பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

வெற்றிக்குப் பின்னால் பெண் தியாகம்!

ஒடிஸ்ஸா மாநிலத்தின் டாரிங்பாடி அருகேயுள்ள சிகாபாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழைப் பழங்குடியின குடும்பத்தின் பிள்ளைகள் ஒரு பக்கம் பள்ளிக்குச் செல்வதுடன், காலை - மாலை வேளைகளில் மாடு மேய்ப்பார்கள்.

Published On :

ஒடிஸ்ஸா மாநிலத்தின் டாரிங்பாடி அருகேயுள்ள சிகாபாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழைப் பழங்குடியின குடும்பத்தின் பிள்ளைகள் ஒரு பக்கம் பள்ளிக்குச் செல்வதுடன், காலை- மாலை வேளைகளில் மாடு மேய்ப்பார்கள். வறுமையில் வாடும் அந்தக் குடும்பத்தில் 5 பேர் அடுத்தடுத்து மருத்துவம் பயில்கின்றனர்.

'எப்போது கீழே விழும்' என்று சொல்ல முடியாத ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டில் பிறந்து வளர்ந்த இவர்கள் இவ்வாறு உச்சம் தொடுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சாதனைக்குப் பின்னால் பெற்றோர் புர்ஸி பிரதான்- அனுசூயாவின் தியாகம், குழந்தைகளின் தொடர்ச்சியான கடின உழைப்பு மட்டுமே உள்ளது.

'வறுமை தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடாது. குடும்பக் கொண்டாட்டம், குதூகலங்களுக்கு மத்தியில் கவலையும் உள்ளது. ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள் மருத்துவப் படிப்பைத் தொடங்கவிருப்பதால், அதற்கான செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்று இருக்கிறது. ஆனால், அவர்களின் கனவுகள் நனவாகும் முன்பே முடிவுக்கு வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்கிறார் தாய் அனுசூயா.

குடும்பத் தலைவரான புர்ஸி பிரதான் இரண்டாம் வகுப்பு வரையே படித்துள்ளார். அனுசுயாவுக்குப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பே கிடைக்கவில்லை. மூத்த மகன் பிபிஷன் பிரதான், கோராபுட்டில் உள்ள ஷஹீத் லக்ஷ்மண் நாயக் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார். அண்ணனைப் பின்பற்றி, தங்கை மோனலிசா பிரதான் அதே மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் பயின்று வருகிறார்.

இளையவர்களான எஸ்ரியா பிரதான், சுனேமி பிரதான் மற்றும் மீனாட்சி பிரதான் ஆகியோர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, முறையே கலாஹண்டி, பாலங்கிர், கோராபுட் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதனால் இந்தக் குடும்பத்தில் மருத்துவம் பயில்வோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

'மருத்துவக் கல்விக்கான எங்களின் பயணத்தில் சிரமங்கள் உள்ளன. எங்கள் படிப்பைத் தொடர நாங்கள் நிறைய சிரமப்பட்டோம். சில சமயங்களில், பட்டினியாகவும் இருந்திருக்கிறோம். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெற்றோர் வயல்களில், தினக்கூலித் தொழிலாளர்களாகவும், சுமை தூக்கும் தொழிலாளர்களாகவும் வேலை செய்தனர். பெற்றோரின் போராட்டங்கள் தான் எங்களை கவனமாகப் படிக்கத் தூண்டின' என்கிறார் இளைய மகள் மீனாட்சி பிரதான்.

'எங்கள் பெற்றோரின் சூழ்நிலையைப் பார்த்து, நாங்கள் அவர்களிடம் ஒருபோதும் செலவுக்கு பணம் கேட்டதில்லை. எங்கள் தேவைகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் சுருக்கிக் கொண்டோம். ஆனாலும், எங்களுக்குத் தேவையானதைச் செய்து தர அவர்கள் தங்கள் சக்திக்கு மீறி இரவும் பகலும் உழைத்தார்கள்' என்கிறார் சுனேமி பிரதான்.

'பெற்றோர் ஒரு பக்கம் மகிழ்ச்சியிலும், இன்னொரு பக்கம் படிப்புச் செலவுக்கு என்ன செய்வது என்று கவலையுடனும் இருக்கிறார்கள்' என்கிறார் இன்னொரு மகள் எர்ஷியா பிரதான்.

'ஒரே குடும்பத்திலிருந்து நாங்கள் ஐந்து பேர் மருத்துவர்களாக வரவிருந்தாலும், பள்ளியில் படிக்கும்போது, நாங்கள் பள்ளிக்குச் செல்வதுடன் நேரம் கிடைக்கும் போது வயல்வெளிகளில் கால்நடைகளை மேய்த்து வந்தோம். சோளம் மற்றும் மஞ்சள் சாகுபடி பணிகளிலும் உதவி வந்தோம். இப்போது மருத்துவம் படித்தாலும், வீட்டுக்கு வரும்போது முதலில் செய்து வந்தது போல வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்து வருவோம்' என்கிறார்கள் அவர்கள் ஒருசேர!

புர்ஸி பிரதானின் தம்பி ஜிஷியா பிரதானின் மகளாக மீனாட்சி பிரதான் இருந்தாலும், சிறுவயது முதலே புர்ஸி பிரதான் - அனுசுயாவால் வளர்க்கப்பட்டவர். ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இக்குடும்பத்தில், இன்னும் பள்ளியில் படிக்கும் இரண்டு இளைய மகன்களும் இருக்கிறார்கள்.

'நாங்கள் படிக்க முடியாமல் போனாலும், படிப்பின் வல்லமையை நாங்கள் உணர்ந்திருந்தோம். வாழ்க்கையில் எவ்வளவு நிதி நெருக்கடி இருந்த போதிலும் எங்கள் பிள்ளைகளின் கல்வியைத் தடைசெய்ய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை' என்கிறார் புர்ஸி பிரதான்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.