-உழைப்பு-அனுபவம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையாக விளங்கிய தமிழர் எஸ்.ஆர்.நாதன் லீ குவான் இயூ அவர்களால் சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கு முன்மொழியப்பட்டார். ஆம்... லீ குவான் இயூ சிறந்த மொழியாம் தமிழுக்கு மட்டுமல்ல சிறந்த தமிழருக்கும் மகுடம் சூட்டியவர். 1999 இல் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.ஆர்.நாதனை எதிர்த்து எவரும் போட்டியிடாததால் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 2005 வரை 6ஆண்டுகள் அதிபராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால் மீண்டும் அதிபராகப் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டார். 2ஆவது முறையும் போட்டியின்றி அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டது இவரின் பெரும் சாதனையாகும். 2011இல் தனது 12 ஆண்டு கால அதிபர் பதவியை நிறைவு செய்யும்போது இவருக்கு வயது 87.

இத்தகைய மகத்தான வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஒரு மாபெரும் ஆளுமையைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது மறக்க முடியாததாகும்.

தமிழ்மொழியின் மீதும் ஒட்டுமொத்த தமிழர்களின் மீதும் மிகுந்த பாசமும் நேசமும் கொண்டவராக விளங்குகிறார் முன்னாள் அதிபர். தமிழர்கள் தனித்தன்மையோடு விளங்கலாமே தவிர, தனிமைப்பட்டு வாழக்கூடாது என்றும் பிற மக்களோடு கலந்து வாழும் விரிந்த வளமான மனப்பக்குவம் கொண்டவர்களாகத் திகழவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நீண்டநேரம் எத்தனையோ பிரச்னைகளைப்பற்றிப் பேசிவிட்டு நிறைவாக ""தமிழ்நாட்டின் அரசியல், சமூகம் மற்றும் பண்பாட்டுச்சூழல் எங்களைப் போன்ற தமிழகத்தை விட்டு வெளியே வாழுகிற தமிழர்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்கு வழிவகை செய்வதாகத் திகழ வேண்டும்'' என்று கூறினார்.

வாசற்படிவரை வந்து வழியனுப்பிய அதிபரிடம் விடைபெற்று வெளியே வந்தோம். எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், செயலர் சுப.அருணாசலம் ஆகியோர் எனக்கு நன்றி தெரிவித்தனர்.

""தக்க ஏற்பாட்டைச் செய்து அதிபரைச் சந்திக்கவைத்த உங்களுக்குத்தானே நான் நன்றி சொல்லவேண்டும்'' என்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com