உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

கரிசல்காட்டின் தனித்துவமிக்க எழுத்துக் கலைஞன்!

1980-களில் கோவில்பட்டியில் எங்கு பார்த்தாலும் ஏதாவது இரண்டு எழுத்தாளர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

News image
Updated On :19 ஜூலை 2026, 4:06 am IST

எழுத்தாளர் உதயசங்கர்

1980-களில் கோவில்பட்டியில் எங்கு பார்த்தாலும் ஏதாவது இரண்டு எழுத்தாளர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். மொத்தமே மூன்று கி.மீ. பரப்பளவு கொண்ட சிறுநகரத்தில்தான் 8 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கிறதே?

அவர்கள் நவீனத்துவத்தின் அத்தனை சிந்தனைப்போக்குகளையும் மண்ணின் தனித்துவமான பண்பாட்டையும் உள்வாங்கி அவற்றிலிருந்து புதிய படைப்புகளையும், தமிழ் இலக்கியத்தில் புதிய போக்குகளையும் உருவாக்கினர்.

செகாவியன் பாணியிலான யதார்த்தவாதக் கதைகளை கு.அழகிரிசாமி எழுதினார். அவருடைய உற்ற நண்பரான கி.ராஜநாராயணன், 'கரிசல் இலக்கியம்' என்ற வட்டார இலக்கியத்துக்கான முன்னத்தி ஏரை பிடித்துக் கொண்டு, புதிய பாதை காட்டினார். அவருக்குப் பின்னால், பெரிதும் வெளிப்படாத கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையை அண்மையில் மறைந்த எழுத்தாளர் பூமணி எழுதினார்.

நவீன தமிழ் இலக்கிய உலகில் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தன் காத்திரமான படைப்புகள் மூலம் பங்களிப்புச் செய்த எழுத்தாளர் பூமணி, கரிசல் கிராமமான ஆண்டிபட்டியில் 1947-இல் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்து, கூட்டுறவுத் துறையில் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

காந்தி மைதானத்தில் மாலை நேரங்களில் எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து ஒரு பெரிய வட்டம் போட்டு மைதானத்தின் நடுவே உட்கார ஆரம்பிப்பதே கோவில்பட்டியின் இலக்கியக் கூட்டம். யாரும் யாருக்கும் அழைப்பு விடுப்பதில்லை.

தினமும் கூடிப் பேசுவது ஒரு நாளும் நின்றதில்லை. அரசியல், தத்துவம், இலக்கியம் என்று பேச்சின் வெள்ளம் காந்திமைதானத்தை மூழ்கடிக்கும். பெரும் சண்டையோவென மற்றவர்கள் பயப்பட விவாதம் கரிசல்பகலின் வெம்மையை மிஞ்சும். அப்படியே ஒரே கணத்தில் பேச்சு சிரிப்பாகும். கிசுகிசுப்பாகும்.

சிறுகதைப் படைப்பாளி: 1971- இல் தாமரை இதழில் வெளியான 'அறுப்பு' என்கிற சிறுகதை மூலம் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய பூமணி 53 சிறுகதைகளுடன் தன்னை ஒரு நுட்பமான சிறுகதைப் படைப்பாளியாக நிலைநிறுத்திக் கொண்டவர். 'வயிறுகள்', 'ரீதி', 'நொறுங்கல்கள்', 'நல்ல நாள்' ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. கரிசல் மண்ணின் ஒடுக்கப்பட்ட மக்களை ரத்தமும் சதையுமாக தன் எழுத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த மண்ணின் ருசியை கி.ரா. சுவைக்கக் கொடுத்தாரென்றால், வெக்கையை, கோபத்தை, ஆக்ரோஷத்தை, அவலத்தைப் பூமணி கண்முன்னே நிறுத்தினார். கி.ரா. ஓர் அற்புதமான கதைசொல்லியென்றால் பூமணி கதை நடக்கும் இடத்தில் நம்மைப் பார்வையாளனாக இருத்தி வைக்கிறார்.

கண் முன்னே நடக்கின்ற கதையை நடத்துகிற பூமணியைக் காண முடிவதில்லை. அவர் நாம் எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தாரோ அதைப் பார்க்கும் விதமாக தன் கலையின் வசீகரத்தால் நம்மை வசப்படுத்துகிறார்.

கதையின் நிகழ்வு துவங்கும்போது பூமணியை மறந்து விடுகிறோம். அவரும் தன்னடக்கத்தோடு தன்னை மறைத்துக் கொள்கிறார். வாசித்து முடியும்போது தெரிகிறது. பூமணி என்ற மகத்தான கலைஞனின் கலையாளுமை. தன் கலையின் கோணத்தில் தன் முற்போக்குப் பார்வையை தெளிவுபடுத்துகிறார். இடையில் ஒரு சொல் சொல்வதில்லை. ஆனால், கதை நம்மை கோபம் கொள்ள வைக்கிறது. ஆவேசப்பட வைக்கிறது. சமூக விமர்சனத்தைக் கூராக்குகிறது. சமூக மாற்றத்தைக் கோருகிறது.

தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற கோட்பாட்டுவகை மாதிரி உருவாவதற்கு முன்னரே 'பிறகு', 'வெக்கை' போன்ற முக்கியமான தலித்திய நாவல்களை எழுதியிருந்தார் பூமணி. அவருக்கு முன்பே டி.செல்வராஜ் முன்னத்தி ஏராக மலரும் சருகும் நாவலை எழுதி உழுதிருந்தார்.

திரைப்பட இயக்குநராக...: தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் நிதியுதவியுடன் 'கருவேலம்பூக்கள்' என்ற திரைப்படத்தை பூமணி இயக்கினார். அந்தத் திரைப்படமும் கரிசல்வாழ்வின் அவலத்தைக் கூறும் படமாகவே வெளிவந்தது. அவரது நாவல்கள் பிறகு, வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி, கொம்மை எனத்தொடர்ந்து வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தின.

தென் மாவட்டங்களின் 600 ஆண்டுகால வரலாற்றின் ஊடாகப் பயணிக்கும் அஞ்ஞாடி நாவலுக்காக அவருக்கு 2014- ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. யதார்த்தவாதத்தின் மகத்தான நாவல்களாக பூமணியின் 'பிறகு', 'வெக்கை' நாவல்கள் திகழ்கின்றன. 'பிறகு' நாவல் சுதந்திரம் பெறும்போது துவங்குகிறது.

அழகிரி பகடையைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். ஒரு கரிசல் கிராமத்தின் மாற்றம், 'தீப்பெட்டியாபீஸ்' வருகிறபோது மனித உறவுகளில் ஏற்படும் மாற்றம் என்று அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தின் வரலாறாக விரிகிறது. தமிழில் எக்காலத்தும் சிறந்த நாவல்களில் ஒன்றாக 'பிறகு' இருக்கும்.

நிலத்தை அபகரிக்க நினைக்கும் வடக்கூரானை வெட்டிச் சாய்த்து விட்டு தலைமறைவாகத் திரிந்து நீதிமன்றத்தில் சரணடையும் வரையிலான நிகழ்வுகளை விறுவிறுப்புடன் சொல்லுகிற நாவல் அது இப்போது 'அசுரன்' திரைப்படமாகவும் வெளியாகிப் பரவலான கவனம் பெற்றது வெக்கை.

'அஞ்ஞாடி' என்ற பெரும்படைப்பு தென்மாவட்டங்களின் பெரும் வரலாற்றைச் சொல்கிறது. கரிசல் கிராமத்தில் ஒரு அஞ்ஞாடிப்பள்ளருக்கும், ஏகாலிக்கும் இடையில் உருவாகும் நட்பாகத் துவங்கும் நாவல் எட்டையபுரம் வரலாறு, கட்டபொம்மன் வரலாறு, ஊமைத்துரை வரலாறு, கழுகுமலை கலவரம், சிவகாசிக் கொள்ளை என்று வரலாற்றின் பக்கங்களை விரித்துக் கொண்டே செல்கிறது.

மனித விகாரங்களின் வழியே வரலாறு அதன் பொருண்மையான தளத்திலிருந்து நகர்ந்து மானுட அவலத்தின் குரலாக ஒலிக்கும் போது மகத்தான நாவலாக விரிகிறது, 'அஞ்ஞாடி'.

தமிழின் மகத்தான படைப்பாளி பூமணி. கரிசல்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.