'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 138
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நரசிம்ம ராவை அகற்ற வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடன் இருந்த மூத்த தலைவர்கள், அவருக்கு மாற்று யார் என்பதில் ஒருவருக்கொருவர் முரணாக இருந்தனர்.


காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நரசிம்ம ராவை அகற்ற வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடன் இருந்த மூத்த தலைவர்கள், அவருக்கு மாற்று யார் என்பதில் ஒருவருக்கொருவர் முரணாக இருந்தனர். நரசிம்மராவைப் பொருத்தவரை, அவர் பதவி விலகத் தயாராகவே இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அதற்குக் கால அவகாசம் வேண்டும் என்று விரும்பினார். தலைவராக இருந்தால்தான், தனக்கு எதிரான வழக்குகளை எதிர்கொள்ள முடியும் என்பதுதான் காரணம்.
கட்சிக்குள் இருந்த தனது எதிரிகள் ஒவ்வொருவரும் தலைவர் பதவியின் மீது குறி வைத்திருப்பதைப் புரிந்துகொண்ட நரசிம்ம ராவின் புத்திசாலித்தனம், போட்டியில் இல்லாத ஒருவரின் பெயரைக் களமிறக்கியது. ஏ.கே. அந்தோணி கட்சித் தலைவரானால் அவருக்காக தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக நரசிம்ம ராவ் செய்தியைக் கசியவிட்டார். அவரது அந்தோணி அஸ்திரம் குறி தவறாமல் பாய்ந்தது.
சில மாதங்களுக்கு முன்னர்தான் கேரளத்தில் அந்தோணி தலைமையிலான ஆட்சி தேர்தலில் தோல்வியடைந்து, ஈ.கே. நாயனார் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைத்திருந்தது. ஏ.கே. அந்தோணிக்கு அப்பழுக்கில்லாத அரசியல்வாதி என்கிற பிம்பம் இருந்தது. அவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட.
ஏ.கே. அந்தோணியிடம் நரசிம்ம ராவ் கட்சித் தலைமையை ஒப்படைக்க இருக்கிறார் என்றவுடன், தங்களது அரசியல் வருங்காலம் அத்துடன் அஸ்தமனமாகிவிடும் என்கிற அச்சம் கருணாகரன், சரத் பவார், பல்ராம் ஜாக்கர், ராஜேஷ் பைலட் உள்ளிட்ட போட்டியாளர்கள் அனைவரையுமே பற்றிக்கொண்டது. நரசிம்ம ராவின் திட்டம் வெற்றிகரமாக வேகம் எடுத்தது.
அதுவரை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நரசிம்ம ராவ் விலக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவர்கள் தங்களது கோரிக்கையை மாற்றினார்கள். காங்கிரஸ் காரியக் கமிட்டியைக் கூட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கான தேதியைத் தீர்மானிக்க வேண்டும் என்று அவர்களது கோரிக்கை மாறியது. அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் புதிய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலை அறிவிக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக இருந்தது.
காங்கிரஸ் எப்படி உள்கட்சிக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததோ, அதேபோல ஆளும் ஐக்கிய முன்னணி அரசும் கடுமையான முரண்பாடுகளுக்கு இடையில்தான் செயல்பட்டு வந்தது. ஆட்சி அதிகாரமும் பதவியும்தான் ஐக்கிய முன்னணியில் இருந்த கட்சிகளை ஒட்ட வைத்திருந்தன.

ஒரு நாள் அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்துக்குப் போவதற்காக ஜன்பத் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். 10, ஜன்பத் என்பது சோனியா காந்தியின் வீடு என்றால் அதை ஒட்டிய 12, ஜன்பத் ராம் விலாஸ் பஸ்வானின் வீடு. தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார் ராம் விலாஸ் பஸ்வான். அப்போது அவர் ஜனதா தளத்தின் சார்பில் இடம் பெற்றிருந்தார்.
வீட்டு வாசலில் கூட்டம் அதிகமாக இருந்தது. முடிந்தால் சந்திப்போம் என்று நான் அந்த பங்களாவில் நுழைந்தேன். அப்படி உரிமை எடுத்துக் கொள்வதற்குக் காரணம் உண்டு. ஜனதா கட்சித் காலத்திலிருந்து எனக்கு அவர் அறிமுகமானவர் என்பதும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்புப் பேணுவதில் சிறந்த மனிதர் என்பதும் நான் உரிமை எடுத்துக் கொள்ளக் காரணங்கள்.
பாபு ஜகஜீவன் ராமுக்குப் பிறகு, பட்டியலின சமூகத்திற்குப் பல உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் ராம் விலாஸ் பஸ்வானாகத்தான் இருக்கும். ஏனைய சமூகத்தினரிடம் பகைமை பாராட்டாமல், அதே நேரத்தில் தனது சமூகத்தின் நன்மைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுப்பதும், போராடுவதும் ராம் விலாஸ் பாஸ்வானிடம் நான் பார்த்த சிறப்புகளில் சில.
பீகாரிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பலர் அவரை சந்திக்கக் காத்திருந்தனர். எனது அடையாள அட்டையை நீட்டியபோது, அமைச்சர் பஸ்வானின் உதவியாளர், ''அது தேவையில்லை. நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது மந்திரிஜியின் உத்தரவு...'' என்று சொன்னபோது, நெகிழ்ந்தேன்.
''உங்களை சற்று நேரம் காத்திருக்கச் சொன்னார். அவருடன் நீங்களும் வெளியே போக இருக்கிறீர்கள். பயணத்திலேயே பேசிக் கொள்ளலாம் என்று சொல்லச் சொன்னார்'' என்று உதவியாளர் தெரிவித்தார். அந்தக் காத்திருப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்தது.
அவரைச் சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்ததே தவிர குறையவில்லை. உள்ளே நுழைந்தது தவறாகிவிட்டதோ என்றுகூடத் தோன்றியது. அப்போது சிறு சலசலப்பு. அறையிலிருந்து வெளியே வந்த பஸ்வான், சகஜமாகக் கை குலுக்கி வரவேற்று, தோளில் கை போட்டபடி மற்றவர்களுடன் பேசிக்கொண்டே பங்களாவுக்கு வெளியே வந்தார்.
அவரது கார் வந்து நின்றது. மற்றவர்களுக்கு வணக்கம் கூறி விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறினார். என்னையும் அவருடன் பின் இருக்கையில் அமரச் சொன்னார். அந்த அம்பாசிடர் காரின் முன் இருக்கையில் அவரது தனி உதவியாளரும், பாதுகாப்பு அதிகாரியும் ஏறிக் கொண்டனர். கார் நகர்ந்தது.
''நாம் இப்போது எங்கே போகிறோம்?''
''எங்கேயும் இல்லை. இப்படியே, இந்தியா கேட், அவுட்டர் ரிங் ரோட் என்று சுற்றிவிட்டு, இங்கேயே திரும்பி விடுவோம். எந்தத் தொந்தரவும் இல்லாமல் பேச முடியும் என்பதால் நான் உங்களை காத்திருக்கச் சொன்னேன்'' என்று கூறிச் சிரித்தார் அமைச்சர் பஸ்வான்.
மத்திய ரயில்வே அமைச்சருடன் அடுத்த முக்கால் மணி நேரம் காரில் அளவளாவியபடி பயணித்த அந்த அனுபவத்தை எப்படி மறக்க முடியும்?
''ஐக்கிய முன்னணி ஆட்சி எப்படி இருக்கிறது?''
''காங்கிரஸில் குழப்பம் தொடரும் வரை இந்த ஆட்சியும் நீடிக்கும். எனது பக்கத்து வீடு அமைதியாக இருந்தால், இந்த ஆட்சியும் பிரச்னை இல்லாமல் இருக்கும்.''
''மாநிலக் கட்சிகளின் தயவில் ஜனதாதளம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது என்கிறார்கள்... அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

''நாம் நண்பர்களாகப் பேசுகிறோம். பேட்டியெல்லாம் வேண்டாம். உண்மையைச் சொல்வதாக இருந்தால், பிரதமர்களாக வி.பி. சிங், சந்திரசேகர்ஜிக்கு இருந்த மரியாதை தேவே கெளடாவுக்கு இல்லை. அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்தான். ஆனால், பிரதமர் பதவிக்குத் தகுதியானவராக அவரைப் பார்க்க முடியவில்லை. ஒரு வலிமையான தலைமை இல்லாத குறை தெரிகிறது.''
''எதை வைத்துச் சொல்கிறீர்கள்?''
''முலாயம் ஒரு பக்கம், லாலு ஒரு பக்கம், நாயுடு ஒரு பக்கம், கருணாநிதி ஒரு பக்கம் இழுக்கிறார்கள். போதாக்குறைக்கு காங்கிரஸூம் அவ்வப்போது உறுமுகிறது. பதவியேற்று ஒரு மாதம் ஆகிறது. இன்னும் அமைச்சரவையை முழுமையாக அமைக்க முடியவில்லை.''
''நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி?''
''ரயில்வே அமைச்சராக என்னால் முடிந்த அளவுக்கு எனது சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதற்கான அவகாசமாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். என்ன சொல்கிறார் நண்பர் அஜித் சிங்? அவரை சந்தித்தீர்களா?''
அதற்குப் பிறகு எங்களது பேச்சு அஜித் சிங், சந்திரசேகர், சுப்பிரமணியம் சுவாமி என்று திரும்பியது.
ராம் விலாஸ் பஸ்வானின் பின்னணி அசாதாரணமானது. பீகார் அரசியலில், லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் இருவரையும்விட அரசியல் அனுபவசாலி பஸ்வான்தான். அவர்கள் இருவரின் அரசியல் வெற்றிகளுக்கு வழிகோலியவரும் இவர்தான். வயதிலும் மூத்தவர்.
சட்டம் படித்து, பிகார் காவல்துறை அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ராம் விலாஸ் பஸ்வான், 1969-இல் களமிறங்கிய முதல் தேர்தலிலேயே சட்டப்பேரவை உறுப்பினரானவர். ராம் மனோகர் லோகியாவின் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பஸ்வான், 1974 ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மாணவர் தலைவராக அப்போதுதான் லாலு பிரசாத் யாதவ் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். நிதீஷ் குமாரின் அரசியல் பிரவேசமும் அப்போதுதான்.
அவசரநிலையின்போது 'மிசா'வில் கைது செய்யப்பட்டு வெளியே வந்த பஸ்வான், 1977 மக்களவைத் தேர்தலில் ஹாஜிபூர் தொகுதியில் 89.3% வாக்குகள் பெற்ற வெற்றி, அகில இந்திய சாதனை. ராஜ் நாராயணனின் சீடராக தேசிய அரசியலுக்கு வந்த பஸ்வான், ஜனதா கட்சியின் பிளவின்போது சரண் சிங்கின் ஆதரவாளரானார்.
தனது தந்தை உடல் நலம் குன்றியதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் ஐ.பி.எம். கணினி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த அஜித் சிங் இந்தியா திரும்பியபோது, அவரது உற்ற தோழராகவும், அரசியல் வழிகாட்டியாகவும் மாறினார் ராம் விலாஸ் பஸ்வான். அஜித் சிங் மூலம்தான் எனக்கும் ராம் விலாஸ் பஸ்வானுக்கும் அறிமுகமும் நட்பும் ஏற்பட்டது. 1980-களில் அஜித் சிங் - பஸ்வான் - சுப்பிரமணியம் சுவாமி கூட்டணி, சந்திரசேகரின் ஆசியுடன் ஜனதா கட்சிக்குத் தலைமை ஏற்றது.
1984 - இல் இந்திரா அனுதாப அலைத் தேர்தலைத் தவிர, தொடர்ந்து 9 முறைகள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஸ்வான், 2019-இல் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பழைய நினைவுகளில் ஆழ்ந்த எனது தோளைத்தட்டி, ''என்ன மெளனமாகி விட்டீர்கள்?'' என்று அவர் கேட்டபோது சுதாரித்துக் கொண்டேன்.
''ஒன்றுமில்லை. செளத்ரி சரண் சிங் உடல் நலமில்லாமல் இருந்தபோது, அவரைப் பார்க்க வந்த என்னை அஜித் சிங் உங்களுக்கு அறிமுகப்படுத்தியதை நினைத்துக் கொண்டேன்.''
''ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. அஜித்ஜி காங்கிரஸிலிருந்து விலகி விடுவார் என்று நினைக்கிறேன். அவரை முலாயம் சிங்கும், என்னை லாலு பிரசாத்தும், அரசியலில் வளர விடாமல் தடுப்பதில் குறியாக இருக்கிறார்கள். அதையும் மீறித்தான், எங்களது தனிப்பட்ட மக்கள் செல்வாக்கால் தாக்குப் பிடிக்கிறோம்!''
''ஜனதா தளத்தின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் நீங்கள்தான். கூட்டணிக் கட்சிகளை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?''
''மனம் திறந்து சொல்லட்டுமா? காங்கிரஸின் பலவீனத்திலும், பாஜகவுக்கு ஆதரவு இல்லாமையும்தான் எங்களது ஐக்கிய முன்னணி ஆட்சியைக் காப்பாற்றுகின்றன. காங்கிரஸ் பிளவுபடும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், எங்கள் ஜனதா தளம் நிச்சயமாக பிளவுபடும். லாலு யாதவ் தனிக்கட்சித் தொடங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.''
''அவர் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?''
''நான் ஜனதா தள நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இருப்பதை, யாதவரான லாலு யாதவ் எப்படி விரும்புவார்? தேவே கெளடா பிரதமர், முலாயம் பாதுகாப்பு அமைச்சர் என்பதெல்லாம்கூட அவரால் சகித்துக்கொள்ள முடியாது. தான் முதல்வராக இருக்கிறோமே என்று நினைத்து சந்தோஷப்படமாட்டார். லாலு யாதவ் எப்படிப்பட்டவர் என்பது எனக்குத்தான் தெரியும்.''
''நீங்கள் இருவரும் இணைபிரியாத கூட்டாளிகள் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.''
''அரசியலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறுகிறது. அதனால் இணைந்திருக்கிறோம். லாலு யாதவ் - நிதீஷ் குமார் - ராம் விலாஸ் பஸ்வான் கூட்டணி உடைந்தால் நாங்கள் தனிப்பட்ட முறையில் தேர்தலில் வெற்றி பெறலாமே தவிர, ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. இது லாலுவுக்குத் தெரியும்...''
ராம் விலாஸ் பஸ்வான், ஜகஜீவன் ராமுக்குப் பிறகு நீண்ட காலம் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தவர். ஆனால், கடைசிவரை அவருக்கு ஒரு நிறைவேறாத ஆசை இருந்தது. அதைப் பலமுறை என்னிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். நாங்கள் அவரது 12, ஜன்பத் பங்களாவுக்குத் திரும்பி, அவரிடம் நான் விடை பெற்றபோதும் அதைத் தெரிவித்தார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...