தென்னிந்திய சினிமாவில் அதிக கட்டுப்பாடுகள் - தமன்னா !
திரைப்படத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக விளங்கும் தமன்னா, 'ஃபோர்ப்ஸ் இந்தியா' சேனலுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், 'நான் நடனமாடிய பாடல்களை வெறும் 'ஐட்டம் சாங்ஸ்' என்று கருதாமல் 'பார்ட்டி சாங்ஸ்' என்றே பார்க்கிறேன்.
கரீனா கபூர், கத்ரீனா கைப் போன்றோரின் ஹிட் பாடல்களைப் போல, சில திரைப்படங்களை விடவும் இத்தகைய பாடல்களே மக்களிடம் நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன. மேலும், கவர்ச்சி என்பது கேமராவுக்காக மட்டும் செய்வதல்ல; அது என் இயல்பான ஆளுமையின் ஒரு பகுதி. 'ஸ்த்ரீ 2' படத்தின் 'ஆஜ் கி ராத்' , 'தி பாஸ்டர்ட்ஸ் ஆஃப் பாலிவுட்' தொடரின் 'கஃபூர்' போன்ற பாடல்களில் அந்தந்த கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி, ரசித்து நடனமாடியிருக்கிறேன். ஹிந்தித் திரையுலகில் நடிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கும் வாய்ப்பு உள்ளது.
பாலிவுட்டில் இரண்டு வகையான நடிகர்கள் இருக்கிறார்கள். கலைநயமிக்க கதைகளைத் தேர்ந்தெடுப்பவர்கள் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் வணிக ரீதியான கிளாமர் பாடல்களில் நடிப்பதில்லை. ஹிந்தித் திரையுலகம் நடிகர்களுக்கு இந்தத் தேர்வு சுதந்திரத்தை அளிக்கிறது. அதே வேளையில் கலை, வணிக ரீதியான படங்களை சமமாக கையாள்பவர்களே அங்கு தவிர்க்க முடியாத 'சூப்பர் ஸ்டார்களாக' மாறுகிறார்கள்.
வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமே முதன்மையாகக் கொண்ட சூழலில், தென்னிந்திய சினிமா அதிகக் கட்டுப்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். இதை என் தனிப்பட்ட அனுபவத்தின் மூலமே சொல்கிறேன். இங்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீண்ட திரைப்பயணத்தைக் கொண்டுள்ள நடிகைகள் பெரிய சவால்களைச் சந்திக்கிறார்கள்.
அவர்கள் ஒருபுறம் நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது. அதே வேளையில், வணிக ரீதியான பாடல் , நடனக் காட்சிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த இரண்டையும் சமநிலையில் கையாண்டு சாதிக்க ஒரு நடிகைக்குத் தனித்துவமான 'ஸ்டார்' அந்தஸ்து தேவைப்படுகிறது. அப்படிக் கிடைத்தவர்கள்தான் வெற்றிகரமாக வலம் வருகிறார்கள்' என்றார்.
ஐந்து ரூபாய் டாக்டரின் கதையா ரஜினி படம் குறித்து இயக்குநர்!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்துக்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா நடிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை ராஜ்கமல் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய அஸ்வத் மாரிமுத்து, 'தலைவர் படத்தை இயக்க வேண்டும் என்பது இயக்குநராக இருக்கும் அனைவரின் ஆசை. கமல் சார் தயாரிப்பில், ரஜினி சார் நடிக்கும் படத்தை என்னுடைய குழு இயக்குவது ஒரு ஹிஸ்டரிதான். இந்தப் படம் நடப்பதற்குக் காரணமாக இருந்த மகேந்திரன் சாருக்கு நன்றி. ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கும் சிம்பு சாருக்கும் நன்றி.
படத்துல மொத்தம் 8 பாட்டு இருக்கு. அனிருத் இசையில் அத்தனை இடங்களையும் கவர் செய்திடுவார்.
கமல் சாரைப் பார்க்கும்போது, எனக்கு எப்போதும் பயமாக இருக்கும். கமல் சாரைச் சந்திக்கும்போது, 'நான் ரஜினி சார் ஃபேன். ரஜினி படம் பண்ணுங்க'னு சொன்னார். பிறகு ரஜினி சார், 'அஸ்வத், நம்ம கமல்ஹாசனுக்குப் படம் பண்றோம். நல்ல படம் பண்ணனும்' என்றார்.
ரஜினி சாருக்கு இரவு 11 மணிக்குக்கூட கால் பண்ணி பேசுவேன். அப்போ கதையை டிஸ்கஸ் பண்ணுவோம். அதுக்கான இடத்தை ரஜினி சார் கொடுத்தார்' என்றவர், 'இது ஐந்து ரூபாய் டாக்டரின் கதைன்னு பேசிக்கிறாங்க. ஆனா, அது கிடையாது. இது தர்மன் என்கிற கேரக்டரை வைத்து நகர்கிற படம். நாளை முதல் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம்' என்றார்.
ஏ.ஆர். ரஹ்மானின் வரலாற்றுச் சாதனை!
கலைக்கும் இசைக்கும் எல்லைகள் இல்லை என்பதைத் தனது ஒவ்வொரு மெட்டிலும் நிரூபித்து வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரு இசையமைப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக மாறியிருக்கும் ரஹ்மானின் சாதனைகள் எண்ணிலடங்காதவை.
அண்மையில் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க மெலன் அரங்கில், 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் அச்சீவ்மென்ட்' அமைப்பின் 56-ஆவது சர்வதேச சாதனையாளர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த விழாவில் உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் பீட்டர் ஜாக்சன் கைகளால் ரஹ்மான் 'கோல்டன் பிளேட்' விருதைப் பெற்றார். இந்த விருது ஆண்டுதோறும் சாதாரணமாக வழங்கப்படும் ஒன்றல்ல. உலக அளவில் தங்கள் துறைகளில் மகத்தான சாதனைகளைச் செய்து, வரலாற்றை மாற்றி அமைத்து, பல தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஆளுமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயரிய கெளரவம் இது.
இந்த விருதைப் பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை ரஹ்மான் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவிலிருந்து சினிமாவுக்காக சத்யஜித் ரே, விளையாட்டுக்காக சச்சின் டெண்டுல்கர், பொருளாதாரத்துக்காக அமர்த்தியா சென் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய மேதைகள் மட்டுமே இந்த விருதினை வென்றுள்ளனர். பிரான்சிஸ் போர்டு கப்போலா (சினிமா), மாயா ஏஞ்சலோவ் (இலக்கியம்), ஹருகி முரகாமி (எழுத்தாளர்), மைக்கேல் ஜே. ஃபாக்ஸ் (நடிகர்) போன்ற உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் பெற்ற அதே மேடையில், இப்போது ரஹ்மானும் இடம் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







