'உலகின் பெரும் பணக்காரப் பாடகி' என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டெய்லர் ஸ்விஃப்ட். சொந்த வாழ்க்கையின் அனுபவங்களைக் கேட்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடல்களாக எழுதுவது டெய்லரின் பலமும்கூட! 2019-இல் இவர் அதிகளவில் அமெரிக்க இசை விருதுகளைப் பெற்ற மைக்கேல் ஜாக்சனின் சாதனையை முறியடித்துள்ளார். உலக இசை அரங்கில் சூப்பர் ஸ்டார் பாடகி டெய்லர்தான்!
இவர் தனது சிறு வயதில் தனது தந்தையைப் போல் பங்குத்தரகராக விரும்பினார். இவரது இசை ஆர்வத்தை உணர்ந்த குடும்பத்தினர் பென்சில்வேனியாவிலிருந்து டென்னசிக்குக் குடிபெயர்ந்தனர். தனது கணினியைச் சரிசெய்துகொண்டிருந்த தொழில்நுட்ப வல்லுநரிடமிருந்து சில நாதங்களைக் கற்றவுடன் 12-ஆம் வயதில் டெய்லர் கிட்டார் வாசித்தார்.
பின்னர் அவர் தனது முதல் பாடலான 'லக்கி யூ' எழுதினார்.
நான்காம் வகுப்பு படிக்கும்போது, 'என் அலமாரியில் உள்ள அரக்கன்' என்ற தலைப்பில் டெய்லர் எழுதிய கவிதையானது தேசிய அளவில் பரிசு பெற்றது. இவர் தனது 14-ஆம் வயதில் 'ஏ கேர்ள் நேம்டு கேர்ள்' என்ற 350 பக்க நாவலை எழுதினார். தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று தாய் விரும்ப, மகள் பிறக்கிறாள். இதனால் அந்த தாயின் மனநிலை குறித்து விவரிக்கிறது இந்த நாவல்.
பின்னர், 14-ஆம் வயதிலேயே பாடத் தொடங்கினார். அமெரிக்காவின் நாட்டுப்புறப் பாடகியாக தொடக்கத்தில் அடையாளப்படுத்தப்பட்டார் டெய்லர்.
பின்னர், அவர் பாப், ராக், ஃபோ(ல்)க் உள்ளிட்ட பல்வேறு இசை வடிவங்களில் ஆளுமையாக அவதாரம் எடுத்தார்.
டெய்லரின் 'மிட்நைட்ஸ்', '1989', 'பியர்லெஸ்', 'ஃபோக்லோர்' உள்ளிட்ட ஆல்பங்கள் உலக அளவில் டெய்லரை பிரபலமாக்கியது. பில்போர்டு இசைத் தரவரிசையில் முதல் 10 இடங்களையும் ஒரே நேரத்தில் டெய்லரின் பாடல்கள் இடம்பிடித்தன. டெய்லரின் 'தி எராஸ் டூர்' என்ற இசை நிகழ்ச்சியானது மிக அதிக வசூல் செய்த இசை நிகழ்ச்சியாக மாறியது.
இருபது ஆண்டுகளாக ரசிகர்களை தன் பக்கம் கட்டிப் போட்டு வைத்துள்ள முப்பத்தாறு வயதான டெய்லர் 14 கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார்.
'ஃபோர்ப்ஸ்' இதழின் தகவல்படி, டெய்லர் ஸ்விஃப்ட்டின் சொத்து மதிப்பு 1.6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.15,192 கோடி). டெய்லரின் இசை ஆல்பங்கள் மட்டும் 1.2 பில்லியன் (ரூ.12 ஆயிரம் கோடி) வருவாய் பங்களிப்பு செய்துள்ளன.
கால்பந்தாட்ட வீரர் டிராவிஸ் கெல்ûஸ டெய்லர் திருமணம் செய்துகொள்ளஇருக்கிறார்.
இந்தியாவில் டெய்லருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், அவரது நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்றதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









