ஆண்டுதோறும் மும்பையில் நடைபெறும் 'டாடா மாரத்தான் ஓட்டம்' இந்தாண்டு ஜனவரி 19இல் நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என 65 ஆயிரம் பேர் பங்கேற்றநிலையில், தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட ஆயிக்குடியில் தண்டுவடம் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான சிகிச்சை, மறுவாழ்வுக்காகச் செயல்பட்டுவரும் 'அமர் சேவா சங்கம்' சார்பில் ஆறு பேர் சக்கர நாற்காலியில் பங்கேற்றனர்.
'எப்படி சாத்தியமாற்று' என்பது குறித்து சங்கத்தின் பொதுமக்கள் தொடர்பு அலுவலர் தீபக்கிடம் கேட்டபோது:
'உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன். எனது குடும்பத்தினர் ஒரு விபத்தில் சிக்கியபோது, நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். எனது முதுகுத் தண்டு பாதிப்புக்குள்ளாகி, இடுப்புக்குக் கீழே செயலிழந்து போனது. சங்கத்தில் எனக்கு சிகிச்சையும் மறுவாழ்வுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. பின்னர் நான் ஆயிக்குடியிலேயே தங்கி சேவையாற்றுகிறேன்.
2010ஆம் ஆண்டு முதல் சக்கர நாற்காலியில் மும்பை மாரத்தான் ஓட்டத்தில் நான் பங்கேற்று வருகிறன். என்னால் பங்கேற்க முடியுமா? என்று ஆரம்பத்தில் யோசித்தேன். ஆனால், மற்ற பங்கேற்பாளர்களைப் பார்த்தபோது, எனக்குள் ஒரு புது வேகம் ஏற்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக மாரத்தானில் பங்கேற்பதால், தன்னம்பிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
மாரத்தானில் பங்கேற்பதன் மூலமாக அமர் சேவா சங்கத்துக்கு நன்கொடை திரட்ட முடிகிறது. இந்த ஆண்டு நாங்கள் திரட்டிய நன்கொடை சுமார் நாலரை லட்சம் ரூபாய். எங்கள் தொண்டு நிறுவனம் ஆற்றிவரும் பணிகள், மாற்றுத் திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் அங்கே விநியோகித்தோம்'' என்று தீபக் குறிப்பிட்டார்.
தென்காசியைச் சேர்ந்த பாரதிராஜா கூறியது:
'விபத்து காரணமாக கடும் பாதிப்புக்குள்ளானேன். சங்கத்தில் சிகிச்சையும், உடற்பயிற்சிகளும் தரப்பட்டன. என் சொந்தப் பணிகளுக்கே மற்றவர்களை நம்பி இருந்த நிலைமை மாறி, தற்போது எனது வேலைகளை நானே பார்த்துகொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தையல் பயிற்சியை முடித்து, சுய தொழிலாக இயந்திரம் வாங்கி துணி தைத்துக் கொடுத்து வருவானம் ஈட்டுகிறேன்.
மும்பை மாரத்தானில் பங்கேற்றது என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகும். அதன் மூலம் நான் தன்னம்பிக்கையைப் பெற்றேன். வரும் ஆண்டுகளிலும் நான் தொடர்ந்து மாரத்தான் ஓட்டங்களில் சக்கர நாற்காலியில் பங்கேற்பேன்'' என்கிறார் பாரதிராஜா.
சங்கத்தின் செயலாளர் பட்டயக் கணக்காளர் சங்கரராமன் கூறியது:
'2004இல் நானும் என் மனைவியும் மாரத்தானில் பங்கேற்பதற்காக மும்பைக்குச் சென்றோம். ஆனால் மாற்றுத் திறனாளியான நான் மாரத்தானில் பங்கேற்க விதிகள் அனுமதிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். எந்த ஒரு விஷயத்திலும், மாற்றுத் திறனாளி என்ற காரணத்துக்காக அனுமதி மறுப்பது தவறு என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். மும்பையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளோடு இணைந்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்தினோம். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
முடிவில் மாரத்தான் ஏற்பாட்டாளர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அடுத்த ஆண்டு முதல் அதனை செயல்படுத்துகிறோம் என உறுதி அளித்தனர். பின்னர் செயல்படுத்தினர். இந்த ஆண்டு பருவநிலை, எனது உடல் நிலை காரணமாக பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் ஆயிக்குடியிலிருந்து பதினைந்து பேர் பங்கேற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி'' என்கிறார் சங்கரராமன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதிரம் கொடுப்போம்.. உயிரைக் காப்போம்...
ஆயிரம் மாரத்தானில் ஓடினேன்!

புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உலகம் சுற்றும் மலேசிய தமிழா்

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

