பட்டாசு இல்லாமல் தீபாவளியா? கொண்டாடு... கவனத்தோடு
தீபாவளி என்றதும் புத்தாடைகளுடன் பட்டாசுகளும் கொண்டாட்டமும்தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும்' இப்போதெல்லாம் பட்டாசுகளுக்கு எதிரான கூக்குரல்களும் சேர்ந்தே வருகின்றன.
தீபாவளி என்றதும் புத்தாடைகளுடன் பட்டாசுகளும் கொண்டாட்டமும்தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும்' இப்போதெல்லாம் பட்டாசுகளுக்கு எதிரான கூக்குரல்களும் சேர்ந்தே வருகின்றன.
வெடிக்கிற நேரத்தில் தொடங்கி, பட்டாசுகளின் வகைகள் வரையிலும் எண்ணற்ற கட்டுப்பாடுகள். போகிறபோக்கில் பட்டாசு இல்லாத தீபாவளியாகி விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது... பட்டாசுக்கு அவ்வளவு எதிர்ப்புகள்.
பட்டாசு மாசுதான்' மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், எல்லாவற்றுக்கும் போல பட்டாசுகளுக்கு மற்றொரு பக்கமும் இருக்கிறது.
பட்டாசு என்பது காகிதங்களுக்குள் அடைக்கப்பட்டு வெடித்துச் சிதறும் வெடிமருந்து மட்டுமல்ல... ஒரு நாள் கொண்டாடப்படும் தீபாவளியுடன் பட்டாசு ஒளிச்சிதறலையும் வெடிச் சப்தத்தையும் நம்பி லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்தியாவில் பட்டாசுத் தொழிலின் ஆண்டு விற்றுமுதல் ரூ. 6 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 7 ஆயிரம் கோடி வரை. இவற்றில் பெரும்பகுதியான பங்களிப்பு, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள கரிசல் மண்ணான சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தே. நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 சதவிகிதம் இங்கிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் பட்டாசுத் தொழிலை நம்பி, வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வோரின் எண்ணிக்கை 5 லட்சம் முதல் 8 லட்சம் இருக்கலாம். சிறிதும் பெரிதுமாக, சுமார் 8 ஆயிரம் வரை பட்டாசுத் தயாரிப்பு ஆலைகள் இருக்கின்றன.
இந்த மக்களின் வாழ்க்கை பட்டாசுத் தொழிற்சாலைகளைச் சுற்றிதான் இயங்குகிறது. இதனுடன் பிரிண்டிங், பாக்கெட் செய்வது, பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து, சில்லறை விற்பனைக்குக் கொண்டு செல்வது என்றும் லட்சக்கணக்கானோர் வேலை பெறுகின்றனர்.
உள்ளபடியே, முதல் பட்டாசுத் தொழிற்சாலை சிவகாசியில் தொடங்கப்படவில்லை. மாறாக, கொல்கத்தாவில் 1800-ஆவது ஆண்டில் தொடங்கப்பட்டது. சிவகாசியைச் சேர்ந்த தொழில்முனைவோர் அங்கு சென்று, தீப்பெட்டி தயாரிப்பு முறையைக் கற்றறிந்துகொண்டு, ஜெர்மனியிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து, சிவகாசியில் முதல் முறையாக தொடங்கிய தீப்பெட்டித் தொழிற்சாலைதான் இன்று விஸ்வரூபம் எடுத்து, ஒட்டுமொத்த மாவட்டத்தின் அடிப்படை வாழ்வாதாரமாக மாறி, நாட்டின் பட்டாசுத் தொழிலின் மையமாக உருப்பெற்றிருக்கிறது.
தீப்பெட்டித் தொழிற்சாலையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்று, முதன்முதலில் தயாரித்த பட்டாசு கம்பி மத்தாப்புகள்தான். பல்வேறு வகையான கம்பி மத்தாப்புகளை மட்டும் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார்கள்.
என்றால், இந்தியாவில் அதற்கு முன் பட்டாசு தயாரிக்கப்படவேயில்லையா? தயாரிக்கப்பட்டிருக்கிறது, வெடிக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கின்றன வரலாற்றுத் தகவல்கள்.
சான்றாக, 1556-ஆம் ஆண்டில், அக்பர் தன்னுடைய எதிரிகளின் உருவ பொம்மைகளைச் செய்து, அவற்றுக்குள் பட்டாசுகளை நிரப்பி, வெடிக்கச் செய்ததாக வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன.
பட்டாசுகளை முகலாயர்களும், ராஜபுத்திரர்களும் குளிர் மற்றும் இலையுதிர் காலங்களில் அதிகம் பயன்படுத்தியிருப்பதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஏராளமான பழங்கால ஓவியங்களும் காணக் கிடைக்கின்றன. தீபாவளி மட்டுமல்லாமல், திருமண நிகழ்வுகளின்போதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும் இந்த ஓவியங்களில், ஷாஜகான் மகன் தாரா ஷிகோ திருமண வைபவத்தை விளக்கும் ஓவியத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதும் இடம்பெற்றுள்ளது.
நூற்றாண்டுகளாக நம் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாகத் திகழும் பட்டாசுகளை, மாசு என்று கூறி, ஒரே நாளில் ஒழித்துக் கட்டிவிடவும் முடியாது' கூடவும் கூடாது.
மாசுதான்... அவ்வளவு மோசமல்ல... பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படும், மறுப்பதற்கில்லை. ஆனால், உலகம் முழுவதும் நாள்தோறும் இயக்கப்படும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளால் உருவாகும் காற்று மாசுபாடுகளுடன் ஒப்பிட, ஒரே ஒரு நாளில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்காக வெடிக்கப்படும் வெடிகளாலும் கொளுத்தப்படும் பட்டாசுகளாலும் ஏற்படக்கூடிய மாசு மிகவும் சொற்பமே.
நெஞ்சக ஆராய்ச்சி அறக்கட்டளை 2016-இல் வெளியிட்ட தரவுகளைப் பார்க்க, மிக முக்கிய 6 பட்டாசுகளை எடுத்துக் கொண்டால், பாம்பு மாத்திரை, சரவெடி, சுஸ்ரவத்தி, புஸ்வானம், சங்கு சக்கரம், ராக்கெட் போன்றவை, அனுமதிக்கப்பட்ட அளவை விட, 200 முதல் 2000 மடங்கு அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும். எனவே, தற்போது சரவெடி போன்றவை தடை செய்யப்பட்டு, மற்ற பட்டாசுகளுக்கும் வெடிமருந்துகளின் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் சிகரெட் புகைப்பதால் எத்தனை பெரிய பாதிப்பு? (உலகில் உயிரிழக்கும் 6 பேரில் ஒருவர் புகைப்பதால் வரும் நோய்களால் பலியாகிறார்). சுற்றுச்சூழலை அல்ல, வாழ்வையே அழித்தொழிக்கும் மதுவால் சமுதாயத்துக்கு எத்தனை பெரிய தீமை? ஆண்டு முழுவதும் புகைக்கிறார்கள்' ஆண்டு முழுவதும் குடிக்கிறார்கள்! பட்டாசு வெடிப்பதென்னவோ ஒரே ஒரு நாள் அல்லது சில நாள்கள்தானே? ஆண்டு முழுவதும் அல்லவே?
சொல்லப் போனால், பட்டாசுகளில் இருக்கும் சல்ஃபர் எரிக்கப்பட்டு, காற்றில் கலந்து பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது. எனவே, மழைக்காலம் முடிந்து தண்ணீர் தேங்கி, பட்டாசுகள் வெடிக்கப்படும் நாள்களில், அப்பகுதிகளில் கொசு முட்டைகள் அழிந்து, கொசுப் பெருக்கமும் தடுக்கப்படுகின்றன.
ஆண்டு முழுதும் வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியாகும் புகைகளைக் கட்டுப்படுத்த முடியும். பயிர்களை எரிப்பதை நிறுத்திவிடலாம். கடுமையான காற்று மாசுபாட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அத்தனையும் அனுமதிக்கப்படுகின்றன. மக்களின் ஒருநாள் கொண்டாட்டமான தீபாவளி பட்டாசுக்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு?
ஒருநாள் தானே...
பட்டாசுத் தொழிலும் விதிமுறைகள், கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, வெடிமருந்து விலையேற்றம், ஊழியர் பணிப் பாதுகாப்பின்மை, சீனப் பட்டாசு இறக்குமதி போன்றவற்றால் திணறுகின்றன. ஆனாலும், அரசின் கட்டுப்பாடுகளையும் தொழில்ரீதியான பல சவால்களையும் எதிர்கொண்டு, புகையில்லா பட்டாசுகள், பசுமைப் பட்டாசுகள் எனச் சாதித்து, அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கிச் சென்றுகொண்டுதானிருக்கிறது பட்டாசுத் தொழில்.
பட்டாசுத் தொழிலையும் ஆக்கபூர்வமாக அரசுகள் வரன்முறைப்படுத்த வேண்டும். கூடவே, இதையே நம்பியிருக்கும் மக்களுக்காக தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்காகத் தடை செய்ய எவ்வளவோ இருக்கின்றன. பட்டாசுகளை மட்டும் இலக்காக்கிப் பற்ற வைக்காதீர்கள்.
ஒருநாள் தானே. பட்டாசுகளை வெடித்துத் தீபாவளியைக் குழந்தைகளும், சிறுவர்களும் கொண்டாடினால் என்ன தவறு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

