'அகிலா !அகிலா..! சீக்கிரம்மா..எனக்கு ஆபீஸூக்கு லேட்டாகுதில்ல!'
'இதோ வந்துட்டே இருக்கேன். எனக்கு மட்டும் நாலு கையா இருக்கு? காலைல அஞ்சு மணியிலிருந்து வேலை செஞ்சுகிட்டே இருக்கேன். ஒரு காபியை கூட கிச்சனுக்கு வந்து வாங்கிக் குடிக்க முடியாதா உங்களுக்கு?'
'ஷூ போட்டுகிட்டு உள்ளே எப்பிடி வர்றது? சுவாமி படமெல்லாம் இருக்கு. ஷூ போட்டுகிட்டு உள்ள வர்றீங்களேனு அதுக்கும் கத்துவ..'
'ஆமா! கத்தறேன்..கத்தறேன்னு சொல்றீங்களே.. நான் என்ன கழுதையா?'
'ஆமான்னு சொல்லணும்னுதான் நினைக்கிறேன்! ஆனா.. சொல்ல முடியலையே..'
'என்ன கிண்டலா?'
'கிண்டல் இல்லம்மா! பொழுது விடிஞ்சு , பொழுது சாயற வரைக்கும் உழைச்சுக் கொட்டறியே ! அதைச் சொன்னேன் !'
'இல்லல்ல. உங்க மைண்ட் வாய்ஸ்ல வேற என்னமோ கேட்டுதே.'
'கேட்டுருச்சா? அது ஒண்ணும் இல்லம்மா.'
'கழுதை மாதிரி கத்துற..! ஆனா மாடு மாதிரி உழைக்கிறனு நினைச்சேன் செல்லம்.'
'நினைப்பீங்க..நினைப்பீங்க..! உங்களுக்கென்ன..இதோ காபியை குடிச்ச கையோட கௌம்பி ஆபீசுக்குப் போனா ரா...த்திரி எட்டு மணிக்கு வந்து சாப்பிட்டுட்டு தூங்கிருவீங்க. அதுவரைக்கும் உங்களைப் பெத்தவங்களுக்கும்., நாம பெத்துப் போட்டதுகளுக்கும் ஊழியம் செஞ்சு செஞ்சே என் ஜென்மம் முடியப் போகுது!'
'என்னமோ நீ மட்டும்தான் உழைக்கற மாதிரி பெரிசா பில்ட் அப் குடுக்கற. இங்க நான் மட்டும் என்ன ஹாய்யா பொன்னூஞ்சல்ல ஆடிகிட்டிருக்கேனா? ஆபீசுக்கு வந்து பாரு...! எங்க மேனேஜர் கிட்ட நான் படற பாட்டை.! ஐயய்யோ....! என்னோட எதிரிக்கு கூட இந்த மாதிரி மேனேஜர் வாய்க்ககூடாதுடா சாமி!'
'அப்படி என்னதான் படுத்தினார்? பாவம் அவரைப் பாத்தா அப்படி ஒண்ணும் தெரியலையே..! சாதுவாத்தானே தெரிஞ்சார்.'
'அவரா பாவம்..! எம்மேல மட்டும் உனக்கு அனுதாபமே வராதே! அந்தக் காபியை கையில கொண்டு வந்து குடு. சுடச்சுடக் குடிச்சாலாவது என் துக்கம் கொஞ்சம் ஆறுதான்னு பார்க்குறேன்!'
'அதெப்பிடிங்க? சூடா குடிச்சா ஆறும்?'
'நல்லா ஆத்தியே குடுக்கறேன்!'
'அடிப்பாவி! ஒரு பேச்சுக்கு சொன்னேன்?'
'சரி, சரி! காபியைக் குடிச்சாச்சில்ல. கிளம்புங்க'
'எதுக்கும் ஒரு தலைவலி மாத்திரையைக் குடேன். மேனேஜர் அதிகமாப்படுத்தினா தேவைப்படும்.'
'இதென்னடா ரோதனை! ஸ்கூல் பையனாட்டம் பயந்து சாகறீங்க!'
'ஹ்க்கும்..! எந்த ஸ்கூல் பையன் இப்பல்லாம் பயந்து சாகிறான்?'
'அதெல்லாம் எங்க காலம். இப்ப பரிச்சைல ஃபெயிலாக்கினா வாத்தியாரை மரத்துல கட்டி வெச்சு அடிக்கிறாங்க ஸ்கூல் பசங்க.'
'அச்சச்சோ.. இன்னைக்கு உங்களுக்கு ஆபீஸ் போகவே மனசில்லேனு நினைக்கிறேன். பேசாம லீவ் போடுங்க. உங்க மேனேஜரை கொஞ்ச நேரம் மறந்து ரெஸ்ட் எடுங்க..'
'ஐயய்யோ.. அது இன்னும் பிரச்னையாயிடும்மா.. நான் ஆபீசுக்கே கிளம்பறேன்.'
சிவராமன் கிளம்ப, 'இவருக்கு என்னவோ ஆயிடுச்சு! சாயந்திரம் வரட்டும்' என்று மனதில் நினைத்தபடி அகிலா உள்ளே போகத் திரும்பியதும், 'சாயந்திரம் வரைக்கும் காத்திருப்பானேன்! இப்பவே சொல்றேன் மா' என்று சிவராமனின் குரல் கேட்டது.
'எனக்கெப்படி தெரிஞ்சுதுன்னுதானே யோசிக்கறே? என்னில் பாதியாச்சே நீ..!'
'என்னது?'
'கூல்..கூல்..! உன்னில் பாதியாச்சே நான் . இப்ப ஓ.கே.வா?'
'ஹய்யோ.. உங்களுக்கு வேப்பிலை அடிச்சு மந்திரிச்சாகணும் இப்ப..!'
'கிளம்புங்க. பக்கத்துத் தெரு மாரியம்மன் கோயிலுக்குப் போய் பூசாரிகிட்ட மந்திரிச்சிட்டு வரலாம்.'
'அதெல்லாம் வேண்டாம்..! எனக்கு திடீர்னு ஒரு யோசனை. நாம் இந்த நவராத்திரிக்கு நவக்கிரகக் கோயிலுக்கெல்லாம் போய் வந்தா என்ன?'
'உளறாதீங்க. நவராத்திரிக்கு கொலு வெக்காம வீட்டைப் பூட்டிகிட்டுப் போவாங்களா என்ன?'
'அதனால் என்னம்மா? எனக்கு அப்ப லீவு கிடைக்கும் போல இருக்கு. அதுதான்.'
'ஹையா ஜாலி!'
'அதேதான்! அதேதான்..! ஜாலியா டூர் போய்ட்டு வரலாம்.பாவம் நீயும் வீட்லயே அடைஞ்சு கிடக்கறே. அம்மாப்பாவை என் தங்கை வீட்டுல விட்டுட்டு, பசங்களை உன் தங்கை வீட்ல விட்டுட்டா நீ சொன்ன மாதிரி ஜாலியா டூர் போகலாம்.'
'ஹுக்கும்..நான் ஜாலின்னு சொன்னது., நீங்க லீவ் போட்டா நவராத்திரி சமயம் எனக்கு ஒத்தாசையாக இருக்குமேன்னு தான்.டூரும் கிடையாது.ஒண்ணும் கிடையாது!'
'அட தேவுடா.. ! இவ வழிக்கு வர மாட்டா போலிருக்கே..!'
சிவராமன் கன்னத்தில் கை வைத்தபடி, வாசற்படியில் அமர்ந்தான்.
'என்னங்க..! ஏன் இன்னிக்கு என்னவோ போல நடந்துக்கிறீங்க? உடம்பு,கிடம்பு சரியில்லைன்னா சொல்லித் தொலைங்களேன். டாக்டரையாவது பாத்துட்டு வரலாம்.'
'உடம்புக்கெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா..! மனசுதான் கொஞ்சம் சரியில்ல. பயந்து, பயந்து வருது!'
'நீங்க இப்படி எல்லாம் கேட்டா ஒழுங்காவே பதில் சொல்ல மாட்டீங்க. இருங்க. உங்க அம்மாவையே கூப்பிடறேன்..கொழுமோர் காய்ச்சி தரச் சொல்றேன்.'
'அச்சச்சோ..! அம்மாவை எல்லாம் எதுக்கு இழுத்து விடற.! நீ சொன்னாப்புல இன்னைக்கு நான் ஆபீசுக்கு லீவு போட்டுடறேன்.'
'இந்தா இந்த மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி எங்கேயாவது கண்ணுக்கு மறைவா வெச்சுடு. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்.'
'அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. என்னவோ ஒரு மார்க்கமா நடந்துக்கிறீங்க..! உங்க திடீர் விசித்திரப் போக்குக்கு என்ன காரணம்னு தெரியாம நான் உங்களை விடமாட்டேன்..இப்பவே நீங்க சொல்லித்தான் ஆகணும்!'
சிவராமன் மோவாயைச் சொறிந்து கொண்டே, மோட்டுவளையைப் பார்த்தபடி, 'அதொண்ணுமில்லைம்மா.. அது வந்து.....வந்து..'
'மேல என்ன பார்வை..! என் கண்ணைப் பாத்து பேசுங்க! என்ன வந்து போயின்னு ராகம் இழுக்கறீங்க!'
'அதாம்மா! அதேதான்..'
'என்ன அதேதான்..'
'நீ இப்போ சொன்னியே ராகம்னு! அதுதான் பிரச்னையே..!'
'வேண்டாம். நான் ரொம்பக் காண்டாயிடுவேன். சொல்ல வர்றதை தெளிவா புரியறமாதிரி சொல்லித் தொலைங்க.!'
'சொல்றேன். சொல்றேன். சொல்லலேன்னா நீதான் காண்டாமிருகம் ஆயிடுவேன்னு பயமுறுத்தறியே !'
'என்னது?' என்று அகிலா முறைக்க, 'ஹி..ஹி..! ச்சும்மா கலாய்ச்சேன்!' என்று அசடு வழிந்த சிவராமன் சொல்ல ஆரம்பித்தான்.
'போன வருஷம் நம்ம வீட்ல நவராத்திரிக்கு கொலு வெச்சொமா?'
'அதென்ன போன வருஷம்..! வருஷா வருஷம் வெக்கறதுதானே.'
'இப்படி நீ குறுக்க கேள்வி கேட்டா எனக்கு சொல்ல வராது.'
'சரி, சரி சொல்லுங்க..'
'போன வருஷம் கொலுவுக்கு நான் எங்க ஆபீஸ்காரங்களை எல்லாம் அழைச்சிருந்தேனே...'
'ஆமா..!எல்லோரும் வந்து காபி, டிபன் சாப்ட்டுட்டு.. வீட்டுக்கும் சுண்டல் பார்சல் கட்டிகிட்டுப் போனாங்களே! ஏன் இந்த வருஷமும் வரேன்னாங்களா..வரட்டுமே. பார்சல் கட்டிகிட்டுப் போகட்டுமே..!'
'அடடா... ! மேட்டர் சுண்டல் இல்லம்மா!'
'அன்னைக்கு எங்க மேனேஜர் நம்பிராஜன் வந்திருந்தாரில்ல..?'
'ஹஹஹா....ஆமாமா!..அரங்கேற்றவேளை படத்துல வந்த வீ.கே.ராமசாமி மாதிரியே இருந்தாரே! பேரு கூடப் பொருத்தமா நம்பிராஜன்னு இருக்குன்னு நானும், உங்கம்மாவும் சத்தமா வேற சிரிச்சிட்டோம். இப்ப நெனச்சாக் கூட சிரிப்பு, சிரிப்பா வருது.'
'அவரேதான்..! அவராலதான் இப்போ பிரச்னையே..!'
'பாவங்க ! அவரப் பாத்தா ரொம்ப நல்ல மாதிரிதான் தெரிஞ்சாரு.'
'நாங்க அவரைப் பார்த்து சிரிச்சதக் கூடக் கண்டுக்காம பெருந்தன்மையாதான இருந்தாரு.'
'ஆமா..அதை நானும் இல்லேன்னு சொல்லல..!'
'அதுக்கப்புறம் நான் சும்மா ஒரு பேச்சுக்காக நவராத்திரி கொலுன்னா லேடீஸ்தான் பாடணுமா? ஒரு சேஞ்சுக்காக நீங்க யாராவது பாடலாமேன்னு என் கலீக்ஸ் கிட்ட சொன்னேனே..!'
'ஆமாமா!'
'எங்க மேனேஜர் உடனே அதை சீரியசா எடுத்துகிட்டு, கற்பகவல்லி நின் பொற் பதங்கள் பிடித்தேன்னு பாட ஆரம்பிச்சாரே..'
'பொய் சொல்லாதீங்க அவர் எங்க பாடினார்.?'
'என்னம்மா இது அதுக்குள்ள மறந்துட்டியா? பாடினாரே!'
'அவுரு பாடலைங்க.. பாட்டை படிச்சார்னு சொல்ல வந்தேன்.'
'உஸ்..அப்பா..! இப்பவே கண்ணைக் கட்டுதே! நான் எப்பிடி முழுசா சொல்லி முடிக்கப் போறேனு தெரியலையே!'
'சரி..சரி சொல்லுங்க...'
'மறுநாள் நான் ஆபீசுக்கு போனதும், மேனேஜர் என்னைத் தன்னோட ரூமுக்கு வரச் சொன்னார்னு போனேன். போனதும், 'என்ன சிவராமன்..நேத்து நம்ம பாட்டு எப்பிடி? ன்னு கேட்டார்'... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை! எதேச்சையா என் பார்வை அவுரு முன்னாடி டேபிள் மேல இருந்த ஃபைல்ல பட்டுது. அது யார் யாருக்கு ப்ரமோஷன் தரலாம்னு செக் ஷன் ஹெட் தயார் பண்ணி வெச்சிருக்கிற ஃபைல். இன்னைக்கு மேனேஜர்அந்த ஃபைலை பரிசீலனை செஞ்சு மேலிடத்துக்கு மெயில் பண்ணப் போறார்னு அட்டெண்டர் எங்கிட்ட அந்த ஃபைலைக் காமிச்சிட்டுதான் மேனேஜர் ரூமுக்குக் கொண்டு போனான். அதனால...'
'அதனால..?'
'மேனேஜருக்கு கொஞ்சம் ஐஸ் வெச்சா நமக்கு ப்ரமோஷனுக்கு வழி பிறக்கும்னு நெனச்சு, 'ஆஹாஹா...! நேத்து ரொம்ப அபாரமா பாடினீங்க சார். சுருதி சுத்தமா, கமகம் சூப்பர். சுகமான ஆலாபனை,.நல்ல குரல் வளம். தினமும் சாதகம் பண்ணினீங்கன்னா சங்கீதத்துல ஓஹோன்னு வருவீங்கன்னு பாராட்டித் தள்ளிட்டேன்..'
'அச்சச்சோ..நீங்க சொன்னதுல ஒண்ணு கூட அவர் பாட்டுல இல்லையேங்க' .சொல்லப் போனா அவர் பாடவே இல்ல..பாட்டை ஒப்பிச்சார்.'
'தெரியுதும்மா..ஆனா வேற வழி?'
'சரி.. ! அதுக்கும் இப்போ நீங்க இப்பிடி மெர்சலாகறதுக்கும் என்ன சம்பந்தம்?'
'அன்னைக்கு நான் அவரோட பாட்டைப் பாராட்டினதால, இந்த வருஷம் நவராத்திரி ஒம்பது நாளும் நம்ம வீட்டுக்கு வந்து கச்சேரி பண்ணப் போறாராம் பக்கவாத்தியத்தோட!'
'ஒரு வருஷமா அதுக்காகப் ப்ராக்டிஸ் பண்ணிகிட்டு வர்றாராம். நேத்து எனக்கு ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி பாட்டைப் பாடி, ஸாரி ஒப்பிச்சு வேற காமிச்சார். 'இது என்ன ராகம்னு சொல்லுங்க'னு எனக்கு டெஸ்ட் வெச்சார். நான் ராகமாலிகை ன்னதும் பலே..பலேனு எனக்குப் பாராட்டு வேற.!'
'இன்னைக்கு சங்கராபரணம் ராகத்துல ஒரு பாட்டாம். எனக்கு நேத்திக்கு அடைச்சுகிட்ட காதே இன்னும் தொறந்தபாடில்ல. இன்னைக்கு பாட்டு கேக்கறதுக்கு எனக்கு சக்தியும் இல்ல, சகிப்புத் தன்மையும் இல்ல. இந்த லட்சணத்துல நான் மேனேஜர் ரூமுக்குப் போனாலே மத்தவங்க எல்லாம் என்னைக் கிண்டலா பாத்து ஜால்ரா அடிக்கிற மாதிரி சைகை காமிச்சு சிரிக்கிறாங்கம்மா..அதுதான் எனக்கு இன்னும்
சங்கடமா இருக்கு..'
'அடடா..கதவிடுக்குல மாட்டின எலி மாதிரி இப்பிடி ஒரு பிரச்னையில மாட்டிகிட்டு இருக்கீங்கன்னு தெரியாம போய்டுச்சே..!'
'அது மட்டுமா? இந்த வருஷம் நவராத்திரிக்கு உங்க மாமா சங்கீத சிரோன்மணி மகாதேவன் வேற அமெரிக்கால இருந்து நம்ம வீட்டுக்கு வந்து தங்கறதா சொல்லி இருக்காரே..!'
'அவர் முன்னால இவர் தன்னோட சங்கீதத் திறமையைக் காமிக்கப் போய் உங்க மாமா ஏதாவது சொல்லப் போய் , எக்குத்தப்பா ஏதாவது நடந்துடுச்சுன்னா என்ன பண்றதுங்கற பயம்தான் என்னைப் பேயாய்ப் பிடிச்சு ஆட்டுது.'
'அச்சச்சோ! ஆமாங்க எங்க மாமா வேற சங்காரபரணம் சங்கர சாஸ்திரிகள் மாதிரி ஒரு சின்ன தப்பைக் கூட தாள மாட்டாமல் கோவப்படுவாரே! எங்க மாமாவையும் வர வேண்டாம்னு சொல்ல முடியாது. உங்க மேனேஜரையும் பாட வேண்டாம்னு சொல்ல முடியாதே! சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்னு பாட்டு கேட்டிருக்கோம். இப்போ சங்கீதத்தால் ஒரு சங்கடமா?'
'என்னங்க ? உங்க மேனேஜர் கொஞ்சம் கூட இங்கிதமே தெரியாம நடந்துக்குறாரு. சரியான இம்சை அரசனா இருப்பாரு போல!'
இப்ப மோவாயைச் சொறிஞ்சுகிட்டே மோட்டுவளையைப் பாக்குறது அகிலாவோட டர்ன்.
'நீ அவரை இம்சை அரசன்னு சொல்றே....! ஆனா அவரோ தன்னை இசை அரசன்னு இல்ல நெனச்சுகிட்டிருக்காரு.? அவருக்கு இங்கிதமும் தெரியல, சங்கீதமும் தெரியல. அதனாலதான் இந்த வருஷம் நவராத்திரியே கொண்டாட வேண்டாம்னு சொன்னா நீயும் சம்மதிக்க மாட்டேங்கிறே. போன வருஷம் ப்ரமோஷன் லிஸ்ட்ல என் பேரு இல்ல. இந்த வருஷமாவது வரணுமேன்னு தவிச்சுகிட்டிருக்கேன். இந்த சமயம் பாத்து இப்படி ஒரு இடுக்கண் வரணுமா எனக்கு?'
'இடுக்கண் வருங்கால் நகுக...' என்று சொல்லிக் கொண்டே .சிவராமனின் அம்மா கோதாவரி ப்ரசன்னமானார்.
'அம்மா..நான் இத்தனை நேரம்...'
'புலம்பினத எல்லாம் கேட்டேண்டா சிவராமா.'
'இப்ப என்னம்மா பண்றது?'
'இப்போ ஒண்ணும் பண்ண வேண்டாம். நவராத்திரிக்கு அல்வா கிண்டினா போதும் அது என்னோட பொறுப்பு.'
'அல்வாவா...அதுவும் நீங்களா?'
சிவராமனும், அகிலாவும் கோரசாகக் கத்த, 'ஆமாண்டா ஆமா..! என்னோட அல்வாதான் உன்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாத்தப் போகுது..' என்றாள்.
'எப்பிடிம்மா..நீ பண்ற அல்வாவை வாய்ல போட்டா, வாயையே திறக்க முடியாதே..நாக்கு மேலண்ணத்துல போய் பச்சக்குனு பிசின் போட்டா மாதிரி ஒட்டிக்குமே..!'
'அதுக்குத்தான் நான் அல்வா கிண்டப் போறேன். உங்க மேனேஜர் வந்து ஸ.. ப.. ஸன்னு ஆரம்பிக்கறதுக்குள்ளே அல்வாவைக் குடுத்து அவர் வாயை லாக் பண்ணிடலாம்.' 'அப்புறம் அவர் எங்க வாயைத் திறக்கறது? சிவராமா..நீ மேனேஜர் பத்தின கவலைய விடு.'
'அப்படியும் அவர் சுதாரிச்சுட்டுப் பாட ஆரம்பிச்சா என்ன பண்றது? எங்க மாமாவை எப்படி சமாளிக்கிறது?'
'உங்க மாமாவுக்கும் அதே அல்வா ட்ரீட்மெண்ட்தான். நான் பாத்துக்கறேன். அகிலா நீ உங்க மாமா
பத்தின பயத்தை விடு..!'
'இது சரியா வருமா?' என்று சிவராமன்
கவலைப்பட்டார்.
'சரியா வராமத்தானே இத்தனை வருஷமா பிசின் மாதிரி உங்க அம்மா அல்வா கிண்டிகிட்டிருக்காங்க. உங்கம்மா கிண்டின அல்வாவை சாப்பிட்டப்புறம் தானே உங்க தங்கச்சி வீட்டுக்காரருக்கு ஊமை மாப்பிள்ளைனு பட்டப் பேரே வந்துச்சு.'
'என்னடி மருமகளே கிண்டலா..?'
'சிவராமா..! வா ! வந்து அல்வா கிண்டற குண்டானையும், கரண்டியையும் பரணிலிருந்து எறக்கி வை. நான் போய்க் கோதுமை வாங்கிட்டு வந்துர்றேன். இன்னைக்குக் கொஞ்சம் சாம்பிள் பாத்துடலாம்..'
'ஆஹா..! கோதாவரி கோதாவில் இறங்கியாச்சு.'
சாரி கோதுமை அல்வா கிண்டுவதில் இறங்க, சிவராமன் தன் மனக்கிலேசம் குறைந்தவராக,
'தாயில்லாமல் நானில்லை..தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொரு தாய் இருக்கின்றாள்..என்றும் என்னைக் காக்கின்றாள்' என்று கண் கலங்க, மனம் நெகிழப் பாட ஆரம்பித்தார்.
'ஆதலால் மக்களே..! சிவராமன் வீட்டு நவராத்திரி கொலுவுக்குப் போறவங்க கவனமா அல்வாக்கு அல்வா குடுத்துட்டு சுண்டலை மட்டும் சாப்ட்டுட்டு வந்துருங்க. பீ கேர்ஃபுல்.'
- விஜி சம்பத்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.