ஆனந்தக் கண்ணீர்
அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்திலிருந்த வீட்டிலிருந்து வெளியே வந்து பார்வையைப் பதித்தான் ராமநாதன்.


அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்திலிருந்த வீட்டிலிருந்து வெளியே வந்து பார்வையைப் பதித்தான் ராமநாதன். அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதத் தலைகள். எந்த தளத்திலும் சிரித்த முகத்துடன் கூடிய தலைகள் இல்லை. சிரித்து விட்டால், உதவி கேட்பார்களோ என்று பயந்து அனைவரும் மறைந்து ஓடுகிறார்கள் போல என மனதுக்குள் நினைத்துக் கொண்டே மீண்டும் வீட்டுக்குள் சென்றான் ராமநாதன்.
பிஇ முடித்து கன்ஸ்டிரக்சன் தொழிலுக்கு வந்து 10 வருடம் நேர்மையாக உழைத்த அவனைப் பாராட்டி அவனது முதலாளி அவனுக்கு வெகுமதியாக கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பு இது.
சென்னைக்கு அவன் வரும் போது கொண்டு வந்தது வெறும் பிஇ பட்டமும், மாமா கொடுத்த சில ஆயிரங்கள் மற்றும் பரிந்துரை கடிதம் மட்டும்தான்.
மாமாவின் பரிந்துரைக்கு மறுப்பேதும் இன்றி வேலை கொடுத்தார் அந்த கன்ஸ்டிரக்சன் முதலாளி. கிராமத்துச் சூழலில் அப்பா இன்றி அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்து 10 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது அம்மாவும் இறந்துவிட அனாதையான ராமநாதனை அரவணைத்து அழைத்துச் சென்றவர் அவனது தாய்மாமா வெற்றிவேல்தான். மாமாவும் அவரது வீட்டில் இருந்த 2 பையன்களுடன், ராமநாதனையும் மூன்றாவது மகனாகப் பாவித்து அவனைப் படிக்க வைத்தார்.
மாமாவின் அன்பால் வளர்ந்த ராமநாதனும் பிளஸ்-2 வில் நல்ல மதிப்பெண் பெற்றான். இருப்பினும் அவனது கனவான பி.இ. சிவில் படிக்க வைக்க மாமாவால் பணம் புரட்ட முடியவில்லை. ஆனாலும், எப்படியோ ராமநாதனை நல்ல கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்து, வேலையும் வாங்கிக் கொடுத்து விட்டார்.
எண்ணங்கள், மனதுக்குள் ஓட்டமெடுக்க,
""காலையிலேயே என்ன எழவெடுத்த கனவோ? தெரியலை. பிள்ளைங்கள ஸ்கூலுக்கு கிளப்பாம என்ன சிந்தனையில இருக்கீக?''
என்ற வசைமொழி கேட்க, எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்டு நிகழ்காலத்துக்கு வந்த ராமநாதன் பிள்ளைகளைக் கிளப்ப தயாரானான்.
""இன்னைக்கு எங்க அத்தை வர்ராக. நீங்க ஆபிஸ் போகும் போது அப்படியே பிள்ளைகள ஸ்கூலுக்கு கொண்டு விட்டுருங்க. மத்தியானம் கறி எடுத்து கொடுத்து விடுங்க. அத்தை பிரியமாச் சாப்பிடும்.''
மனைவி சொன்னதை மனதுக்குள் புகுத்தி பிள்ளைகளை பைக்கில் ஏற்றிய ராமநாதனுக்கு மீண்டும் மாமாவின் நினைப்பு வந்தது.
வேலை செய்த இடத்தில் தனக்கு கீழ் பணி
புரிந்த பத்மாவை விரும்பி, அவளது விருப்பப்படியே கோயிலில் திருமணம் செய்து கொண்டு மாமாவின் முன் நின்ற ராமநாதனைப் பார்த்து மாமா எதுவும் சொல்லவில்லை.
அத்தையைப் பார்த்து, ""பாயசத்துடன் சமையல் செய். இலை வாங்கி வருகிறேன்'' என்ற வார்த்தையுடன் சென்ற அவரை, இப்போது பார்க்கச் செல்வதென்றாலும் கூட மனைவியின் அனுமதியுடன்தான் செல்ல வேண்டிய நிலை. அத்தைக்கு உடம்பு சரியில்லை. நகரத்து டாக்டரிடம் காட்டலாமா என ஒருமுறை தொலைபேசியில் மாமா கேட்க, அத்தை வருவதை விரும்பாத மனைவி பத்மா, ""இப்பல்லாம், நகரத்துக்காரங்களே, கிராமத்து மருத்துவத்துக்கு மாறி வராக'' எனச் சொல்லி தொலைபேசியை வைக்க, அத்துடன் மாமாவுடனான தொலைபேசி பேச்சும் முடிவுக்கு வந்தது.
""அப்பா ஸ்கூல் வந்துடுச்சி'' என்ற பிள்ளைகளின் சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தியவனின் மனம் எண்ணவோ ஓடிக்கொண்டுதான் இருந்தது. எத்தனையோ உதவிகள், தான் இந்தளவுக்கு வளர்ந்த காரணம், இப்படி அவனுக்காக மாமா செய்த ஒவ்வொன்றும் அவனது மனதை கரைத்து கண்ணில் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் அவன் தனிமையில் இருக்கும் போது மாமாவை நினைத்து அழுவது நடந்து கொண்டிருந்தாலும், பத்மா அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்வதில்லை.
ஆபிஸ் முடிந்து மாலையில் வீடு திரும்பிய ராமநாதனுக்கு, காத்திருந்தது இன்னோர் அதிர்ச்சி. பத்மாவைப் பார்க்க வந்த அவளது அத்தை,""கிராமத்திலிருந்த வீடு என்னாச்சு?'' எனக் கேட்க, அந்த கேள்வி பத்மாவின் மனதில் ரீங்காரமிட்டு இறுதியில் கணவனிடம் கண்டிப்பாக வெளிவந்தது.
""உங்க மாமா இருக்கிற அந்த வீட்டில உங்க அம்மாவுக்கும் பங்கு உண்டுல்ல. நல்ல மனுசன்னா உங்க மாமாவே உங்களுக்கு கொடுத்திருக்கணும். அவர் எங்க அப்படி கொடுப்பாரு?''
எனப் பேச. என்றுமே கை நீளாத ராமநாதனின் கை, அன்று அவளின் முகத்தைப் பதம் பார்த்தது. கடும் வார்த்தையால் திட்டிய ராமநாதன், பத்மாவின் அத்தையையும் விட்டு வைக்கவில்லை.
பைக்கை எடுத்து உதைத்து கிளப்பிய ராமநாதன் சென்னையின் சந்து பொந்துகளில் நுழைந்து நடுநிசியைக் கடந்து வீட்டிற்குள் நுழைந்த போது பத்மாவின் அத்தைக்காரி இல்லை. பிள்ளைகளும் தூங்கிவிட்டிருந்தன. இரவு உணவு சாப்பிடாமல் அழுதபடி சுவரில் சாய்ந்திருந்த மனைவியிடம், ""நாளை போய் மாமாவை பார்த்துப் பேசலாம்'' என்று கூறிவிட்டு சாப்பிடப் பிடிக்காமல் தலைசாய்த்தான்.
மண்புழுதி படிந்த தெருக்கள் எல்லாம் பேவர் பிளாக்காக மாற்றப்பட்டு கிராமத்து மணம் சற்று மாறத் தொடங்கியிருந்த கிராமத்துக்குள் நுழைந்து, தான் ஓடி விளையாடிய தெருவை நோட்டமிட்டபடி மனைவி, பிள்ளைகள் பின்னே வர முன்னே சென்ற அவனை, அவன் வயது ஒத்தவர்கள், ""ராமா எப்ப வந்த? நல்லாயிருக்கியா? மாமாவை பார்க்க வரவே இல்லையே?'' என விசாரிக்க அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு மாமாவின் வீட்டுக்குள் வந்தான்.
மாமா கொட்டகைக்குள் நின்ற மாடுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தார்.
அத்தை உடம்பு சரியில்லாமல் திண்ணையில் படுத்திருந்தாள். இவனைப் பார்த்ததும் நோயை மறந்து எழுந்த அத்தை பிள்ளைகளை கட்டிக் கொண்டு அழுதாள்.
மாமா வழக்கம் போல், ""செüக்கியமா?''
என்ற ஒற்றை வார்த்தையுடன் சாப்பிடுவதற்கு இட்லி வாங்க கடைக்குச் சென்றார்.
சாப்பிட்ட பின் மாமாவிடம் மெதுவாக வீட்டைப் பற்றி பேச்செடுத்தாள் மனைவி. ""இந்த கிராமத்திலேயே அந்தக் காலத்துல கார வீடு நம்ம வீடுதாம்மா. விவசாயம் இல்லை. வருமானம் இல்லை. உன் வீட்டுக்காரனையும் சேர்த்து 3 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க ரொம்ப சிரமப்பட்டாச்சு. பி. இ. படிக்க ஆசைப்படுதானேன்னு அந்த வீட்டை வித்துதாம்மா அவனைப் படிக்க வைச்சேன். அதை வாங்கினது ராமநாதனோட முதலாளிதாம்மா. அதனாலதான் அவர் வேலையும் போட்டுக் கொடுத்திருக்காரு. அவரு கிராமத்தில வீடு கட்டற வரைக்கும் என்னை வீட்டை பார்த்துக்கிட சொல்லியிருக்காரும்மா.''
மாமாவின் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் சுருக்கிட்டது ராமநாதனுக்கு. எப்படித்தான் அப்படி ஒரு வேகம் வந்தது என்று தெரியவில்லை.
"" மாமா, உங்களையும், அத்தையையும் கூட்டிட்டு போகத்தான் வந்தேன். எந்த பேச்சும் பேசக்கூடாது. நீங்க வராம நான் போகப் போறதில்லை.''
ராமநாதனுடைய இந்த ஆவேசப் பேச்சில் அமைதியானாள் அவன் மனைவி. மீண்டும் பஸ்சில் திரும்பிய போது ராமநாதன் கண்ணில் மீண்டும் கண்ணீர். ஆனால், அது ஆனந்தக் கண்ணீர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...