சுடச்சுட

  
  sk11

  சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து நடக்கும் தொலைவில் உள்ளது மகாத்மா காந்தி நூல் நிலையம். மிகச் சிறிய அளவிலான இடத்தில் 1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூலகத்தை இப்போதும் பராமரித்து வருபவர் 90 வயதான மகாலிங்கம். இவரை இப்பகுதியில் "நூலகத் தாத்தா' என்றே அழைக்கிறார்கள். மாலைப் பொழுது ஒன்றில் அவரைக் காண சென்ற போது கதர்சட்டை, கதர் வேட்டியுடன் நூலகத்தில் அமர்ந்திருந்தார். நூலகத்தின் நடுவே மகாத்மா காந்தி சிலை வைத்து பராமரித்து வருவதை பார்க்க முடிந்தது.
   உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றதும் முதுமையிலும், வேகத்துடன் பேச ஆரம்பிக்கிறார்:
   நான் சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன்.
   5-ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். குடும்ப வறுமை காரணமாக தையல் கடையில் கூலி வேலைக்குப் போனேன். ஆனாலும் எனக்கு இலக்கியத்தின் மீதும், கதை கட்டுரைகள் படிப்பதிலும் ஆர்வமுண்டு. நான் எப்பொழுதும் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டே இருப்பேன். வடுவூர் துரைசாமி, வை.மு. கோதை நாயகி, ஆரணி குப்புசாமி முதலியார், மு.வ, கல்கி, அகிலன், சாண்டில்யன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கி வந்து படிப்பேன். அவர்களுடைய எழுத்து நடை எனக்குப் பிடிக்கும். ஆகவே அவர்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் சேகரித்தேன்.
   இப்படியாக 200 புத்தகங்கள் சேர்ந்தது. அவற்றையெல்லாம் மரப்பெட்டியில் போட்டுக் கொண்டு சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் தெருவில் தேரடி ஏதிரில் இருந்து என்னுடைய நண்பர் நாராயணசாமி பால் கடைக்குக் கொண்டு போனேன். அவரிடம் "இந்தப் புத்தகங்களைப் படிப்பவர்களுக்குக் கொடுத்துத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். எனது தையல் வேலையையும் இங்கு இருந்து செய்கிறேன்' என்றேன். என்னைப் பற்றித் தெரிந்து இருந்ததால் மறுப்பு ஏதும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்துவிட்டார். 200 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் தற்போது 30,000 புத்தகங்களுடன் இயங்கி வருகிறது.
   உங்கள் நூலகத்தின் சிறப்பம்சம் என்ன?
   காங்கிரஸ் எம்.எல்.ஏ சி.ஆர். ராமசாமி தலைமையில் பரலி சு.நெல்லையப்பரால் இந்த நூலகம் திறக்கப்பட்டது. பிறகு, பொதுமக்களின் அன்பாலும், பல நல்ல மனிதர்களின் உழைப்பாலும் வளரத் தொடங்கியது. இங்கு இருக்கும் எந்தப் புத்தகங்களைத் திறந்தாலும் அதில் அன்பளிப்பாளர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். "மக்களால் மக்களுக்காக' என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
   இந்த நூலகத்தில் நூறு ஆண்டுகளைக் கடந்த பல அரிய புத்தகங்கள் உள்ளன. 1935-இல் வெளியான மகாகவி காளிதாஸர் எழுதிய ரகுவம்ச காவியம் உட்பட இலக்கியம், கவிதை, நாவல், மொழி பெயர்ப்பு நூல், தமிழின் முதல் துப்புறியும் நாவல், வாரியார் நடத்திய திருப்புகழ் அமிர்தம் என்கிற ஆன்மிக இதழின் 1937 முதல் 1952 வரையிலான தொகுப்பு, சங்க இலக்கிய நூல்கள், முதல் நவீன இலக்கிய நூல்கள், உட்பட பலதுறை நூல்களும் உள்ளன.
   சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நூலகத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில் பெண் உறுப்பினர்கள் அதிகம். பெண்களின் விருப்பமான இலக்கியப் புத்தகங்களோடு, சிறந்த பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் என்னிடம் உள்ளன. பல பெண்கள் இந்த நூலகத்தை சிறப்பாக நடத்துவதற்கு உதவி செய்து வருகிறார்கள். அவர்களுக்குப் பிடித்த ஏராளமான ரமணி சந்திரன் நாவல்கள் உள்ளன. குறிப்பாக நூல்கள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்களைப் பக்கவாட்டில் ஒட்டுவது, புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைப்பது, புத்தகங்களை அன்பளிப்பாக அளிப்பது என பெண் வாசகர்களின் பங்கு நிறைந்திருக்கிறது. வாசகர்கள் பல அரிய புத்தகங்களை என்னிடம் தான் கொடுத்து வைத்து இருக்கிறார்கள்.
   நூலகம் மூலமாகக் கிடைத்த மறக்க முடியாத அனுபவம்?
   புத்தகங்களை வாங்கிக்கொண்டு போனவர்கள் திருப்பிக் கொடுப்பதில்லை. அவர்களைத் தேடிச் செல்லும் அளவிற்கு எனக்கு நேரமும் கிடையாது. அப்படிக் கொடுத்திருந்தால் இன்றும் இந்த நூலகத்தில் புத்தகங்கள் அதிகமாக இருக்கும். எழுத்தாளர்கள் காந்தி கண்ணதாசன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, "கல்கி' ராஜேந்திரன், என்.சி.மோகன்தாஸ் இவர்களெல்லாம் புத்தகம் கொடுத்து உதவி புரிந்தவர்களில் முக்கியமானவர்கள். நூலகத் தந்தை என்றழைக்கப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன், எனது சேவையைப் பாராட்டி சிறந்த நூலகர் விருது வழங்கியுள்ளார்.

   உங்களுடைய வருமானம் என்ன?
   என்னுடைய திருமணத்தைக் கூட நூலக நண்பர்கள் தான் செய்து வைத்தார்கள். நூலகத்திற்கு வரும் சந்தா தொகை, நன்கொடை என்று எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். நூலகத்துக்காகவே எல்லாச் செலவையும் செய்வேன். தையல் தொழிலில் கிடைக்கும் வருமானத்தைக் குடும்பச் செலவுக்கு எடுத்துக் கொள்வேன். நான் செருப்பு கூட அணிவதில்லை. என் மனைவி எளிய வருமானத்தில் சிக்கனமாகச் செலவு செய்து குடும்பத்தை நடத்துவார். எங்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். என்னுடைய மூத்த மகன் நித்யானந்தத்திற்கு இந்த நூலகத்தின் மீது ஈடுபாடு அதிகம். இதைப் பெரிய அளவில் கொண்டு வந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
   உங்கள் சேவைக்காக விருது வழங்கப்பட்டுள்ளதா?
   1958-ஆம் ஆண்டு இந்த நூலகத்திற்கு வருகை தந்த எழுத்தாளர் சாண்டில்யன், "நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்ல அறிவு தேவை. அறிவை வளர்ப்பவை நல்ல நூல்கள். அவற்றைத் தேர்ந்தெடுத்து மக்களுக்கு உதவி செய்வது நாட்டுக்குச் சேவை செய்வதாகும். அத்தகைய சேவையில் இந்நூல் நிலையம் ஈடுபட்டிருப்பது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார். அது தான் நான் பெற்ற விருதாக நினைக்கிறேன்.
   வருங்காலங்களில் இந்த நூலகத்தை மேம்படுத்தும் எண்ணம் இல்லையா?
   இந்த நூலகத்திற்குச் சொந்த இடம் ஒன்று வாங்கி அதில் நூலகம் நடைபெற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது விரைவில் நிறைவேறும் என்று நினைக்கிறேன்.
   -வனராஜன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai