ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

இளைஞர்களிடம் சிந்திக்கும் திறன் அதிகம்

'தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைய தலைமுறையினரிடம் உரையாற்றி வருகிறேன்.

News image

வெ.இறையன்பு

Updated On :11 ஏப்ரல் 2026, 10:30 pm

'தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைய தலைமுறையினரிடம் உரையாற்றி வருகிறேன். இவர்களிடம் சிந்திக்கும் திறன் கூடுதலாக இருந்தாலும், கவனிக்கும் திறனையும், வாசிக்கும் திறனையும் மின்னணு சாதனங்களால் இழந்து வருகின்றனர். பத்து நிமிடங்கள் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கின்ற பழக்கம் இன்று அவர்களிடம் குறைந்து வருகிறது. அதனால் அவர்கள் இருப்புக்கொள்ளாத மனநிலையுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது' என்கிறார் வெ.இறையன்பு.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்து மக்கள் நலப் பணியாற்றிய வெ.இறையன்புவுக்கு தனிப்பட்ட அறிமுகம் ஏதும் தேவையில்லை. இவரது எழுச்சியான சொற்பொழிவுகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பணி ஓய்வுக்குப் பின்னரும் எழுத்து, சொற்பொழிவு, சமூக நலப் பணிகள் என தன்னுடைய நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் செலவிட்டு வருகிறார்

வெ. இறையன்பு. அவருடன் ஒரு சந்திப்பு:

ஓய்வுக்குப் பின்னரான வாழ்க்கை எப்படி?

ஓய்வு என்பதே ஒன்றும் செய்ய வேண்டிய கட்டாயமில்லை என்பதாகும். ஆனால், ஓய்வு என்பதே ஒன்றிலிருந்து மாறி, இன்னொன்றைத் தொடர்வது என்றே நான் சொல்லி வந்திருக்கிறேன். எதுவும் செய்யாமலிருப்பதல்ல ஓய்வு. மேற்கத்திய நாடுகளில், 'நடுவயது மாற்றம்' என்கிற கோட்பாடு உண்டு. நாற்பத்தைந்து முதல் ஐம்பது வயது வரை செய்கிற பணியிலிருந்து வேறொரு பணிக்கு மாறுவது அங்கு இயல்பு.

மருத்துவராக இருந்தவர் இசைக் கலைஞராக மாறுவார். வர்த்தகத்தில் ஈடுபட்டவர் இலக்கியவாதியாக உருமாற்றம் பெறுவார். அரசுப் பணியில் இருந்தவர் சமூகப் பணியை ஆற்றுவார். இந்தியாவில் அத்தகைய நிகழ்வு இல்லை.

அவ்வாறு வேறொரு பணிக்குத் தன்னை ஒப்படைப்பது பெரிய மறுமலர்ச்சியையும் புத்துணர்வையும் உண்டாக்கும். நான் ஓய்வுக்குப் பின்னர் அத்தகைய செயல்பாடுகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். முன்பு அவ்வப்போது செய்துவந்ததை இப்போது முழுநேரப் பணியாகச் செய்துகொண்டிருக்கிறேன்.

இளைஞர்களிடம் வாசிப்புப் பழக்கம் எப்படி இருக்கிறது?

கைப்பேசிகள், சமூக ஊடகங்கள், இணையம் உபயோகிப்பதால் இந்தத் தலைமுறை இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற ஆசிரியர்களும் பேராசிரியர்களும் நிறைய வாசிப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் வகுப்புகளில் பாடத்தைத் தாண்டிய தகவல்களையும், வரலாற்றுச் செய்திகளையும் சுவைபடச் சொல்லி, மாணவர்களுக்கு வாசிக்கின்ற ருசியை ஏற்படுத்த வேண்டும்.

கல்வி நிலையங்களில் வாசிப்பு மன்றத்தைத் தொடங்கி, மாணவர்கள் மாதம் ஒரு நூலை வாசித்து தங்கள் பிரதிபலிப்புகளைத் தெரிவிக்கின்ற சூழலை உருவாக்க வேண்டும். ஆசிரியர் மையமான வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் மையமான வகுப்பறையை நாம் உருவாக்கும்போது அவர்கள் வாசிப்பும் தானாகவே விரிவாகிவிடும்.

பணி ஓய்வுக்குப் பிறகான சமூக நலப் பணிகள் குறித்து..?

'சமூக நலப் பணிகள்' என்கிற முத்திரையோடு அவற்றை நான் மேற்கொள்வதில்லை. மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பாகவே அவற்றில் ஈடுபடுகிறேன்.

மாணவர்களை நூல்கள் எழுத வைக்கின்ற மகத்தான முயற்சியில் ஈடுபட்டுள்ள 'எழுதுக' என்கிற இயக்கத்தை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பவர் கிள்ளிவளவன். எல்லைக் காவல் படைப் பணியைத் துறந்து முழு மூச்சாக ஈடுபட்டுள்ள அந்த இளைஞருக்கு அவருக்குத் துணையாக சுகுமாறன், சண்முகம், பாலச்சந்தர், லாவண்யா, பூங்குழலி, மருத்துவர் பால

முருகன், முரளி உள்ளிட்டோர் தங்களது உதவியை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அளித்துவருகின்றனர். அதற்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்கி வருகிறேன்.

வாசிப்பு, எழுத்து, பயணம், சமூகப் பணி, குடும்பம் என்று இவற்றுக்கான நேரத்தை எப்படி ஒதுக்குகிறீர்கள்?

நேர மேலாண்மையில் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக நான் கருதவில்லை. என்னைவிடச் சிறப்பாக நேரத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியவர்கள், நாட்டின் தலைமைப் பீடத்தில் உள்ளனர். பல விருதுகளை நூல்களுக்காகப் பெற்றவர்கள், ஆராய்ச்சிகளைச் செய்து அரிய கண்டுபிடிப்புகளை அளித்தவர்கள் எனப் பலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் நமக்கெல்லாம் முன்மாதிரிகள்.

வயிறு நிறைய சாப்பிட்ட பிறகும் சிலர் ஐஸ்கிரீமுக்கு வயிற்றில் இடம் ஒதுக்குகிறார்களே, அதைப்போலவே சமூக நலப் பணிகளுக்கு நான் நேரம் ஒதுக்குவதும். விருப்பமானவற்றுக்கு இசைந்து கொடுக்கும் நெகிழித் தன்மையுடன்தான் அனைவருமே செயல்பட்டு வருகிறோம்.

எல்லோரும் குடும்பத்துக்காகப் போதிய நேரத்தை ஒருபோதும் ஒதுக்க முடியாது. குடும்பமும் எதிர்பார்க்காமல் நாளடைவில் பழகிவிடும்.

உங்களது மறக்க முடியாத அனுபவங்கள் என்ன?

போட்டித் தேர்வுகளில் வென்றவர்கள் பலரும் நான் எழுதிய நூல்கள்தான் தங்களுடைய வாழ்வுக்கு முன்னுரையாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இன்னும் சிலரோ தங்கள் குழந்தைகளுக்கு 'இறையன்பு' என்று பெயர் வைத்துள்ளனர். ஒரு நூல் உடனடியாகத் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏதேனும் ஒரு வகையில் மனிதர்களின் வாழ்வில் சலன வட்டங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அவற்றை நாம் அறிந்துதான் தீர வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.

உங்களுக்கு மிகவும் பிடித்த, அடிக்கடி வாசிக்கும் நூல் எது?

அனுதினமும் படிக்கிற நூலாகத் திருக்குறளைத்தான் கூற முடியும்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் உள்ளதா?

அரசு நிர்வாகத்துக்கும், அரசியலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. விதிகளைச் சிறிதும் பிறழாமல் கடைப்பிடிப்பவரைத்தான் மக்கள் நல்ல நிர்வாகி என்று பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் விதிகளைத் தளர்த்தியாவது, தனக்கு அரசியல்வாதிகள் உதவவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே அரசியல் என்பது முற்றிலும் வேறுபட்ட களம்.

மறக்க முடியாத, அடுத்து எழுத விரும்பும் படைப்பு எது?

எழுதும்வரை உச்சரிக்காமலிருப்பது நல்லது.

மறக்க முடியாத ரசிகர் யார்?

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத் துறையில், பார்த்தசாரதி என்கிற அலுவலர் பணியாற்றிக்கொண்டிருந்தார். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த அவர், தனது பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தைச் செலவழித்து வீட்டையே நூலகமாக மாற்றிவிட்டார். அங்கே வாசிக்க வருவோருக்கு தேநீர், பழரசம், மோர் என்று பருவத்துக்குத் தக்கவாறு பானங்களை வழங்கி வருகிறார். அங்கு பயின்ற சிலர் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து, அரசுப் பணிகளைப் பெற்றுள்ளனர். சுற்றுவட்டாரங்களிலும் 23 கிளை நூலகங்களையும் அவர் தொடங்கியதோடு, இந்த நூலகங்களைச் செம்மையாகச் செயல்பட வைப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளார்.

இப்போது ஓர் அறக்கட்டளையையும் ஆரம்பித்திருக்கிறார். அவர் நூலகத்துக்கு என்னுடைய பெயரைச் சூட்டியிருக்கிறார். அந்த நூலகத்துக்கு அறிஞர்கள் பலர் அவ்வப்போது வந்து அவரை உற்சாப்படுத்துகின்றனர்.

'இளைஞர் சக்தி' யூடியூப் சேனல் குறித்து...?

'இளைஞர் சக்தி' யை ஜோசப் ராஜா என்பவர் நடத்தி வருகிறார். என்னுடைய உரைகளையும் அன்றாட வைகறை வாழ்த்துகளையும் அதில் பதிவு செய்து வருகிறார். இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைகிற உரைகளை மட்டுமே அதில் அவர் பதிவேற்றம் செய்கிறார். இளைஞர்கள் தங்கள் அனுபவங்களையும், பெரியவர்களின் வாழ்க்கை நெறியையும் உற்றுப்பார்த்து அசை போடக் கற்றுக்கொண்டால் அதுவே அவர்களுக்குப் பெரிய வெளிச்சக் கதிராக இருக்கும்.

சென்னை ஓ.எம்.ஆர். கண்ணகி நகரில் உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து?

ஆசியாவின் மிகப் பெரிய குடியமர்வுப் பகுதியான கண்ணகி நகரில் 24 ஆயிரம் குடியிருப்புகள் இருக்கின்றன. 2016-இல் மாலை நேர வகுப்புகளைத் தொடங்கினேன். இளைஞர் மாரிசாமி உதவியால், அந்தப் பகுதியின் முழு விவரங்களை அறிந்தேன். படிப்படியாக அந்தப் பகுதியை மேம்படுத்தி, கல்வி, திறன் மேம்பாடு, மக்கள் நலம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்றவற்றில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.

படிப்பைத் தொடர முடியாமலும், தொடங்க முடியாமலும் இருப்பவர்கள் கற்றுத் தேர்வதற்காக நிலவொளிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அங்கு இதுவரை 23 முதல் 73 வயது வரையான 59 பேர் படித்துள்ளனர். தேவநாயகி தனது 48-ஆம் வயதிலும், அமுதா தனது 35-ஆம் வயதிலும், வேளாங்கண்ணி தனது 31-ஆம் வயதிலும் பத்தாம் வகுப்பு முடித்தனர். சங்கவி தனது 27-ஆவது வயதில் மேல்நிலை வகுப்பை முடித்தார்.

'நிலவொளிப் பள்ளி'களின் இன்றைய நிலை?

காஞ்சிபுரத்தில் நான் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது, கைத்தறி நெசவுத் தறியில் ஈடுபட்டிருந்த பதினான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இரவு நேரத்தில் படிக்க வைப்பதற்காக 'நிலவொளிப் பள்ளி'யைத் தொடங்கினோம். இங்கு படித்த பலர் இன்று அரசு அலுவலர்களாக உள்ளனர். ஒருவர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றுகிறார். முத்துப்பேட்டையில் மருத்துவர் ஒருவர் இரவு நேரப் பாடச்சாலைகளை நடத்தி, 'நிலவொளி' என்கின்ற பெயரில் ஓர் இதழையும் சில ஆண்டுகள் நடத்தினார்.

நீங்கள் பெறும் விருதுத் தொகையை சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக வழங்குகிறீர்களே?

'இலக்கியத்தில் மேலாண்மை' என்ற நூலுக்காக 'தினத்தந்தி' நாளிதழ் வழங்கிய விருதுக்கான தொகையை மயிலாப்பூரில் உள்ள ஆதிதிராவிட விடுதிக்குக் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்காக ஒப்படைத்தேன். அந்த விடுதிக்கு பல நூல்களை அளித்திருக்கிறேன். 'ராஜஸ்தான் அசோசியேஷன்' வழங்கிய விருதுத் தொகையை முதல் தலைமுறை கற்றல் மையத்துக்கு அளித்தேன். ஏற்கெனவே தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதுக்கான தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.