ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெள்ளரிக்காய் சாப்பிடுவது ஆரோக்கியமா?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வெள்ளரிக்காய் சாப்பிடுவது ஆரோக்கியமா?

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் மனிதர்களுடைய ஆரோக்கியம் பல மடங்காக வளரும் என்று சமீபத்திய ஆராய்ச்சிக் குறிப்புகள் கூறுகின்றன.

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் மனிதர்களுடைய ஆரோக்கியம் பல மடங்காக வளரும் என்று சமீபத்திய ஆராய்ச்சிக் குறிப்புகள் கூறுகின்றன. இதை ஆயுர்வேதம் ஆமோதிக்கிறதா? தற்சமய ஆராய்ச்சி முடிவுகள் பண்டைய ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகளுடன் ஒப்பிட முடியுமா?

-ஞானசேகரன்,
திருவெறும்பூர்.

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நற்பயன்களைப் பற்றிய கருத்துகள் வரவேற்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன. அவற்றிலிருந்து சில குறிப்புகள்:

வைட்டமின் கே எனும் உயிர்ச் சத்து அதில் அதிக அளவில் அடங்கியுள்ளது. குக்கர்பிட்டே சின் 'இ'
எனும் எதிர்ஆக்ஸிகரணிகள் அதில் அதிகம் உள்ளதால், ஆழ்ந்த உறக்கத்தை இரவில் ஏற்படுத்துகிறது.

அழற்சி எதிர்ப்பை உருவாக்கும் 'வளவேநால்' எனும் 'வ்ய்செட்டின்' அதிலுள்ளதால் மூளையை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின்கள், தாதுக்கள், அத்தியாவசிய ஊட்டச் சத்துகள், குறைந்த கலோரி, குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் போன்றவற்றைக் கொண்ட அதனை இரவில் சாப்பிடுவதால் நாம் நன்மைகளைப்பெறுகிறோம்.

பலதரப்பட்ட ஆக்ஸிஜனேற்றிகள், தாவர ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ள அதனை உள்கொள்ளுவதால், உடல் ஆரோக்கியமானது மேம்படுகிறது.

இரவில் அதைச் சாப்பிடுவதால், உடலில் நீர்ச்சத்தானது பாதுகாக்கப்படுகிறது. அதிலுள்ள நீர்ச் சத்தால், தோல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை அமைதிப்படுத்தச் செய்கிறது. உறக்கத்தை மேம்படுத்தி உடல், மன ஓய்வுக்கான நிலையை ஏற்படுத்தித் தருகிறது. உடற்சூடு சீரான நிலையில் இருக்க உதவுகிறது.

அதிக நீர்ச்சத்துள்ள காய் என்பதால், உடல் உள்புற விஷத்தன்மை வாய்ந்த நச்சுப் பொருள்களைப் பிரித்து வெளியேற்றுகிறது.

வைட்டமின் சி , பிற ஊட்டச் சத்துகள் அதில் நிறைய உள்ளதால், உள்புற அழற்சியைப் போக்கி உடல் வலி நிவாரணியாகவும் செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.

ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதயம் சார்ந்த ரத்தக் குழாய்களின் உபாதைகளைத் தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரையின் அளவை ரத்தத்தில் கட்டுப்படுத்துவதால் சர்க்கரை உபாதை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
ஆயுர்வேதக் குறிப்புகளும் வெள்ளரிக்காயை பாராட்டவே செய்கின்றன. ஆயினும், நவீன ஆராய்ச்சிகள் குறிப்பிடாதக் கருத்துகளையும் ஆயுர்வேதம் வெளிப்படுத்துகிறது.

பாவபிரகாசர்:

குளிர்ச்சியானது. வரட்சியை ஏற்படுத்தும். குடல்நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும். இனிப்புச் சுவை, செரிப்பதில் கனமானது, நாக்கில் ருசி கோளங்களைத் திறந்துவிடும் தன்மையுடையது. பித்தச் சீற்றத்தை நன்கு குறைத்துவிடுகிறது.

தன்வந்திரி, ராஜ நிகண்டு: சிறுநீர் சார்ந்த எந்த உபாதையையும் குணப்படுத்துகிறது. உடல் சூட்டையும், மயக்க நிலையையும் குணப்படுத்தி சீராக்குகிறது. உண்ட உணவுக்கான திருப்தியை ஏற்படுத்தித் தருகிறது. குடல் வாயுவை ஏதிகப்படுத்தும்.

கையதேவ நிகண்டு:

வெள்ளிப் பிஞ்சு- வரட்சி, இனிப்புச் சுவை, குளிர்ச்சி, செரிப்பதில் கடினமானது. முற்றிய காய் நீர்வேட்கை, சோர்வு, உடல் உள்புற எரிச்சல் நீக்கக் கூடியது. வெள்ளரி இலை, உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். உள்புறக் குழாய்களிலுள்ள பிசுபிசுப்பை அகற்றும்.

நிகண்டுரத்னாகரம்:

இளம்பிஞ்சு- ரத்தக் கசிவு உபாதை, ரத்தத்திலுள்ள கெடுதிகளைக் குணப்படுத்தும் தன்மையுடையது. சிறுநீர்ப் பை சுத்தமாகும்.
இருவேறு துருவங்களின் ஆராய்ச்சித் தொகுப்பின் மூலம் பொதுவாக நாம் அறிவது- இரவல்ல; பகலிலும் சாப்பிட உகந்த காய்- வெள்ளரிக்காய் என்பது தெளிவாகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com