கைகள் இல்லாவிட்டால் என்ன? முன்னேற முடியும்!

தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் சாதிப்பதற்கு ஊனமெல்லாம் தடையே இல்லை என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறார் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி தமிழ் ஆசிரியர் பெ.வெங்கடேசன்.
கைகள் இல்லாவிட்டால் என்ன? முன்னேற முடியும்!

தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் சாதிப்பதற்கு ஊனமெல்லாம் தடையே இல்லை என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறார் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி தமிழ் ஆசிரியர் பெ.வெங்கடேசன். தன்னைப் போல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் வெளிச்சம் உண்டாக்கும் நோக்கில் பணியாற்றி வருகிறார் அவர்.

தருமபுரி ஒன்றியம், மூக்கனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட எம்.ஒட்டப்பட்டி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பெ.வெங்கடேசன்.

ஊனம் ஏதுமின்றி பிறந்த இவர், பத்தாவது வயதில் அறுந்து கிடந்த மின்கம்பியைத் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து இரு கைகளையும் இழந்தார். சிறு வயதிலேயே நீச்சல் கற்றிருந்த வெங்கடேசன் அவரது நண்பர்கள் அளித்த உந்துதல் காரணமாக, கைகளை இழந்த நிலையிலும் நீச்சல் பயிற்சி பெற்றார்.

மாவட்ட, மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபெறும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்றார். கடந்த 2011ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற 11வது தேசிய நீச்சல் போட்டியில் 50 மீட்டர் தொலைவு கொண்ட பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டார். அதில், ப்ரீஸ்டோக் பிரிவில் தங்கப் பதக்கமும், ப்ரீஸ்டைல், பேக் ஸ்டோக் பிரிவில் வெள்ளியும், பட்டர்பிளை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

கர்நாடக மாநிலம், பெல்காமில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள 15வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

ஆசிரியர் பணிக்கான படிப்பு இருப்பதால், மாற்றுத் திறனாளியான அவருக்கு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரிவில் மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைத்தது.

இரு கைகள் இல்லாத போதிலும், கால்களால் எழுதுவது, திருத்துவது உள்பட அனைத்து பணிகளையும் மற்றவரின் துணையின்றி அவரே செய்து வருகிறார்.

இதுதவிர, இரண்டு கி.மீ. தொலைவு கொண்ட தனது வீட்டுக்கு பள்ளியிலிருந்து சில நிமிட நேரங்களில் சைக்கிள் ஓட்டிச் சென்றும் விடுகிறார்.

உலக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் பங்கேற்க வேண்டும் என்ற இவரது கனவை ஈடேற்றும் வகையில் பாஸ்போர்ட் பெற மாவட்ட கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

இரு கைகள் இல்லாத போதும் கடினமாக உழைத்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு முன்னேறியுள்ள வெங்கடேசன், தன்னைப் போல இருக்கும் மாற்றுத் திறனாளிகளை சமூகத்தில் மற்றவர்கள் மதிக்கும் வகையில் வாழச் செய்யும் நோக்கில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com