
பறவைகளுக்குத் தண்ணீர்ப் பந்தல்!
ஒரு புள்ளியில் தொடங்குவதே அழகிய கோலமாகிறது.
ஒரு புள்ளியில் தொடங்குவதே அழகிய கோலமாகிறது. அதுபோல், ஒருவர் பறவைகளின் தாகத்தைத் தணிக்க, முப்பது ரூபாய் மதிப்புள்ள பாத்திரம் ஒன்றில் தண்ணீர் நிறைத்துத் தொடங்கி வைக்க, அது வளர்ந்து 6,450 பேர் இன்று தமிழ்நாட்டில் உள்ள பறவைகளின் தாகத்தைத் தணிக்க உதவி வருகின்றனர். காங்கிரீட் கிண்ணத்தில் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கும் இந்தச் சிறிய முயற்சி, கோவை - பொள்ளாச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரு பாடமாக மாறியுள்ளது.
இதற்கு வித்திட்ட வெற்றிவேல், பொள்ளாச்சியில் 2018-ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் 'இயற்கையை நேசி' என்ற அமைப்பின் பொறுப்பாளராவார். இந்தச் சாதனை குறித்து அவர் கூறியது:
'காங்கிரீட் காடுகளாக மாறிவரும் நகர்ப்புறங்களில் மரங்கள் குறைந்துவிட்டன. அதனால் பறவைகளும் குறைந்துவிட்டன. இருக்கும் சில பறவைகளும், குடிக்கத் தண்ணீர் கிடைக்கும் இடங்களைத் தேடிப்போய் விடுகின்றன.
ஆரம்பத்தில், பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க, பயன்படுத்தப்பட்ட எண்ணெய் டப்பாக்களை வெட்டி, அவற்றில் உணவையும் தண்ணீரையும் வைத்தோம். ஆனால், அவை காலப்போக்கில் துருப்பிடித்தன.
பறவைகளுக்குத் 'தண்ணீர்ப் பந்தல்' வைக்க, நீடித்து உழைக்கக்கூடிய கிண்ணத்தை வடிவமைப்பு செய்ய முடிவெடுத்ததன் விளைவாக, பறவைகளுக்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, உள்ளூரில் தயாரிக்கக்கூடிய காங்கிரீட் கிண்ணம் உருவாக்கப்பட்டது.
வெறும் 30 ரூபாயில் சிமென்ட் கலவையில் தயாரிக்கக்கூடிய, நீண்ட காலம் உழைக்கும், சிறிய தண்ணீர்த் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி நகரத்தில் வீடுகளில், அலுவலகங்களில், கடைகளில் ஆங்காங்கே வைத்து வருகிறோம்.
இப்போதைய கிண்ணத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் நிறைக்கலாம். பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெப்பமான காலநிலையில், பறவைகள் இவற்றில் இறங்கி 'ஹாயாக' குளிக்கவும் செய்யலாம். கடந்த மூன்றாண்டுகளில், 6,450-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான நீர்த் தொட்டிகளை இலவசமாக விநியோகித்துள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களிலும், வனத்துறையினருக்கும் இந்தத் தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
சிறு தொட்டிகளை விநியோகிப்பதோடு எங்கள் பணி முடிந்துவிடுவதில்லை. பறவைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தொட்டிகளைத் தொடர்ந்து சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பிப் பராமரிக்குமாறு பொதுமக்கள், மாணவர்கள், சிறார்களை ஊக்குவித்து வருகின்றோம்.
பலர் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகள், பால்கனிகளில் இத்தகைய நீர்த்தொட்டிகளை வைக்கத் தொடங்கியுள்ளனர். மாணவர்கள் தொட்டிகளைப் பராமரிப்பதிலும், அவற்றில் தண்ணீர் நிரப்பி வைப்பதிலும் உதவுகின்றனர். கோடைக்காலத் தேவையைச் சமாளிக்க, டிசம்பர் மாதத்திலிருந்தே எங்கள் குழுவினர் முன்கூட்டியே தொட்டிகளைத் தயாரிக்கத் தொடங்குகின்றனர். பின்னர், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான வெப்பமான மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் இவை விநியோகிக்கப்படுகின்றன.
பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதுடன் நின்றுவிடாமல், பொள்ளாச்சி முதல் வால்பாறை வரை மலைப்பகுதியில் உள்ள நெகிழிக் கழிவுகளை ஆண்டுதோறும் அகற்றி வருகிறோம். ஆனைமலைப் பகுதியில் வாழும் பழங்குடியினர் வாழும் தெருக்களில் இரவு நேரத்தில் விளக்கு வசதிக்காக தொழில் நிறுவனங்களிடம் பேசி, சோலார் விளக்குகளைப் பொருத்த உள்ளோம்' என்கிறார் வெற்றிவேல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




