'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 165

காங்கிரஸின் இடைக்காலத் தலைவரான சீதாராம் கேசரிக்கு, சோனியா காந்தியின் இல்லத்திலிருந்து அழைப்பு வந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 165
Updated on
5 min read

காங்கிரஸின் இடைக்காலத் தலைவரான சீதாராம் கேசரிக்கு, சோனியா காந்தியின் இல்லத்திலிருந்து அழைப்பு வந்தது. காங்கிரஸ் தலைமையகத்தில் ஒரே பரபரப்பு. அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் அப்போது நடந்த பரபரப்புகளை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

எல்லோரையும்விடப் பதற்றத்தில் இருந்தவர் தலைவர் சீதாராம் கேசரிதான். அக்பர் ரோடு அலுவலகத்தில் இருந்து சோனியா காந்தியின் இல்லமான 10, ஜன்பத்துக்குச் செல்ல ஒரு பிரத்யேகப் பாதை உண்டு. அது நேரு குடும்பத்தினர் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துவது வழக்கம். அதனால், சீதாராம் கேசரி காரில் சுற்றி வளைந்துதான் சோனியாவை சந்திக்கச் சென்றார்.

முந்தைய நரசிம்ம ராவ் அரசில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த குலாம்நபி ஆசாத் மேற்கொண்ட சில ஒப்பந்தங்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார் அமைச்சர்    சி.எம். இப்ராஹிம். அடுத்த கட்டமாக ஏனைய அமைச்சர்களின் மீதும் விசாரணைகளை முன்னெடுத்துக் காங்கிரஸுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த தேவே கெüடா அரசு முயலக்கூடும் என்கிற சந்தேகம் வலுத்தது. சீதாராம் கேசரி வெளிப்படையாகவே தேவே கெüடா அரசை விமர்சிக்கத் தயங்கவில்லை.

நரசிம்ம ராவ் - சீதாராம் கேசரி
நரசிம்ம ராவ் - சீதாராம் கேசரி

"ஐக்கிய முன்னணி அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பலவீனம் காரணமாகவோ, நிர்பந்தம் காரணமாகவோ காங்கிரஸ் ஆதரவளிப்பதாக ஐக்கிய முன்னணி நினைக்கக் கூடாது. தேவை ஏற்படும்போது அரசியல் சூழ்நிலையைக் காங்கிரஸ் மறுபரிசீலனை செய்யும்'' என்கிற காங்கிரஸ் காரியக் கமிட்டியின் தீர்மானம், ஒரு விதத்தில் ஐக்கிய முன்னணிக்கு விடுத்த எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.

எம். எல். ஃபோத்தேதார்.
எம். எல். ஃபோத்தேதார்.

குலாம்நபி ஆசாத், ஜனார்தன் பூஜாரி, தாரிக் அன்வர், தேவேந்திர துவிவேதி உள்ளிட்ட பொதுச் செயலாளர்கள் அறையில் கூடி விவாதித்துக் கொண்டிருந்தபோது, தலைவர் சீதாராம் கேசரியின் கார் திரும்பி வந்தது. அதில் இருந்து சிரித்த முகத்துடன் சீதாராம் கேசரி இறங்கி வந்ததில் இருந்து, சந்திப்பு சுமுகமாகத்தான் இருந்தது என்பது தெரிந்தது. அவரது வரவுக்காக நான் உள்பட சுமார் இருபது பத்திரிகையாளர்கள் அலுவலக வாசலில் காத்துக் கொண்டிருந்தோம்.

நாங்கள் சற்றும் எதிர்பார்க்காமல், சீதாராம் கேசரி அவராகவே எங்கள் அருகில் வந்து பேசத் தொடங்கினார் - 

"சோனியாஜி கட்சி மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். கட்சியின் பல்வேறு நிலை அமைப்புகள் குறித்தும், செயல்பாடு குறித்தும் விசாரித்துத் தெரிந்து கொண்டார். ஒருசில ஆலோசனைகளையும் சொல்லி இருக்கிறார். அவரது வழிகாட்டுதல்படிதான் கட்சி செயல்படும் என்று அவருக்கு உறுதி கூறி இருக்கிறேன்.''

"அவர் முன்வைத்த ஆலோசனைகள் என்னென்ன?''

"அதையெல்லாம் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. அதை நாங்கள் நடைமுறைப்படுத்தும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்...''

"நீங்கள் வேறு ஏதாவது கேட்டீர்களா? அவர் அரசியலில் ஈடுபட விரும்புகிறாரா?''

சீதாராம் கேசரி.
சீதாராம் கேசரி.

"அதை நான் எப்படி சொல்ல முடியும்? காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராகும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். அவர் உறுப்பினராவதன் மூலம், அதிகாரபூர்வமாகத் தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும். அதனால் கட்சி மேலும் பலப்படும் என்று பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள் என்று அவரிடம் சொன்னேன். எங்கள் வேண்டுகோளை சோனியாஜி கண்டிப்பாகப் புறக்கணிக்க மாட்டார் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.''

அதற்கு மேல் அவரைப் பேசவிடாமல், செய்தித் தொடர்பாளர் வி.என். காட்கிலும், தேவேந்திர துவிவேதியும் உள்ளே அழைத்துச் சென்றுவிட்டனர்.

எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து வி.என். காட்கிலிடமிருந்து சோனியா - கேசரி சந்திப்பில் என்னதான் பேசப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். பெரும்பாலான நிருபர்களும், உடனடியாக செய்தி அடிப்பதற்காக அங்கிருந்து நகர்ந்து விட்டனர்.

நான் காத்திருந்தது வீண்போகவில்லை. காட்கில் தனது அறைக்குத் திரும்பியபோது, நானும் அவரைத் தொடர்ந்தேன்.

"என்னதான் பேசினார்களாம், என்னதான் நடக்கப் போகிறது?''

"பெரிதாக ஒன்றுமில்லை. முன்னாள் காங்கிரஸ்காரர்கள் அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவர் கலந்துகொள்ள இருக்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். காரியக் கமிட்டி உறுப்பினராகும் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகச் சொல்லி இருக்கிறார், அவ்வளவுதான்.''

அதைத் தொடர்ந்து சில நிமிஷங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தேன். தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் இல்லாத அந்தக் காலத்தில், தலைநகர் தில்லியில் "தில்லி மிட் டே' என்கிற மதிய நேர நாளிதழ் வெளிவந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு சிறுவன் அன்றைய "தில்லி மிட் டே' தினசரியை விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் அந்த தினசரியை வாங்கிப் பார்த்த நான் மயங்கி விழாத குறை.

ஷீலா தீட்சித்.
ஷீலா தீட்சித்.

காட்கில்ஜி என்னிடம் என்னவெல்லாம் சொன்னாரோ அதெல்லாம் அச்சு வாகனம் ஏறியிருந்தது. சீதாராம் கேசரி யாரிடமும் பேசவில்லை. அப்படியே யாராவது சொல்லி இருந்தாலும், இவ்வளவு குறுகிய இடைவெளியில் அந்தத் தகவல்கள் செய்தியாகி அச்சாகி இருக்க வழியில்லை. பிறகு எப்படி "தில்லி மிட் டே' இதழில் வெளியாகி இருக்கிறது என்று யோசித்தபோது, அதன் பின்னணி மனதில் பளிச்சிட்டது.

10, ஜன்பத்திலிருந்து சோனியா காந்தியின் உதவியாளர்கள், சீதாராம் கேசரி அழைக்கப் பட்டபோதே இந்தத் தகவல்களை எல்லாம் கூறி விட்டிருக்கிறார்கள்... சோனியா காந்தியின் அரசியல் பிரவேசம் திட்டமிடப்படுகிறது என்பதை அந்த ஒரு சம்பவத்தில் இருந்து நான் புரிந்து கொண்டுவிட்டேன்.

சோனியா - கேசரி சந்திப்பைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக அரசியல் நிகழ்வுகள் நகரத் தொடங்கின. ஜெயின் டைரி குற்றச்சாட்டில் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் இருந்து பதவி விலகி, காங்கிரஸிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய மாதவராவ் சிந்தியா மீண்டும் கட்சியில் இணைந்தார். 1993 மார்ச் மாதம், சூரஜ்குண்ட் காங்கிரஸ் மாநாட்டில் நரசிம்ம ராவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய, என்.டி. திவாரி தலைமையிலான கட்சியில் இருக்கும் எம்.எல். ஃபோதேதார், ஷீலா தீக்ஷித் இருவரின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

தனது ஆதரவாளர்களான அந்தத் தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று சீதாராம் கேசரிக்கு உத்தரவிட்டது சோனியா காந்திதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு சோனியா காந்தி கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி எது என்று தெரிந்தால், இன்றைய காங்கிரஸ்காரர்கள் அதிர்ந்து விடுவார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியையும் தன்னுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொன்னதை, சோனியா காந்தியே இப்போது மறந்திருக்கக்கூடும். இல்லாவிட்டால், மறந்துவிட நினைப்பார்.

1996 நவம்பர் 17-ஆம் தேதி, சோனியா காந்தி கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி, தில்லியில் நடந்த வீர சாவர்க்கர் பிறந்தநாள் விழா!

ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ஆம் தேதி, அவரது நினைவிடம் சாந்தி வனத்தில், பிரதமர் தேவே கெüடாவும், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவும் அஞ்சலி செலுத்தும்போது சந்தித்தனர். அவர்கள் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அதற்கு அடுத்த நாள் முதல், காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியின் அணுகுமுறையில் மிகப் பெரிய மாற்றம் தெரிந்தது. அவர் நேரடியாக நரசிம்ம ராவை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ முன்வரவில்லையே தவிர, தனது ஆதரவாளர்கள் மூலம் நரசிம்ம ராவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட முற்பட்டார். அதற்கும், சோனியா காந்தியுடனான அவரது நெருக்கத்துக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை.

தனது மக்களவைத் தொகுதியான ஒடிஸா மாநிலம் பெஹ்ராம்பூருக்குப் போகும் வழியில், மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் நிருபர்களை சந்தித்தார் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ். அவரிடம் நாடாளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வரும் என்று கேட்டபோது, "ஐந்தாண்டுகளுக்குப் பிறகு...' என்று பதிலளித்திருந்தார்.

"தொங்கு நாடாளுமன்றம் அமைந்தாலும் ஆட்சி அமைத்து, அரசு நடைபெறுவது இந்திய ஜனநாயகத்தின் வெற்றி. இந்த ஆட்சி திருப்தியளிக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளிப்பது சிரமம். அதே நேரத்தில், எங்களது அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் இந்த ஆட்சி தொடர்கிறது என்கிற அளவில் மகிழ்ச்சி. ஐக்கிய முன்னணி ஆட்சி ஐந்தாண்டு காலம் தொடராமல் போவதற்கு எந்தக் காரணமும் தெரியவில்லை'' என்கிற அவரது கருத்துக்குக் காங்கிரஸ் வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
நரசிம்ம ராவும் பிரதமர் தேவே கெüடாவும் ஒருவித ஒப்பந்தத்திற்கு வந்திருக்கிறார்கள் என்கிற சந்தேகம் சீதாராம் கேசரிக்கு எழுந்திருந்தது என்பதை நான் உணர்ந்தேன். அதை உறுதிப்படுத்துவதுபோல, சில நகர்வுகள் ஐக்கிய முன்னணி அரசால் முன்னெடுக்கப்பட்டன. குலாம்நபி ஆசாதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியே குறி வைக்கப்படுகிறார் எனும்போது ஆத்திரம் ஏற்பட்டதில் வியப்பில்லை.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டார் என்று சீதாராம் கேசரி மீது மதுரேஷ் என்பவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடைமுறைகளைத் துவக்கி இருக்கிறது என்பது தெரிந்தபோது, சீதாராம் கேசரி ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நரசிம்ம ராவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதால், பிரணாப் முகர்ஜியுடனான சீதாராம் கேசரியின் நெருக்கமும் குறையத் தொடங்கி இருந்தது. முன்புபோல, எல்லா பிரச்னைகளிலும் அவரைக் கலந்தாலோசிப்பதோ, ஏன் சந்திப்பதோகூட இல்லை என்கிற நிலைமை காணப்பட்டது. பிரணாப் முகர்ஜியும் அடிக்கடி கட்சி அலுவலகத்துக்கு வருவதைக் குறைத்துக் கொண்டுவிட்டார்.

செயின்ட் கிட்ஸ் வழக்கிலும் நரசிம்ம ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையன்றும் நான் நீதிமன்றம் சென்றிருந்தேன். இந்த முறையும் அவருக்குப் பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜிதான் ஜாமீன் அளித்தார். வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராவதற்கும் அவருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார் நீதிபதி பிரேம்குமார்.

அன்றைய வழக்கு விசாரணைக்கு பிரணாப் முகர்ஜி தனது மனைவியுடன் வந்திருந்தார். ஜகந்நாத் மிஸ்ரா, புவனேஷ் சதுர்வேதி உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் வந்திருந்தனர். நரசிம்ம ராவ் மீது தொடரப்பட்டிருந்த மூன்று வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததில் கூடியிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி.

ஜாமீன் கிடைத்துவிட்டதால், விரைவில் தொடங்க இருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரான நரசிம்ம ராவ் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்றுகூறி அவரை வாழ்த்தினார்கள். இவர்கள் இங்கே உற்சாகமாக இருந்தார்கள் என்றால், சீதாராம் கேசரி அணி, அந்தப் பதவியிலிருந்து நரசிம்ம ராவை அகற்றுவதற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தது.

காங்கிரஸில் மட்டுமல்ல, ஐக்கிய முன்னணி அரசிலும் மிகப் பெரிய பூகம்பம் ஒன்று வெடிக்கக் காத்திருந்தது. அந்த பூகம்பத்துக்குக் காரணமாக இருந்தவர் ஜி.கே. மூப்பனார்!
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com