/

விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் சிக்கல்களையே எழுதுகிறேன்...

'விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் சிக்கல்களை எவ்வித அலங்காரமும் இன்றி, யதார்த்தமாக எழுதுகிறேன்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 10:35 pm

'விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் சிக்கல்களை எவ்வித அலங்காரமும் இன்றி, யதார்த்தமாக எழுதுகிறேன். கதையைச் சொல்லும் விதம் மிகத் தெளிவாகவும், நேரடியாகவும் இருப்பதால் சாதாரண வாசகர்களும் என்னுடைய படைப்புகளுடன் எளிதில் ஒன்றிவிட முடிகிறது. நாவல்கள், மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவை ஆழமாகப் பேசுகின்றன' என்கிறார் எழுத்தாளர் ராம்தங்கம்.

இவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் 2025-ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறுகதைகள், நாவல்கள், பயணக்கட்டுரைகள் எனப் பல தளங்களில் எழுதி வரும் இவர், சாகித்திய அகாதெமியின் 'யுவ புரஸ்கார் விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த ராம்தங்கம் பள்ளிக்கல்வியை சமாதானபுரம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தவர்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பட்டத்தையும், 'டிப்ளமோ இன் மீடியா ஆர்ட்' பட்டத்தையும் பெற்றவர். பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்.

அவருடன் ஒரு சந்திப்பு:

பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது குறித்து?

விருதுக்கான அறிவிப்பை 2025 ஏப்ரலில் சட்டப் பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். முதல் விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி. நம்முடைய மாநில அரசு நம்மைக் கெளரவிக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி. எனது பெயரைத் தாங்கிய தனி அரசாணையைப் பார்த்தபோது நெகிழ்ந்தேன். இதுவரை 16 நூல்களை எழுதி இருக்கும் என் எழுத்துப் பயணத்தை இந்த விருது இன்னும் ஊக்கப்படுத்தும்.

எழுத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி?

சிறு வயதிலேயே எழுத்தின் மீது ஆர்வம் அதிகம். எனது 24-25-ஆம் வயதில் எழுதத் தொடங்கிவிட்டேன். பத்திரிகையாளர் பணி எழுத்து மீதான ஆர்வத்தை எனக்கு அதிகப்படுத்தியது. நூல் வாசிப்பு எனக்குள் புதைந்திருந்த எழுத்தாளனுக்கு உயிர் கொடுத்தது.

யுவ புரஸ்காரை தவிர நீங்கள் பெற்றிருக்கும் மற்ற விருதுகள் என்னென்ன?

காந்திராமன் நூலுக்காக 'தெற்கு எழுத்தாளர் இயக்க விருது', திருக்கார்த்தியல் நூலுக்காக 'அசோக மித்திரன் விருது, 'சுஜாதா விருது', 'வடசென்னை தமிழ்ச் சங்க இலக்கிய விருது', 'செளமா இலக்கிய விருது', 'படைப்பு இலக்கிய விருது', 'அன்றில் வளர்தமிழ் இலக்கிய விருது', ராஜவனம் நூலுக்காக 'படைப்பு இலக்கிய விருது', 'கோவை விஜயா வாசகர் வட்ட மீரா விருது', 'சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட விருது', புலிக்குத்தி நூலுக்காக 'படைப்பு இலக்கிய விருது', 'செளமா இலக்கிய விருது', கடவுளின் தேசத்தில் நூலுக்காக 'படைப்பு இலக்கிய விருது', வாரணம் நூலுக்காக 'படைப்பு இலக்கிய விருது', நாமக்கல் பாவை கல்விக்குழுமத்தின் 'தமிழ் இலக்கியச் செம்மல்' விருது, நெய்வேலி என்.எல்.சி. இலக்கிய விருது, திண்டுக்கல் துளிர் ஜி. நாகராஜன் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூலான உங்களின் 'ராஜவனம்' நாவல் குறித்து?

கன்னியாகுமரியின் பசுமை வனங்களையும், அதன் கடினமான வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டதே 'ராஜவனம்'. வனக்காவலரின் வாழ்க்கை மூலமாக வனத்துக்குள் நடைபெறும் வாழ்வைக் காட்டுவதற்கான முயற்சியே அது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்வேறு பகுதிகளுக்கு கள ஆய்வுக்காகச் சென்றபோது, அங்கு வசிக்கும் காணி

பழங்குடியின மக்களைச் சந்தித்து அறிந்த விஷயங்கள், செய்தித்தாள்களில் மலைவாழ் மக்கள், மலைகள் குறித்த தகவல்களையும் சேகரித்து 'ராஜவனம்' உருவானது. கரோனா காலத்தில் எழுதப்பட்ட அதுதான் என் முதல் நாவல். எழுத்தாளர் சாரு நிவேதிதா நடுவராக இருந்த, சிங்கப்பூரின் மாயா இலக்கிய வட்டம் நடத்திய உலகத் தமிழ் நாவல் போட்டி 2020-இல் இந்த நூலுக்கு முதல் பரிசு கிடைத்தது.

முழு நேர எழுத்தாளராக இருப்பதில் சிரமங்கள் ஏதும் இல்லையா? 

இன்றைய சூழலில் பொருளாதாரம் அத்தியாவசியமானது. எழுத்தை மட்டுமே சார்ந்து இருந்த நான், சிறிய அளவில் தேன், பனங்கற்கண்டு வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவதால் சமாளிக்க முடிகிறது. முழு எழுத்தாளருக்கான பொருளாதாரம் கிடைப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

நீங்கள் ஏன் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் அதிகம் எழுதுவதில்லை?

பத்திரிகைகளை எப்போதும் இலக்கியத் தரம், ஜனரஞ்சம் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. எழுதாதற்கு பிரச்னை என்னிடம்தான் இருக்கிறது. திடீரென ஒரு இதழிலோ, ஓர் பத்திரிகையிலோ கதை கொடுங்கள் என்று கேட்டால், என்னிடம் கதை இருக்காது. உடனே என்னால் கதையை ஒருபோதும் எழுத முடியாது. அதை சிலர் புரிந்து கொள்வார்கள். சிலர் தலைக்கனம் என்றும்கூட சொல்வார்கள். உண்மை இதுதான். வரும் ஆண்டுகளில் நிச்சயமாக அனைத்துப் பத்திரிகைகளிலும் என்னுடைய பங்களிப்பு இருக்கும்.

உங்கள் பார்வையில் இன்றைய இலக்கியப் போக்கு?

இன்றைய தமிழ் இலக்கியம் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலுள்ள புதுப்புது எழுத்தாளர்கள் ஒவ்வொரு வட்டார வழக்கு சார்ந்த, மண் சார்ந்த, நிலம் சார்ந்த, இனக்குழுவைச் சார்ந்த, வாழ்வியல் சார்ந்த, தொழில்முறை சார்ந்த விதமான படைப்புகளைக் கொண்டு வருகின்றனர். தமிழ் இலக்கியத்துக்கான ஒரு பெரிய வளர்ச்சிக்கான காலகட்டமாக இன்றைய சூழல் மாறி இருக்கிறது. குழு மனப்பான்மை, போட்டி, காழ்ப்புணர்வு எல்லாமே இன்னொரு பக்கம் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ் இலக்கியம் ஆரோக்கியமாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.