

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
கடுகெண்ணெய், தான்றிக்காய் எண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்துவது நல்லதா? தனித்தனியாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை என்ன?
சௌந்தரவல்லி, சென்னை.
கடுகெண்ணெய் காரமான சுவையுடையது. வீர்யத்தில் சூடானது மற்றும் உடன் உடலில் பரவிவிடும் தன்மை கொண்டது. செரிப்பதில் எளிதானது. கபம் மற்றும் வாத நோய்களில் சிறப்பாகப் பயனாற்றக் கூடியது. விந்து அணுவை அழித்து விடும் தன்மையுடையதால் ஆண்கள் இதன் பயன்பாட்டில் கவனம் கொள்ள வேண்டும். இதன் அதிக உபயோகம், ரத்தக் கசிவை உண்டாக்கும்.
காணாக்கடி எனும் தடிப்புகள் தோலில் அரிப்புடன் ஏற்பட்டு மறையும் உபாதையில் கடுகெண்ணெய்யை உடலெங்கும் தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு குளிப்பதால், காணாக்கடி உபாதை மறைந்து விடும். அது போலவே, வறண்ட நிலையில் தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளிலும் இதன் மேல் பூச்சு நல்ல பலனை விரைவில் தரும்.
ஆசன வாயைச் சுற்றி ஏற்படும் மூல முளைகளில், இளஞ்சூடான கடுகெண்ணைய்யைத் தடவினால் குணம் விரைவில் ஏற்படும். சர்க்கரை உபாதையினால் ஏற்படும் உடல் புண்களின் மீது தடவ, நிவாரணம் ஏற்படுத்தித் தரும். காலை, மாலை பத்து மில்லி லிட்டர் கடுகெண்ணய்யைச் சாப்பிடுவதன் மூலம் குடல் கிருமிகள் அழிந்து வெளியேறும்.
தான்றிக்காய் எண்ணெய், முன் குறிப்பிட்ட கடுகெண்ணெய்யின் குணத்திலிருந்து முழுவதுமாக மாறுபடுகிறது. அது சுவையில் இனிப்பானது, குளிர்ச்சியானது. தலையில் தேய்த்து ஊறிக் குளித்தால் தலைமுடி நன்றாக வளரும். செரிப்பதில் கடினமானது. குடலில் பித்த வாயுவினால் ஏற்படும் சூடும் வயிறு உப்பசமும் தான்றிக்காய் எண்ணெய் சாப்பிட்டால் சரியாகி விடும்.
வேப்பெண்ணய் அதிகம் சூடானது அல்ல. சுவையில் கசப்பானது. குடல் கிருமிகள், தோல் படை, அரிப்பு, சொறி, சிரங்குகள், மார்பில் சளிக்கட்டிக் கொண்டு மூச்சு விடுவதில் ஏற்படும் கஷ்டமான நிலைகளில், இளஞ்சூடாக மார்பில் வேப்பெண்ணய்யைத் தடவி, இதயப் பகுதியைத் தவிர்த்து மற்ற இடங்களில் வென்னீர் ஒத்தடம் கொடுத்தால், சளி இளகி வெளியேறும். மூச்சுத் திணறலும் குணமாகும்.
அதனால் மேற்குறிப்பிட்ட மூன்று தைலங்களில், கடுகெண்ணைய்யையும், வேப்பெண்ணெய்யையும் சேர்த்துப் பயன்படுத்தினால், மேற்குறிப்பிட்ட உபாதைகளின் தீவிரம் வேகம் கட்டுக்குள் அடங்கி விடும்.
தான்றிக்காய் எனும் தானிக்காய் எண்ணெய் மற்ற இரு எண்ணெய்களுடன் குணத்தில் சிறிதும் சேராததால் அதன் தனியான குணங்களை நாம் முழுவதும் பெற, அதை மட்டும தனியாகப் பயன்படுத்துவதே நல்லது.
ஆயுர்வேத கடைகளில் விற்கப்படும் நிம் பாதி தைலம் எனும் வேப்பெண்ணெய்யை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத் தைலம், தோல் உபாதைகளை விரைவில் குணப்படுத்துகிறது.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.