4 லட்சம் நோயாளிகள்; 40 ஆயிரம் அறுவைச் சிகிச்சைகள்...

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணியில் ஈடுபட்டிருப்பவர், இரைப்பை, குடல் மருத்துவத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அறுவைச் சிகிச்சைகளைச் செய்தவர்.
4 லட்சம் நோயாளிகள்; 40 ஆயிரம் அறுவைச் சிகிச்சைகள்...
viney
Published on
Updated on
3 min read

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணியில் ஈடுபட்டிருப்பவர், இரைப்பை, குடல் மருத்துவத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அறுவைச் சிகிச்சைகளைச் செய்தவர், நான்கு லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தவர், 2011-இல் மருத்துவச் சேவைக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ பெற்ற விருதாளர்.. என பல்வேறு பெருமை

களுக்கு உரியவர் அகமது அலி, எண்பத்து ஐந்து வயதைக் கடந்தும் உற்சாகத்துடன் தனது கிளீனிக்கிலும், சென்னை மேத்தா மருத்துவமனையிலும் நோயாளிகளைச் சந்தித்து மருத்துவ ஆலோசனைகளை அளிப்பதோடு, அறுவைச் சிகிச்சைகளையும் செய்கிறார்.

அவரிடம் பேசியபோது:

''எனது சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூர். எனது சிறுவயதில் தினமும் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு மருத்துவரின் கிளீனிக் இருக்கும். அதன் வெளியில் 'டாக்டர் வில்லியம்ஸ் எம்.பி.பி.எஸ்.'' என்ற அட்டை தொங்கும். ஏராளமான நோயாளிகள் அவரிடம் சிகிச்சை பெறுவதற்காகக் காத்திருப்பார்கள். அந்த கிளீனிக்கைக் கடக்கும்போதெல்லாம், என் மனதுக்குள்ளே நானும் ஒரு டாக்டராக வேண்டும். ஏழைகளுக்கு மருத்துவச் சேவை செய்ய வேண்டும்'' என்ற எண்ணம் ஏற்படும்.

அப்போதைய 11-ஆம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வில், வட ஆற்காடு மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத் தேறினேன். அதன்பிறகு, வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து, கல்லூரியில் முதல் மாணவனாகத் தேறினேன்.

நூலகத்துக்குச் சென்று தினமும் செய்தித்தாள்களைப் படிப்பேன். ஒருநாள் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்களை அனுப்பக் கோரி செய்தி வெளியானது. அதன்படி விண்ணப்பித்தேன். மதிப்பெண்களின் அடிப்படையில் என்னை நேர்முகத் தேர்வுக்கு வரும்படி கடிதம் வந்தது. ரயில் ஏறி வாழ்க்கையில் முதல் முறையாக சென்னைக்கு வந்தேன்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி, வெளியில் வந்து ஒரு கை ரிக்ஷாக்காரரிடம், ''ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்?'' என்று கேட்டேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''இன்னா தம்பி! மெட்ராஸுக்கு நீ புத்சா?'' என்று கேட்டார். விழித்தேன். அவரே எதிரே கையைக் காட்டி, ''அதுதான் ஜெனரல் ஆஸ்பத்திரி'' என்றார். நான் வால்டாக்ஸ் ரோடில் ஒரு விடுதிக்குச் சென்று இரண்டு ரூபாய் வாடகைக்கு ஒரு அறையை எடுத்துத் தங்கினேன்.

நேர்முகத் தேர்வுக்காக ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனேன். அகர வரிசையில் என் பெயரை முதலில் அழைத்தனர். தேர்வறையில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். என்னைப் பற்றி விசாரித்துவிட்டு, ''நீ எதற்காக எம்.பி.பி.எஸ். சேர விரும்புகிறாய்?'' என்று கேட்டனர். ''ஏழைகளுக்கு மருத்துவச் செலவை செய்ய ஆசைப்படுகிறேன்'' என்றேன். மேலே கேள்வி ஏதும் கேட்காமல் என்னை அனுப்பிவிட்டார்கள். அடுத்த சில நாள்களில் எனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர்க்கை கிடைத்தது.

தமிழ் வழியில் படித்த எனக்கு சென்னையும், மருத்துவக் கல்லூரி சூழலும் மிகவும் புதிதாகவும், மிரட்சியைக் கொடுப்பதாகவும் இருந்தது. அப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் மட்டுமில்லாமல் அண்டை நாட்டு மாணவர்களும் என்னோடு படித்தார்கள். அவர்கள் பேசிய ஆங்கிலம் என்னை ஒதுங்கியே இருக்க வைத்தது.

என் அப்பா, சென்னையில் வெற்றிலையை வாங்கி, ரயிலில் வட இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் வேலை செய்தார். ஆகவே சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்தான் ஒரு சின்ன அறையில் தங்கியிருந்தார். நான் வந்ததும், இருவரும் வேறு ஒரு இடம் பார்த்துகொண்டு, அங்கே வசிக்கத் தொடங்கினோம்.

படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன். மூர் மார்க்கெட்டுக்குப் போய், எனக்கு வேண்டிய பழைய பாட புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருவேன்.

காலாண்டுத் தேர்வு முடிந்து, கல்லூரி திறந்தது. துணைப் பேராசிரியர் ஜெயவேலு திருத்திய விடைத்தாள்களோடு வகுப்புக்குள் நுழைந்து, ''யார் அகமது அலி?'' என்று கேட்க நான் பயத்துடன் எழுந்து நின்றேன். ''நீதான் முதல் மார்க். எல்லா விடைகளையும் நன்றாக எழுதி இருக்கிறாய்'' என்று சொன்னபோது இன்ப அதிர்ச்சி அடைந்தேன். பிற மாணவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். முதல் வருடம் தொடங்கி, எல்லா வருடங்களும் எல்லா பரீட்சைகளையும் நன்றாக எழுதி முதல் மார்க் வாங்கினேன்.

அறுவைச் சிகிச்சை நிபுணராக விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தும், கிடைக்கவில்லை. அனாடமி போன்ற துறைகளில் ஆசிரியர் பணியையோ, கிராமப் புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் சேவை செய்தாலோ எம்.டி. படிப்பில் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று சிலர் ஆலோசனை சொல்ல, நான் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். புதியதாகத் தொடங்கப்பட்ட தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பணி நியமனம் அளித்தனர். ஆசிரியர் பணி மிகவும் திருப்தி அளித்தது. மாணவர்களுக்கு நான் பாடம் சொல்லிக் கொடுத்த முறையை அவர்கள் விரும்பினார்கள். அங்கே மூன்றாண்டுகள் பணிபுரிந்தவுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக விண்ணப்பித்தேன்.

தஞ்சாவூருக்கு அருகிலேயே ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை கிடைத்தது. மக்களிடம் எளிமையாகப் பழகி, வைத்தியம் பார்த்ததால், சுற்று வட்டாரத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் மக்கள் என்னைத் தேடி வர ஆரம்பித்தார்கள்.

ஆறு ஆண்டுகள் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிவிட்டு, எம்.டி. படிப்புக்கு விண்ணப்பித்தபோது நான் தேர்வு செய்யப்பட்டேன். சென்னையில் மீண்டும் என் படிப்பு தொடரும் சூழ்நிலையில், ஆம்பூரில் வசித்த என் அம்மா, தங்கை இருவரையும் சென்னைக்கே அழைத்து வந்துவிட்டார் அப்பா.

அப்போது சரத் சந்திரா என்ற பேராசிரியர் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்துக்குச் சென்று, சில புத்தகங்களைப் படிக்க சிபாரிசு செய்வார். அவர் வழிகாட்டுதலோடு படித்த நான் எம்.எஸ். சர்ஜரி படிப்பிலும் முதல் மாணவனாக வந்தேன்.

அரசு மருத்துவமனையில்அவருக்கு கீழ் பணிபுரிய விரும்பினேன். ஆனால் அவரோ, '' என்னிடம் பணியாற்ற அமைச்சர்களின் பரிந்துரையோடு அவ்வப்போது சிலர் வந்து கொண்டே இருப்பார்கள். அப்போது நான் உன்னை வேறு எங்காவது அனுப்ப நேரிடும். என்னிடம் வேண்டாம். புதிதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டுள்ளது. நீ அங்கே சேர்ந்து பணியாற்று. உன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்'' என்று ஆலோசனை கூறினார். 1974-இல் தொடங்கி ஐந்தாண்டுகள் அங்கே பணியாற்றினேன். அதன்பின்னர், இரைப்பை, குடல் சிகிச்சையில் ஒரு மேற்படிப்பு துவக்கப்பட்டபோது, அதைப் படித்தேன்.

அண்ணா நகரில் இரைப்பை சிகிச்சைக்கான அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, சென்னை மருத்துவக் கல்லூரியில் இரைப்பை, குடல் மருத்துவத் துறையில் முக்கிய பொறுப்பேற்று 1996 வரை பணியாற்றினேன். அப்போது, மார்புப் பகுதியை திறக்காமலேயே உணவுக் குழாயில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்தது, மருத்துவத் துறையின் கவனம் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து நான் ஜப்பானில் கியோட்டோ நகரத்தில் நடைபெற்ற புற்றுநோய் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேச சென்னை புற்றுநோய் மைய மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி பரிந்துரைத்தார்.

ஒருமுறை நான் மேத்தா மருத்துவமனையில் ஒரு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தேன். அவர் ஏழை என்பதை யறிந்து எனக்குரிய கட்டணத்தைத் தர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இதை அறிந்ததும் இதர கட்டணங்களையும் மருத்துவமனை தள்ளுபடி செய்துவிட்டது.

இன்னொருமுறை அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு, அந்த நோயாளி ரொம்ப ஏழை என்பதும் ரூ.1.20 லட்சம் சிகிச்சை கட்டணம் என்பதும் தெரிந்தது. என்னிடம் ரூ.80 ஆயிரம் இருந்தது. நண்பர்களிடமிருந்து மீதி தொகையையும் பெற்று, அவர் சார்பில் நானே முழு பணத்தையும் கட்டினேன்'' என்கிறார் அகமது அலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com