பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

கரிசல்காட்டு சிறுகதை: வெதப்பு

ஊருக்குள்ள ஒரு சனமும் இல்ல. மழன்னா மழ... அப்படியொரு மழ.

Published On :

மு.மகேந்திர பாபு

ஊருக்குள்ள ஒரு சனமும் இல்ல. மழன்னா மழ... அப்படியொரு மழ. பேஞ்சு ஓஞ்ச மழயில கம்மாய்க்கு வர்ற தண்ணியப் பாக்க எல்லாரும் போய்ட்டாங்க. தென்மேற்கு மூலயில மழ பேஞ்சா, அதாவது எட்டயபுரத்தில மழ பேஞ்சா பென்னையாபுரம் கம்மாய் நெறஞ்சிரும்.

அப்படித்தான் இன்னிக்கும் மழ பேஞ்சது. கோவிச்சுக்கிட்டுப் போன மருமகள்கள் போல அங்கும் இங்குமாய்க் கிடந்த மேகங்கள் சரசரவென கருக்கூட, சூரியன் இருந்த இடம் தெரியாமல் போக, வானம் கும்மிருட்டாக மாற... அடின்னா அடி சும்மா மூணுமணி நேரம் மழ 'ச்சோனு' அடிச்சு ஊத்துது. வீட்ட விட்டு ஒரு சனம்கூட வெளில தல காட்டல. இப்பத்தான் கொஞ்சம் வெறிச்சிருக்கு. மூச்சுக்காத்த உள்ளிழுத்து வெளிய விட்டது மாதிரி மூணு மணி நேரமா மழயா தண்ணிய நிலத்துல கொட்டிருக்கு வானம். காத்தில்லாத அடைமழை. நின்னு பேஞ்சு முடிச்சிருச்சு.

வேலித்தூர்ல கோழியும் குஞ்சுகளும் பம்முதுக. ரெக்கய கொட மாதிரி வளச்சு தாய்க்கோழி குஞ்சுகளை அரவணைக்குது.

வீட்டு ஓட்டுல விழுந்த மழத்தண்ணி குத்தால அருவி போல ஓடுது. பத்து வீட்டு ஓட்டுத்தண்ணி சிறு வாய்க்காத்தண்ணி போல சலசலனு தெருவுல ஓடுது. வீட்டுல இருக்குற அண்டா, குண்டாவத் தண்ணியப் பிடிக்க எடுத்து வைக்க, அது நிரம்பி வழிஞ்சு ஓடுது.

ஓட்டுத்தண்ணி வீதிவர, அந்தத்தண்ணில சேமியா நனைஞ்சு உப்பலாகி நீந்திவந்தா எப்படி இருக்குமோ அப்படி நீள நீளமா மண்புழு நெளிஞ்சு வளஞ்சு வருது.

அங்ன அங்கன இருக்குற வேப்ப மரத்துக்கிட்ட ஆள் வரும்போது மரத்துக் கொப்ப ஆட்டிச் 'சடசடனு' இலைத்தண்ணிய விழுகவச்சு வேடிக்கக் காட்டுது எளவட்டக் கூட்டம். 'ஏன்டா! சூசுவானு இருக்க மாட்டிகளாடா? சும்மாவே மழ பேஞ்சு நடக்க முடியாம நடந்துக்கிட்டு இருக்கோம். இதுல நீங்க வேற கிருத்திரியம் பண்ணிக்கிட்டு இருக்கிங்க. போங்கடா அங்கிட்டு பாடுசோலிகளப் பாத்துக்கிட்டு...' பொய்க் கோவத்தோடு இளவட்டங்களைக் கண்டித்தபடியே நடந்தார் ராமலிங்கம்.

நடக்க முடியாத பெரியாளுக கூடக் கம்ப ஊண்டி நடக்குறாக கம்மாய்க்கு. இந்த வருசத்து வெள்ளாம வீடு வந்து சேரணும்னா கம்மா நிறையணும். அப்பத்தான் அத நம்பி இருக்குற அத்தனை வயல்களும் நெல் கதிரச் சுமக்கும். சம்சாரிக்கு வயித்துல பால வார்க்கும்.

'ஏ ... கரையேறும் போது பாத்து ஏறுங்கப்பா. நல்லா வழுக்குது. கால் கட்டை விரல நல்லா அழுத்தி மிதிச்சு ஏறுங்க. இல்லாட்டி வழுக்கி விழுந்து பிட்டாணி தெரிச்சுறப் போகுது...' என சிரித்துக்கொண்டே சம்முகம் சொன்னார்.

எட்டயபுரம், ராசாப்பட்டி, நம்பியாரம் கடந்து மழத்தண்ணி எட்டுக்கண் பாலத்தில 'சலசலனு' அடிச்சு ஓடி வருது. ஓடையில கெடந்த முள்ளயும், பழைய துணிமணிகளையும் கவைகவையாத் தார்ப்பாயச் சுருட்ற மாதிரி சுருட்டிக் கொண்டு வந்து நம்பியாரம் எட்டுக்கண் பாலத்தில அடைக்குது. இதனால பாலத்த முக்கி மேல நுரைநுரையா ஆர்ப்பரிச்சு ஓடுது தண்ணி.

'அடிச்ச மழக்கி எப்படியும் கம்மா நெறஞ்சு மறுகால் ஓடுமப்போய்' - நாலு பேர் கூடும் இடத்திலெல்லாம் இதான் பேச்சாக இருக்கு. நண்டு சிண்டுக நாலஞ்சு பேர் கம்மாத் தலயில நிக்குதுக... அதாவது கம்மாக்குள்ள வர்ற மொதத் தண்ணிய யாரு பாக்குறதுனு ஒரு போட்டி. அப்படிப் பாத்த பய ஒரு மாசமாச் சொல்லுவான், 'நாந்தான் தண்ணியப் பாத்தேன்... நாந்தான் தண்ணியப் பாத்தேன்'னு.

விப்பு, விருசல் எல்லாத்தையும் நெரப்பி கம்மாக்குள்ள கால் வைக்குது மழத்தண்ணி. கும்மாளம், கும்மரிச்சம், ஆர்ப்பரிப்பு, சன்னச் சத்தம்னு கம்மாவே சத்தத்தில வெடிச்சுச் சிதறுது தீபாவளிக்குப் போடுற அணுகுண்டு வேட்டுபோல.

விப்புக்குள்ள இதுநா வர குடியிருந்த பூரானும், சேடானும், பூச்சிகளும் கதிகலங்கி ஓடுதுக.

'இதுமாரி இன்னொரு மழ அடிச்சு ஊத்துச்சுன்னா ரெண்டு போகம் எடுத்திரலாம்...' ஊர்ப்பெருசு சந்தோசத்தில சொல்றாரு.

'எலேய் ... எள வட்டங்களா? எட்டு மடையும் கிச்சுனு இருக்கணும்டா. தேவையில்லாம மடய ஒரு பயலும் தெறக்கப்படாது. தண்ணியச் சிக்கனமாப் பாச்சி வெள்ளாமய வூடு கொண்டாந்து சேக்கணும்' - இது ஊர்க்குடும்பன் இருளாண்டியின் உத்தரவு.

'சரிங்கப்பு. நாங்க பாத்துக்கிறுதோம். ரெண்டாமடதான் கொஞ்சம் கசிவு இருந்துச்சு. அதயும் களிமண்ண உருட்டி கிச்சுனு அடச்சிப் புடுவோம்' என்றான் செல்வராசு.

'ஆமாப்பா. கொஞ்சம் பாத்துக்கோங்க. எளவட்டங்க மனசு வச்சாத்தான் வெள்ளாம வீடு வந்து சேருமப்பா...' என்றார் இருளாண்டி.

'யார்ரா அவன்? லூசுப்பய! செருப்பப் போட்டு கம்மால்ல நடக்க முடியுமாடா? வெறுங்கால்ல நடக்கறப்பவே பூட்சு காலால நடக்கற மாதிரி இருக்கு! இதுல செருப்பு வேற. மூஞ்சியவும் மொகரக்கட்டயவும் பாரு!' என்று சொல்லிச் சிரித்தான் சத்தியராசு.

'ஏப்பா! அந்தப் பக்கம் போற ஆளு கவனமாப் போங்க. கருவமுள்ளு வாச்சாத்தி மாதிரி வாயப்பொளந்துகிட்டு கெடக்கு. மிதிச்சிங்கன்னா வலில உசுரு போயிருமப்பா!' என எச்சரித்துக்கொண்டு தலைப்பாகைக்குள் வைத்திருந்த பீடியை எடுத்துப் பற்ற வைத்தான் ராமர்.

இனிமேல் சம்சாரிகளைப் பிடிக்க முடியாது. அவரவர் அவரவர்க்கான வேலையில் இறங்கி விடுவார்கள். விதைநெல் வாங்கணும். தொழி வெட்டணும். நாத்தாங்கால் போடணும். வேலைக்கு ஆள் கிடைப்பதும் அரிது. சொந்த வயல் இல்லாதவர்கள்தான் தினக்கூலி வேலைக்கு வருவார்கள். அவர்களில் சிலர் வெளியூரில் இருக்கும் சம்சாரிகளின் வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இனி வயலெங்கும் பசுமை போர்த்திக் காணப்படும்.

'முருக மாமா! முருக மாமா!'

'என்னத்தா! யாரது மாடத்தியா? என்ன வேணும்?' மாட்டின் மடியில் பால் பீச்சிக் கொண்டிருந்த முருகன், குரலை வைத்து மாடத்தியா எனக் கேட்டார்.

'மாடத்திதான் மாமா. நாத்தாங்கால் போடணும். அதான் வெத நெல் வாங்கலாம்னு வந்தேன்!'

'அப்படியா? இந்த வருசத்தில மொத மொத நீதான் வந்து கேட்குற. குலுக்கைக்குள்ள வெதப்பாட்டுக்குனே நெல் போட்டு வச்சிருக்கா உங்க அக்கா. எத்தன படி வேணுமோ வாங்கிட்டுப் போமா!'

'ரொம்ப நன்றி மாமா!'

'எக்காவ்... லட்சுமி அக்கா... நாந்தேன் மாடத்தி...'

ஆட்டுக்குட்டிக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த லட்சுமி திரும்பினார். வாயில் நுரை சொட்டச்சொட்ட ஆட்டுக்குட்டி குதியாளம் போட்டு வச்ச வாய் எடுக்காமல் பாலை உறிஞ்சிக் கொண்டிருந்தது. மற்றொரு குட்டி பால்புட்டியின் இரப்பரை உறிஞ்சுவதற்கு அல்லாடிக் கொண்டிருந்தது.

'வா... மாடத்தி. என்னவாம் திடுதிப்புனு வந்திருக்கறவ?'

'நல்லா மழ அடிச்சு ஊத்திருக்கு அக்கா. ஆளும்பேருமா வெதப்பு போடும்போதே நாமளும் போட்ருவம்னு வெத நெல் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன். போன வருசமும் உங்ககிட்டத்தான் வாங்குனேன். முக்குறுணி முழுசும் நெல்லு கொத்துக் கொத்தா வெளஞ்சது. இன்னிக்கு வரைக்கும் அந்த நெல்லத்தான் அவிச்சு, அரச்சு சோறாக்கி வயித்த ரெப்பிக்கிட்டு இருக்கேன். அதான் இந்த வருசமும் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன். எல்லாம் உங்க கைராசிதான்க்கா...' படபடனு பேசி முடித்தாள் மாடத்தி.

'சர்த்தேன். என் ராசி உனக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா...அதுல பாரு மாடத்தி...'

மாடத்தியின் ஈரக்கொலை படபடனு அடித்தது. அக்கா என்னமோ சொல்லப் போகுது. என்ன சொன்னாலும் வெதநெல்ல வாங்காம வூட்டுக்குப் போகக்

கூடாது என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

'போன வருசமும் வந்த. முந்தின வருசமும் வந்த. நானும் மறுக்காம நீ கேட்குற வெதநெல்லக் கொடுக்குறேன். வெத நெல்ல வாங்கிட்டுப் போறவள அடுத்த வருசம் வெத நெல்ல வாங்க வரும்போதுதான் பாக்குறாப்ள இருக்கு. ஒரு கள எடுக்கவோ, கதிரறுப்புக்கோ கூப்டா இந்தா வாரேன்க்கா, அந்தா வரேன்க்கானு சாக்குப் போக்குத்தான் சொல்லி, சொந்தம் சுருத்துனு போயிடுற. எனக்கு ஒரு நாக்கூட வேலக்கி வந்த மாதிரித் தெரியலயே!'

'அது வந்துக்கா... எங்க அண்ணன் அந்தச் சமயத்துல கள எடுப்புக்குக் கூப்டுச்சு. அதான் வரத் தோது அமையல. இந்தவாட்டிக் கண்டிசனா வந்துருவேன்...'

'சரியத்தா. வேலனு கூப்டா சொந்தபந்தம்னு சொல்லிருவ. வெத நெல் தாரேன். வாங்கிட்டுப்போ. நான் என்ன முந்தானையில முடிஞ்சு வச்சு என்ன பண்ணப்போறேன்? சம்சாரிக்குச் சம்சாரி ஒத்தாசதான?' எனச் சொல்லிக் கொண்டே கையில் இருந்த சோடா பாட்டில் பால் பாட்டிலை சுவரோரத்தில் வைத்து விட்டு குலுக்கையிலிருந்து விதை நெல்லை எடுத்துக் கொடுத்தார் லட்சுமி.

முகம் முழுக்கச் சந்தோசம் மின்ன கொண்டு வந்திருந்த சணல் சாக்கில் நெல்லை வாங்கிக்கொண்டு சிரிப்புடன் கிளம்பினாள் மாடத்தி. அவளைத் தொடர்ந்து இன்னும் ஒன்றிரண்டு பேர் வருவார்கள். யாருக்கும் இல்லையென்று சொல்லாமல் வெதநெல் கொடுப்பார் லட்சுமி.

பெய்த மழையால் ஊரே கொண்டாட்டத்தில் இருக்கு. சுத்துப்பட்டியில் பொன்னையாபுரம் கண்மாயைப் போல வேறெந்த ஊர்க்கண்மாயும் இல்லை. பல நூறு ஏக்கர் வயல்களுக்குப் படியளக்கும் பரமபிதாவாகக் கண்மாய் இருக்கிறது. பொன்னையாபுரம், மேல நம்பிபுரம், கீழநம்பிபுரம் என மூன்று ஊர் மக்களின் உணவுத் தேவையையும் இவர்கள் மூலமாக பல்லாயிரம் மக்களின் உணவுத் தேவைகளையும் நிறைவு செய்வது இந்தக் கண்மாய்தான்.

கலுங்கு வழியாகக் கண்மாயில் மறுகால் பாய்ந்து ஓடுகிறது தண்ணீர். குற்றால அருவி போல விழுகிறது. அத்தண்ணீரில் ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு குளியல் போடுகிறார்கள். இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் தண்ணீர் மறுகால் பாய்வது நின்று விடலாம். அதற்குள் ஆச தீர, அலுப்புத் தீர குளிக்கின்றனர் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும். அவர்களை நனைத்துச் சென்ற தண்ணீர் ஓடையில் சலசலத்துச் சந்தோசமாக ஓடுகின்றது.

விதை நெல் வாங்கியவர்களும், வீட்டில் நெல் வைத்திருந்தவர்களும் சணல் சாக்கில் சிறு மூட்டையாகக் கட்டிக்கொண்டு தலச்சுமையாகக் கண்மாய்க்குக் கொண்டு சென்றனர்.

மாடத்தியின் கணவன் கருப்பசாமி முழங்கால் அளவுள்ள கண்மாய்த் தண்ணீருக்குள் நெல் மூட்டையை வைத்து, அதன் மேல் சிறு முண்டுக்கல் ஒன்றையும் வைத்தான். ஆங்காங்கே ஊர்க்காரர்கள் அதுபோல் சின்ன சின்ன சாக்குகளில் மூட்டையாகக் கட்டி வைத்தனர். விதை நெல் தண்ணீருக்குள் நன்கு மூழ்கும். மறுநாள் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் வைத்து, மறுநாள் விதைக்க நாத்தங்காலுக்குள் கொண்டு வருவார்கள். பிஞ்சுக் குழந்தையின் வாய்க்குள் முளைக்கூறிவரும் பல்லைப்போல சாக்கு மூட்டையின் வெளியே தலைநீட்டி இந்த உலகை எட்டிப்பார்க்கும் நெல் விதைகள். விதை நெல் மூடை எங்கு வைத்தார்களோ அது அங்கேயே கண்மாய்க்குள் பத்திரமாக இருக்கும். களவுக்கோ, கையாடலுக்கோ அங்கு வேலையில்ல.

மாடத்தியும் கருப்பசாமியும் கடின உழைப்பாளிகள். பொழுது விடிஞ்சது முதல் பொழுது அடைஞ்சது வரை வயலிலே கிடப்பவர்கள். கண்மாயின் இரண்டாம் மடையிலிருந்து தண்ணீர் சுழற்றிக்கொண்டு வாய்க்காலில் சென்று கொண்டிருந்தது. தேவையானவர்கள் வயல் முன் வாமடை வெட்டிப் பாய்ச்சினார்கள். கடைசி வயல் வரைக்கும் தண்ணீர் பாய வேண்டும். யாருக்கும் தண்ணீர் தேவையில்லை எனில், வாய்க்காலின் குறுக்கே அடைத்துத் தண்ணீர் பாய்ச்சலாம். இல்லையென்றால் வாமடையை மட்டும் திறந்து வைத்தால் தண்ணீர் பாய்ந்து கொண்டே இருக்கும்.

கருப்பசாமி வாமடையைத் திறந்தான். உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட அவனது காலைத் தொட்டுக் கொண்டு தண்ணீர் வயலுக்குள் பாய்ந்தது. தொழி வெட்ட வேண்டும். மண்ணுக்கு அடி உரமாக கொழிஞ்சி, ஆதாழைச் செடிகளை வெட்டிப் போட வேண்டும். தொழி வெட்டியபின் அதை மிதித்து மண்ணுக்குள் தள்ள வேண்டும். பரம்பு அடிக்க வேண்டும். அப்போதுதான் வயல் மேடு பள்ளமின்றி சமமாக இருக்கும். வேலைகள் ஒவ்வொன்றும் அவனது மனக்கண்ணுக்குள் சுற்றிச் சுழன்றடித்தன.

மாடத்தி, கம்மாக் கரையோரத்தில் இருக்கும் கொழிஞ்சிச் செடிகளையும், ஆதாழைச்செடிகளையும் வெட்டிக் கொண்டு வந்தாள். கருப்பசாமி தொழி வெட்டினான். தண்ணீர் பாயப்பாய 'தருக்புருக்' எனச்சகதிக்குள் கால் மாட்டிக்கொண்டு சத்தமிட்டது. ஒருவனாக இருந்து மண்வெட்டியால் தொழி வெட்டி மண்ணைக் கீழாக அமிழ்த்தினான். மண்ணுடன் கலந்து தண்ணீர் அவன் முகத்திலும் உடம்பிலும் தெறித்து விழுந்தது. உச்சிப் பொழுதானது. வெட்டிக் கொண்டிருந்த இடத்திலிருந்து நாலு எட்டு வைத்தான். இரண்டு கை

களாலும் தண்ணீரை அள்ளிக் குடித்தான். தொண்டைக்குள் இதமாய்ச் சென்றது தண்ணீர்.

தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்து, ஒரு உதறு உதறிவிட்டு பக்கத்தில் இருந்த சீனியப்பனின் வயல் மரத்தடியில் உக்காந்தான். தூக்குவாளியில் பழைய சோறும் கருவாடும் இருந்தது.

'என்னப்பா கருப்பசாமி... தொழி வெட்ட ஆரம்பிச்சிட்டியா?'

'ஆமா ராமரண்ணே. ஆளுக தேடிப்பாத்தேன். அவரவர் வேலையில முழு மூச்சாத் திரியிறாக. ஆளுச்சேத்து எப்ப தொழி வெட்ட? அதான் நாமளே கொஞ்சம் கொஞ்சமா வெட்டுவம்னு இறங்கிட்டனப்பா.'

'அதுவும் சரிதானப்பா. வேலய முடிச்சிட்டியனாச் சொல்லப்பா. தோது இருந்தா நமக்கு ரெண்டு நாள் வா. சம்பளத்த சாந்திரமே கையோட கொடுத்து விட்ருவனப்பா. கூட பத்து இருபது கூடத்தாரேன். என்ன நாஞ்சொல்றது?'

'சர்த்தாம்ணே. இன்னிக்கு நாத்தாங்கால் வெட்டிருவேன். நல்லா செடிகளப் போட்டு மிதிச்சுப் பரம்படிச்சிட்டம்னா நாளைக்கே கூட உனக்கு வேலைக்கு வாரனப்பா...' என்றான் கருப்பசாமி.

'ரொம்பச் சந்தோசமப்பா. எங்க... நீ வேற ஆளுக யாருக்கும் வேலைக்குப் போயிருவியோன்னு நெனச்சேன்.'

'இல்லப்பா. இன்னும் யாரும் கூப்பிடல. மொத மொத நீதான் கூப்டிருக்க. அதுக்கு முன்னாடி வெத நெல் கொடுத்த முருக அண்ணன்ட்ட ஒரு வார்த்த கேட்டுக்கிறேன். அவுக நிறைய வெள்ளாமை போடுறவுக. வருசந்தோறும் வெதநெல் தாராக. அவுகளுக்கு வேல இருந்தா முடிச்சிட்டு அதே கையோடு சூட்டோடு சூட்டா உனக்கு வந்திரனப்பா. என்ன நாஞ்சொல்றது?'

'சரிதானப்பா. என்ன ஏதுனு ஒரு தாக்கல் சொல்லப்பா சாயந்திரம்' சொல்லிக்கொண்டே ராமர் வரப்பில் நடந்து தன் வயலுக்குச் சென்றான்.

கொழிஞ்சிச்செடி புடுங்கிக் கொண்டு மாடத்தியும் வந்தாள். 'ஏ புள்ள... சாப்டுப் போ. மணி எப்படியும் ரெண்டு இருக்கும். வயித்தக் காயப்போடக்கூடாது. வா!' என்றான்.

வாய்க்காலில் சலசலத்து ஓடிக்கொண்டிருந்த தண்ணீரால் முகத்தைக் கழுவிவிட்டு, வேப்பமரத்து நிழலில் மாடத்தியும் வந்தமர்ந்தாள். கொப்பில் தொங்கவிடப்பட்டிருந்த தூக்குவாளியை எடுத்தாள். அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு காக்கைகள் இவர்களிடம் வந்தன. கொஞ்சம் சோற்றுப் பருக்கைகளை வரப்பில் அள்ளி வைத்தாள். 'கா...கா' என அழைத்துத் தின்றன.

தூக்குவாளிச்சோறை அஞ்சு விரல்களாலும் அள்ளிச்சாப்பிட்டான் கருப்பசாமி. மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த மாடத்தியும் சாப்பிட்டாள்.

'ஒடித்து வந்த குழைகளை நாத்தாங்காலில் போட்டு மிதித்து பரம்படித்துவிட்டால், வெயில் தாழ சாய்ந்திரமே விதைநெல்லைப் பாவிவிடலாம். அதன் பிறகு நாத்தாங்காலில் நாத்து வளர இருபத்தியொரு நாள்கள் ஆகும். அன்றாடம் வேலைக்குக் கூப்பிடும் சம்சாரிகளுக்குப் போய் அன்றாடச் செலவுகளைச் சரிசெய்துவிடலாம். சரிதான நாஞ்சொல்றது?' என்றாள் மாடத்தி.

'சரிதானத்தா நீ சொல்றது' என்றான் கருப்பசாமி. சாப்பிட்ட கையோடு தூக்குவாளியைக் கழுவிவைத்து விட்டு நாத்தங்காலில் இறங்கி, வேலையை முடுக்கினான். மாடத்தியும் தழைகளைப் போட்டு தொழி மிதித்துப் பக்குவப்படுத்தினாள்.

சூரியன் இறங்கிக் கொண்டிருந்தான் மேல்வானத்தில். விதை நெல்லை எடுத்து வந்தால் கையோடு விதைத்துவிடலாம் என மாடத்தி சொல்ல, 'நீ செத்தோடம் இரு. போன சோடுல நெல் மூடையைத் தூக்கியாரேன்' எனச் சொல்லிக்கொண்டு நாத்தங்காலில் இருந்து வரப்பில் ஏறினான்.

'அவக் அவக்' என வேகமாக எட்டு வச்சு அடுத்த அஞ்சாவது நிமிசத்தில் வீட்டுக்கு வந்தான். நார்ப்பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டான். தலைப்பாவையை அவிழ்த்து மீண்டும் ஒரு முறை கட்டிக்கொண்டு, ஆட்டுக்கல்லில் இருந்த விதை நெல் மூடையைத் தலையில் தூக்கி வைத்தான். மூடைக்குள்ளிருந்த தண்ணீர் கசிந்து தலை வழியாகக் கன்னத்தில் வேர்வை போல ஒழுகத்தொடங்கியது.

லாவகமாகவும், வேகமாகவும் எட்டு வச்சு நடந்தான். 'இருக்கிற பயலுகளில இந்த நாராயணன் இருக்கானே! ச்சே... என்ன மனுசன் வரப்பைச் சீவிச்சீவி கோடு போலக்கொண்டு வந்து மிதியடி வைக்கக்கூட இடமில்லாமப் பண்றானே!' என மனசுக்குள் வைதபடியே வயலுக்கு வந்தான்.

மாடத்தி, நாத்தங்காலைச் சமப்படுத்தி வைத்தாள். வரப்பில் விதைநெல் மூட்டையை இறக்கு வைத்தான். மந்தையம்மாத் தாயை வணங்கினான். 'போன வருசம் மாதிரியே இந்த வருசமும் வெள்ளாமை வீடு வந்து சேரணும் தாயீ!' என்றான் இருகைகளையும் கூப்பியபடி.

மூட்டையை இரண்டு கைகளாலும் மன்னினான். முளைக்கூரி இருந்த விதைமணிகளை இரண்டு கைகளாலும் அள்ளிக் கொட்டானில் போட்டான். பச்சைப்புள்ளையை நெஞ்சோடு சேத்து அணைப்பது போல் கொட்டானை நெஞ்சின் இடப்புறம் வைத்து, இடதுகையால் சேர்த்து அணைத்துக்கொண்டான். வலது கையால் விதை நெல்லை அள்ளினான். மீண்டும் ஒரு முறை கண்களை மூடி, சாமியைக் கும்பிட்டு உள்ளம் நெக்குருக நாத்தங்காலில் ஈசான மூலையில் நெல்லைப் பாவினான். விழுந்த விதைகள் மாடத்தியைப் பார்த்துச் சிரித்தன. மாடத்தியின் கண்களில் நீர் கசிய பரவசத்துடன் கைகளைக் கூப்பிக்கொண்டிருந்தாள். 'இந்த வருசமும் வருணபகவான் நம்மை வாழ வைப்பான்' என்ற நம்பிக்கை அவள் கன்னங்களில் வழிந்த நீரில் தெரிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.