பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சுய முன்னேற்றம் - 43: எந்த நிலையையும் எதிர்கொள்ளப் பழகு!

டேய் ஆதி... இன்னிக்கு என்ன வீட்டிலேயே இருக்கே? காலேஜுக்குக் கௌம்பல.. ஏன் உடம்பு சரியில்லயா?''

News image
Updated On :5 ஜூலை 2016, 5:38 pm IST

டேய் ஆதி... இன்னிக்கு என்ன வீட்டிலேயே இருக்கே? காலேஜுக்குக் கௌம்பல.. ஏன் உடம்பு சரியில்லயா?''

""இல்ல அம்மா... அதெல்லாம் சரியா இருக்கு... பைக் ரிப்பேர்... அதான் போகலை''

""ஏன்டா? இதுக்காகவா லீவு போடுவே? பஸ்ல போகலாமில்ல?''

""இல்ல.. பஸ்ல போகிறதெல்லாம் சரியா வராது.. எனக்குப் பழக்கமில்ல''

ஆம். மாறுகின்ற சூழலில் எப்படிச் செயல்பட வேண்டுமென்று பல இளைஞர்கள் அறிந்து கொள்வதில்லை. அன்று கல்லூரியில் முக்கியமான தேர்வு நடப்பதாக இருந்திருந்தால், பைக் ரிப்பேரைக் காரணம் காட்டி லீவு போட்டிருக்க முடியுமா? நிலைமைகள் சாதகமாக இல்லாத நேரங்களிலும் சரியாகச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வசதிகளின் பெருக்கத்தில் வாழ்க்கையின் அடிப்படைகளை மறந்துவிடக் கூடாது. மின்விசிறிகள், ஏ.ஸி. க்களின் அரவணைப்பில் உறங்குவது இனிமைதான். ஆனால் அவை இல்லாத இடங்களிலும் உறக்கத்தை இழக்காமல் இருக்கும் மனத் திண்மை வேண்டும். ஐந்து நட்சத்திர விடுதியில் உணவருந்திப் பழக்கப்பட்டிருந்தாலும், எளிமையான, தூய்மையான உணவை உண்பதிலும் விருப்பம் காட்ட வேண்டும்.

வாழ்க்கைப் பாடம்:

வசதிகள் வரும், போகும். அவை எப்படி அமைந்தாலும் வாழ்க்கையை வசதியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஜெராக்ஸ் மெஷின் வராத காலத்தில், கையால் எழுதித்தான் படி எடுத்துப் படித்தார்கள். மாணவர்களுக்கான நகலகங்கள் ஊரெங்கும் பரவிய பிறகு, துணைப்பாட நூல்களையும் உசாவு நூல்களையும் (Reference books) அப்படியே நகல் எடுக்கும் பழக்கத்திற்கு ஆளானார் மாணவர்கள். இதனால் மாணவச் சமுதாயத்திற்கு இரண்டு பின்னடைவுகள் ஏற்பட்டன. ஒன்று, கையால் எழுதும் பழக்கம் அழிந்து போகத் தொடங்கிவிட்டது. இரண்டு, குறிப்புகளை நகல் எடுத்து வைத்துக் கொண்டாலே படித்துவிட்டோம் என்ற போலி உணர்வை மாணவர்கள் பெற்றது. இன்றைய நிலைமை இன்னும் சரியத் தொடங்கி உள்ளது. கணினி மூலம் வெட்டி ஒட்டும் (copy and paste) திறம் கைவந்த பிறகு, பள்ளி மாணவர்கள் கூட, மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை அரைமணி நேரத்தில் அரங்கத்தில் படிக்கிறார்கள். ஆனால் அதன் ஆழ அகலங்களை அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்களா?

இதெல்லாம் சரி... ஒருநாள் மின்வெட்டு அல்லது பிற தடைகள் காரணமாகப் புதிய கருவிகளும் கணினிகளும் இயங்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள்? அத்தகு சாதகமில்லாச் சூழலைச் சமாளிக்க நாம் நம் இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோமா?

அண்மையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் ஒரு பிரபலமான கடைக்குச் சென்றிருந்தேன். அன்று காலை மின்சாரம் இல்லை. யாரும் காய்கறி வாங்க இயலவில்லை. காரணம், வாங்கிய பொருட்களுக்குக் கையால் எழுதிக் கூட்டிக் கணக்குப் போட்டு பில் தர பணிபுரிவோர் யாரும் தயாராக இல்லை. முழுதும் கணினி மயமாக்கப்பட்ட வங்கிகள் போன்ற அலுவலகங்களில் கரெண்ட் இல்லையென்றால் ரசீதுகளைக் கையால் எழுதித் தர யாருக்கும் ஆற்றல் இருப்பதாகத் தெரியவில்லை.

மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி அளிப்பது எத்துணை முக்கியமோ, அத்துணை முக்கியம், அவை எதுவும் இல்லாத சூழலில் எப்படிச் செயல்படுவது? என்பதைச் சொல்லிக் கொடுப்பதுவும்தான்.

கால்குலேட்டர்களில் கணக்குப் போடுவது சரி. ஆனால் வாய்ப்பாடு கற்றுக் கொண்டு நினைவில் வைப்பதில் உள்ள நன்மைகளையும் இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

1858- இல், ஆர்.எம். பாலண்டைன் என்ற ஸ்காட்லாந்து நாவலாசிரியர் எழுதிய பவழத் தீவு (coral island) புத்தகம் சிறுவர்களுக்கான அற்புதமான நூல். கப்பல் உடைந்து மூழ்கித் தனியாக ஒரு தீவில் கரை ஒதுங்கிய மூன்று சிறுவர்கள் எப்படி அந்த நிலைமையை எதிர்கொண்டு சமாளித்து மீள்கின்றனர் என்று சுவையாகச் சொல்லும் வீர சாகஸக் கதை. பள்ளி நாட்களில் படித்த கதை. ஆனால் சம்பவங்கள் கற்பனையல்ல. வேறொரு நாட்டில் நடந்தவை. எந்த நிலையிலும் தளராமல் போராடித் தங்களையும் பிறரையும் காத்துச் சாதனை புரிந்த அச்சிறார்களது வரலாறு போன்ற கதைகளையும், கட்டுரைகளையும் நம் இளைஞர்கள் படித்துப் பயன்பெற வேண்டும்.

மாற்று வழிகள்:

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போதே அதில் மாற்றங்கள் வருமென்றால், அவற்றை எதிர்கொள்ளக் கூடிய திறமை வேண்டும். அந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேவை.

என் வகுப்பில் ஒரு மாணவன், வகுப்புத் தேர்வோ அல்லது பொதுத் தேர்வோ, எந்தத் தேர்வு நடந்தாலும் பையில் நாலைந்து பேனாக்கள் கொண்டு வருவான்.

""ஏன்டா இத்தனை பேனாக்கள் எடுத்துக் கொண்டு வருகிறாய்?''

""சார் ஒரு பேனா எழுதவில்லையென்றால் இன்னொன்று இருக்கும். அதுவும் மோசமானால் இன்னொன்று. ஏன் சார் கொண்டுவரக் கூடாதா?''

""கொண்டு வரலாம். சரி நாலு பேனாக்களும் எழுதலைன்னா என்ன செய்வே?''

""சார்... அதுக்குத்தான் கையிலே ஒரு பென்ஸில் வச்சிருக்கேன்''

இன்றைய அறிவியல் வளர்ச்சி வேகத்தில், பல மணி நேரங்கள், செலவாகும் விஷயங்களையெல்லாம் சில வினாடிகளில் செய்து முடிக்க இயலுகின்றது. ஆய்வுத் துறைகளிலும், முதுகலை பட்டப்படிப்புகளுக்கான ஆய்வேடுகள் (Thesis submission) சமர்ப்பிப்பதிலும், இருந்த இடத்தில் இருந்தபடியே பல நூல்களைப் படிக்கவும், பார்க்கவும், பகிர்ந்து கொள்ளவும் கணினிகள் உதவுகின்றன. இதன் பயன் அலகில்லாதது. ஆனால் நூலகம் சென்று புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் குறிப்புகள் எழுதும் பழக்கத்தையும் இளைஞர்கள் கற்றுணர வேண்டும்.

உலகப் போர்களிலும், உலக விளையாட்டுப் போட்டிகளிலும், மாற்றுத் திட்டங்கள் (alternate plans) தயாரித்துக் கைவசம் வைத்திருப்பார்கள். ஓர் அணுகுமுறை தோற்றுவிட்டால் அல்லது பயனளிக்காது என்று தோன்றினால் மாற்றுத் திட்டங்களை அமல்படுத்தி விடுவர். இது வாழ்க்கைக்கும் பொருந்தும். எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றால், தொடர்ந்து அதற்கு மாற்று என்ன செய்ய வேண்டும் என்று தெளிய வேண்டும். அதுதான் வலிமை.

ஒரு பாதையில் முள்ளிருந்தால் வேறு பாதையைத் தேர்ந்தெடு. அங்கும் முள்ளிருந்தால் காலணியைப் போட்டுக்கொள். முன்னேற்றத்துக்கு முட்கள் தடையாக இருக்கக் கூடாது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.