அசத்தும் பெண்கள்!

புதுச்சேரி ஆரோவில் நகரை அடுத்த எடையான்சாவடி கிராமத்தைச் சேர்ந்த ராஜகுமாரி தலைமையிலான மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களும் எல்இடி பல்புகளைக் கொண்டு அலங்கார விளக்குகளைச் செய்து அசத்தி வருகினர்.
அசத்தும் பெண்கள்!

புதுச்சேரி ஆரோவில் நகரை அடுத்த எடையான்சாவடி கிராமத்தைச் சேர்ந்த ராஜகுமாரி தலைமையிலான மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களும் எல்.இ. டி. பல்புகளைக் கொண்டு அலங்கார விளக்குகளைச் செய்து அசத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த முயற்சியில் ஈடுபட்டுவரும் ராஜகுமாரிக்கு அவரது கணவர் ஜெயகுமார் பக்க பலமாக இருந்துவருகிறார்.

இந்தச் சாதனையை நிகழ்த்திவரும் ராஜகுமாரியிடம் ஓர் சந்திப்பு:

தங்கள் சுய தொழில் முன்னேற்ற அனுபவத்தைக் கூறுங்களேன்?

எங்கள் கிராமத்தைச் சேர்ந்தோர் விவசாயத் தொழிலாளர்கள்தான். ஆரோவிலில் இருந்த சில வெளிநாட்டவர்கள் எங்களுக்கு சர விளக்கு, தொங்குவிளக்குகளைத் தயாரிக்கப் பயிற்சி அளிக்க முன்வந்தனர். மின்சார
விளக்குகள் என்றதும் கிராமத்துப் பெண்களான நாங்கள் தயங்கினோம். ஆனால், அவர்கள் விளக்குகளைத் தயார் செய்கிறபோது, மின்சாரம் பயன்படுத்த வேண்டிய அவசியம்இல்லை. செய்துமுடித்தவுடன் பிளக்கை பொருத்தினால், விளக்குகள்எரியும் என்று தைரியம் கொடுத்து, பயிற்சியும் அளித்தனர்.

உங்கள் தயாரிப்புப் பொருள்களின் சிறப்பு அம்சங்கள் என்ன?

வழக்கமாக, சரவிளக்குகளில் ஒயரில் பல வண்ணங்களில் சின்னஞ்சிறு பல்புகள் இணைக்கப்பட்டிருக்கும். அதை பிளக்கில் பொருத்தியவுடன் பல்புகள் ஒளிரும்.

ஆனால் நாங்கள் தயாரிக்கும் சர விளக்குகளில் கனச் செவ்வக, கனச் சதுர வடிவ டிரான்ஸ்பரன்ட் பெட்டிகள் போல இருக்கும்.

அவற்றின் உள்ளே எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன, சுவிட்சில் பொருத்தி ஆன் செய்ததும், பல வண்ண அலங்கார விளக்குகளைப் போல அவை ஒளிரும். சுமார் ஒன்றரை மீட்டர் நீளமுள்ள ஒரு சரத்தில் ஆறு பல்புகள் ஒளிரும். இதேபோல, எட்டு, பத்து, பன்னிரெண்டு, பதினைந்து பல்புகள் கொண்ட சர விளக்குகளையும் தயாரிக்கிறோம்.

ரூ. 250-இல் தொடங்கி ரூ.600 வரை நீளத்துக்கு ஏற்ப விலை வேறுபடுகிறது.

மெல்லிய கம்பியைக் கொண்டு கனச் சதுர வடிவத்தை உருவாக்கி, அதன் மீது பிரத்யேகமாகக் காகிதத்தைப் பொருத்துகிறோம். இயற்கையான மலர்களைப் பறித்து, அவற்றை புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையில் வைத்து நன்றாக உலர வைக்கிறோம்.

நன்கு உலர்ந்த மலர்களை ஏற்கெனவே செய்துவைத்திருக்கும் கனச் சதுர, செவ்வக வடிவங்களின் ஆறு பக்கங்களிலும் கோந்து மூலம் ஒட்டி விடுகிறோம். அதன் மீது மெல்லிய துணியை ஓட்டி, நன்றாக உலர்ந்த பிறகு, அதன் ஒரு பக்கத்தின் நடுவில் எல்.இ.டி. பல்பைப் பொருத்துவோம். அலங்கார சர விளக்கு ரெடி.

ஒரு பலூனை கால்பந்து அளவுக்கு ஊதி, அதன் மீது பலூனே வெளியில் தெரியாதபடி அடர்த்தியாகநூலைக் கட்டுவோம். அதன் மீது கோந்து தடவி சுமார் எட்டு மணி நேரம் காய விடுவோம். அதன்பிறகு, பலூனுக்குள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றிவிட்டாலும், பலூன் உருவத்திலேயே அதுஇ ருக்கும். அதற்குள்ளே எல்.இ.டி. பல்பை பொருத்திவிடுவோம். அது வண்ணமயமாக ஒளிரும்.

வருவாய் எப்படி இருக்கு?

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த அலங்கார விளக்குகளைத் தயாரித்துக் கொடுக்கிறார்கள். இதன்மூலமாக, அந்தப் பெண்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. இப்போது அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.

தேவையான பொருள்களை எங்கே வாங்குகிறீர்கள்?

விளக்குச் சரங்களுக்குத் தேவையான காகிதம், கம்பி, துணி போன்றவற்றை புதுச்சேரியிலேயே வாங்கிவிடுவோம். எல்.இ.டி. பல்புகள், ஒயர், பிளக் போன்றவற்றை வாங்க வாரம் ஒருமுறை சென்னைக்குச் சென்று வருவோம். கரூரில் இருந்து பலூன் விளக்குகளுக்கான பல வண்ண நூல்களை வாங்கிக் கொண்டு வருவோம்.

விற்பனை எப்படி இருக்கிறது?

இந்த விளக்குகளில் நாங்கள் எல்.இ.டி. பல்புகளைப் பயன்படுத்துவதால், மின்சாரத் தேவை மிக, மிகக் குறைவு என்பது மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். இந்த பல்புகளின் ஆயுள்காலம் மிக அதிகம். புத்தாண்டு, கிறிஸ்துமஸ், நவராத்திரி போன்ற விழாக்காலங்களில் இதுபோன்ற சரவிளக்குகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

ஆரோவில் வளாகத்திலேயே இந்த அலங்கார விளக்குகள் விற்பனை செய்யும் மையம் ஒன்று உள்ளது. பல்வேறு ஊர்களிலும் நடக்கும் சுய உதவிக் குழுக்கள், கைவினைப் பொருள்கள் கண்காட்சியிலும் இவர்கள் பங்கேற்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com