எம்.மாரியப்பன்
ஆசையாக வளர்த்த செல்லப்பிராணி(நாய்) உடல் நலக்குறைவால் காலமான நிலையில், அதை தெய்வமாகக் கருதி தினமும் அதன் புகைப்படத்துக்கு பூஜை செய்து வழிபடுகிறார் கௌதமன்.
நாமக்கல்லில் தள்ளுவண்டி உணவகத்தை நடத்தி வரும் இருபத்து நான்கு வயது இளைஞரான அவரிடம் பேசியபோது:
'எட்டு ஆண்டுகளாக பாசத்துடன் நாய் வளர்த்து வந்தேன். எனது வீட்டை மட்டுமல்ல, எங்களுடைய உணவகத்துக்கும் அவன்தான் காவலன். மதுபோதையில் யாரேனும் தகராறு செய்தால் விரட்டி அடிப்பதில் வல்லவன். உணவகம் முடியும் வரையில், காலை, மாலை வேளைகளில் இங்கேயே இருப்பான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அதனை, 'தெரு நாய்' என நினைத்து நகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். அவ்வாறு ஒருமுறை அல்ல; மூன்று முறை பிடித்து செல்வதும், நாங்கள் சென்று தகராறு செய்து மீட்டு வருவதுமாக இருந்தோம்.
இதற்கிடையே ஒருநாள் காணவில்லை. அப்போதுதான் நகராட்சி நாய் பிடிக்கும் வாகனத்தில் வந்த ஊழியர்கள் தூக்கிச் சென்றது தெரியவந்தது. அங்கு சென்றபோது, அதற்கு தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தெரிவித்தனர். அடுத்த ஓரிரு நாள்களில் உடல்நலம் குன்றி உயிரிழந்துவிட்டது. யாரையும் இதுவரை கடித்ததில்லை. சொல் பேச்சை கேட்டு, வீட்டில் ஒரு பிள்ளை போல் வளர்ந்து வந்தான். தெருவில் உள்ளோரும், உணவகத்துக்கு வருவோரும் பாசத்துடன் அதனிடம் பழகுவது உண்டு.
'பரியேறும் பெருமாள்' படத்தை பார்த்து அதற்கு'கருப்பன்' என பெயரிட்டு அழைத்து வந்தோம். வீட்டில் ஒருவரை இழந்த துக்கம் இன்றளவும் என்னிடம் மட்டுமல்ல; பெற்றோர், உறவினர்களிடம் உள்ளது. அதன் நினைவாகவும், எங்களை 'கருப்பன் எப்போதும் காப்பான்' என்ற நம்பிக்கையிலும், அவனது புகைப்படத்தை உணவகத்தில் வைத்து தினமும் வழிபட்டு வருகிறேன். உணவகத்துக்கு வருவோரும் அதிசயித்துச் செல்கின்றனர்' என்கிறார் கௌதமன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.