உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் எடை அதிகரிக்க...

எனக்கு வயது 56. சர்க்கரை நோய் கிடையாது. ஆனாலும் உடல் பலவீனம், சோர்வு, உடல் எடைக் குறைவு ஏற்பட்டுள்ளது.

Published On :

எனக்கு வயது 56. சர்க்கரை நோய் கிடையாது. ஆனாலும் உடல் பலவீனம், சோர்வு, உடல் எடைக் குறைவு ஏற்பட்டுள்ளது. நெய், தேன், வெண்ணெய் போன்றவை சாப்பிட்டாலும் உடல் எடை கூடவில்லை. இதை எப்படி ஆயுர்வேத மூலிகை மருந்து மூலம் குணப்படுத்தலாம்?

-பரணிதரன், கும்பகோணம்.

ஆயுர்வேதத்தில் உடலுக்கு வலிமை, ஊட்டம், நல்ல தசை வளர்ச்சி மற்றும் உடல் சக்தியை அளிப்பதற்காக பல்வேறு ரசாயன மற்றும் உடலைப் புஷ்டிப்படுத்தும் மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக மூலிகை நெய் மருந்து ஒன்று விளங்குகிறது.

'பைஷஜ்ய ரத்னாவளி' எனும் ஆயுர்வேத நூலை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆயுர்வேத நெய் மருந்து, கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை மருந்துக்கடைகளில் விற்பனையாகிறது. அதன்பெயர் என்ன, எப்படிச் சாப்பிட வேண்டும், எத்தனை கிராம் சாப்பிட வேண்டும் போன்ற விபரங்களை மருத்துவரிடம் ஆலோசித்து அறிந்து கொள்ளலாம்.

மூலிகைகளின் குணங்களை நெய்யில் கொண்டு சேர்க்கும் வகையில் தயாரிக்கப்படும் மருந்து வடிவமாகிய இதில் அமுக்கராக் கிழங்கு, பல்வேறு மூலிகைகள், பால், நெய், தேன் மற்றும் சர்க்கரை போன்ற பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. அமுக்கராக் கிழங்கு எனும் அஸ்வகந்தா மூலிகையை ஆயுர்வேதத்தில் நீண்ட காலமாக வலிமை அளித்தல், ஊட்டமளித்தல், நாடி நரம்புகளில் சீற்றமடைந்துள்ள வாத தோஷத்தை அமைதியுறச் செய்தல் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகையாகக் கருதப்படுகிறது.

இந்தத் தயாரிப்பின் லேபிளில் அஸ்வகந்தாவுடன் பல பாரம்பரிய மூலிகைகளாகிய சதாவரீ என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு, விதார் எனும் பால் முதுக்கன், மாஷபர்ணி, ஊசிப்பாலைக்கிழங்கு, அதிமதுரம், உலர் திராட்சை, ஏலக்காய், உளுந்து என மேலும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படும் பாரம்பரிய மூலிகைள் பல சேர்க்கப்படுகின்றன. இதனுடன் பசும் பால் மற்றும் நெய் போன்ற ஊட்டச்சத்து அடிப்படையிலான பொருள்களும் தயாரிப்பு முறையில் இடம் பெற்றுள்ளன.

அஸ்வகந்தா என்பது ஆயுர்வேதத்தில் மிகவும் பிரபலமான மூலிகைகளில் ஒன்றாகும். உடல் மிகவும் மெலிந்து காணப்படுபவர்கள், நீண்டகால உடல் சோர்வு உள்ளவர்கள், அதிக உழைப்புக்குப் பிறகு உடல் சக்தி குறைந்தவர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் உடல் நிலை மற்றும் செரிமான சக்தியை மதிப்பீடு செய்து அஸ்வகந்தா சார்ந்த தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆயுர்வேத கண்ணோட்டத்தில் உடல் வலிமை என்பது உணவு உட்கொள்வதால் மட்டும் கிடைப்பதில்லை. ஜீரண சக்தி நன்றாகச் செயல்பட வேண்டும். உணவு முறையாகச் செரிக்க வேண்டும். அதிலிருந்து உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து உருவாக வேண்டும். எனவே உடல் பலவீனத்துக்கு மருந்து மட்டும் கொடுப்பதைவிட, உணவு - ஜீரணம் - உறிஞ்சுதல் - தாதுபோஷணம்- உடல் வலிமை என்ற முழுமையான அணுகுமுறையே ஆயுர்வேதத்தின் சிறப்பாகும்.

நீண்ட காலமாக உடல் சோர்வு மற்றும் பலவீனம் காணப்படுபவர்களுக்கு, காரணத்தைக் கண்டறிந்த பிறகு ஊட்டமளிக்கும் சிகிச்சையின் ஒருபகுதியாக இந்த நெய் மருந்தைப் பயன்படுத்தலாம்.

உடல் எடை குறைவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உணவு குறைவு, செரிமானக் கோளாறு, நீண்டகால நோய், அதிக உடல் உழைப்பு போன்ற காரணங்களை முதலில் கவனிக்க வேண்டும். காரணத்தைக் கண்டறியாமல் உடல் எடை அதிகரிக்க மட்டும் மருந்தை எடுத்துக்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல.

வயது அதிகரிக்கும்போது உணவு உட்கொள்ளும் அளவு குறைதல், தசை வலிமை குறைதல் போன்றவை ஏற்படலாம். இந்நிலையில் அவர்களின் செரிமான சக்தி, சர்க்கரை அளவு, சிறுநீரக மற்றும் கல்லீரல் செயல்பாடு, ஏற்கெனவே எடுத்துக் கொள்ளும் மருந்துகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவர் முடிவு செய்ய வேண்டும்.

உங்களுடைய அன்றாட உணவில் பால், பருப்பு வகைகள், பாசிப்பயறு, உளுந்து, எள்ளு, பாதாம், பேரீச்சம்பழம், திராட்சை, காய்கறிகள், கீரைகள், அரிசி மற்றும் சிறுதானியங்கள், நெய் போன்றவை உடல்நிலைக்கு ஏற்ப சேர்க்கப்படலாம்.

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், இன்சுலின் அல்லது பிற நீரிழிவு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள்குறிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே இம்மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.