புள்ளிகள்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைவுற்றபோது, சென்னை ராயப்பேட்டையில் அவர் வசித்த வீட்டில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைவுற்றபோது, சென்னை ராயப்பேட்டையில் அவர் வசித்த வீட்டில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஜாவர் சீதாராமன், கொத்தமங்கலம் சுப்பு, கவிஞர் ரா.பழனிசாமி உள்ளிட்டோர் வேதனையோடு குழுமியிருந்தனர். அப்போது உடலுக்கு அருகே நடிகை பண்டரிபாய் அமர்ந்து அழுதபடியே இருந்தார்.
பட்டுக்கோட்டையாரின் ஒரு கையில் பணமும், மறுகையில் பேப்பரும் இருந்தது. அந்த பேப்பரை எடுத்து பிரித்து பார்த்த கவிஞர் ரா.பழனிசாமி திகைத்துப் போனார். அதில்,
'தானா எவனும் கெட மாட்டான்
தடுக்கி விழாம விழ மாட்டான்
இதைப் புரிஞ்சிக்கிட்டவன் அழ மாட்டான்''
என்று எழுதப்பட்டிருந்தது.
அது நடிகை பண்டரிபாய் தயாரிக்கவிருந்த 'மகாலட்சுமி' என்ற படத்துக்காக பட்டுக்கோட்டையார் எழுதிய பல்லவிதான். அதுவே அவர் எழுதிய இறுதி பல்லவியும்கூட!
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ஒருமுறை 'கலைமகள்' ஆசிரியராக இருந்த கி.வா.ஜ. திருவல்லிக்கேணியில் இருந்த சபை ஒன்றில் பேசினார். அவர் பேசி முடிந்தவுடன் புறப்படும்போது ஒரு துணிப் பையில் பிரசாதம், பரிசுகளை வைத்து அவருடைய கையில் சபைத் தலைவர் அளித்தார்.
உடனே கி.வா.ஜ., 'என்னைப் பெரியவனாய் அழைத்தீர்கள். இப்போது பையனாய் அனுப்பி வைக்கிறீர்கள்'' என்றார். கி.வா.ஜ.வின் சிலேடை நயத்தை அங்கிருந்தோர் ரசித்தனர்.
சபர்மதி ஆசிரமத்தின் பகல் உணவின்போது, வேப்பிலைச் சட்னி பரிமாறுவது வழக்கம். வேப்பிலையின் கசப்புச் சுவை பிடிக்காமல் பலரும் முகம் சுளித்தனர்.
இதையறிந்த சர்தார் பட்டேல், 'பாபுஜி.. இத்தனை காலம் ஆட்டுப்பாலைதான் சாப்பிட்டு வந்தார். இப்போது ஆட்டின் ஆகாரத்தையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டாரே..?'' என்றனர். இதைக் கேட்டதும் காந்திஜி உட்பட அங்கிருந்தோர் சிரித்துவிட்டனர்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
இந்தியப் பெண்கள் கபடி அணிக்கு கேப்டனாக இருந்த முதல் தமிழக வீராங்கனை கவிதா. கபடிக்காக, தயான்சந்த் விருது பெற்ற முதல் பெண் என பல்வேறு முதன்மை
களுக்கு இவர் சொந்தக்காரர்.
-கோட்டாறு ஆ.கோலப்பன்
1940-களில் மயிலாப்பூர் சாந்தோம் சாலையில் உள்ள சிங்காரவேலர் குடும்பத்
தாருக்குச் சொந்தமான வீட்டில் கவிஞர் பாரதிதாசன் பல ஆண்டுகள் குடியிருந்தார்.
விடுதலைப் போராட்ட வீரர் க.ரா.ஜமத்கனிக்கு தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற பல மொழிகளை அறிந்தவர். சிங்காரவேலருடன் 1930-இல் சிறையில் இருந்தார். மூலதனம் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் இவர்தான்.
எம்.பி. சீனிவாசனின் முக்கியமான பங்களிப்பு இந்தியாவின் 'சேர்ந்திசை' அறிமுகப்படுத்தியதாகும். நிமாய் கோஷூடன் இணைந்து குமரி பிலிம்ஸ் என்ற கூட்டுறவுத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, வணிகச் சினிமாவை எதிர்த்து நின்றார். அவர்களின் 'பாதை தெரிகிறது பார்' (1961) படம் தயாரிப்பாளரின் எதிர்ப்பைச் சந்தித்தது. ஆனால், கோயம்புத்தூரில் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றது. திரைத் துறை நடைமுறையில் இது புரட்சியாகும்.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...